மனித வாழ்வியலோடு ஒன்றிணைந்த பொங்கல் விழா | தினகரன் வாரமஞ்சரி

மனித வாழ்வியலோடு ஒன்றிணைந்த பொங்கல் விழா

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது முன்னோர் சொல்லி வைத்த ஒன்று. ஏனெனில் தமிழர்களது அனைத்து நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும், விழாக்களும் தை மாதம் முதலாம் திகதியுடனேயே ஆரம்பமாகின்றன.

இந்நிலையில் அந் நாளை தமிழர்கள் முக்கியமான நாளாக கொண்டாடி வருகின்றார்கள்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு.

என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப பூமியில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு மூலாதாரமான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் அந் நாளில் பொங்கல் பொங்கி கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில்  இப் பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களது வாழ்வியலுடன் இணைந்த ஓர் பண்டிகையாகும்.

இப் பண்டிகையூடாக வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது என்பதும், விருந்தோம்பல், ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உணவு ஆரோக்கியம், இணைந்து செயற்படுதல் போன்ற பல விடயங்கள் வருடத்தின் முதல் நாளிலேயே அனைவருக்கும் போதிக்கப்படுகிறது.

இந் நிலையில் தைப் பொங்கல் விழா ஏன் கொண்டாடப்படுகிறது, அது எப்படி எமது வாழ்வியலுடன் ஒன்றித்துள்ளது என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் பண்ணாகத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான அரிச்சந்திரன் முருகதாசன் பின்வருமாறு கூறுகின்றார்.

நன்றி மறவாமை

தைப் பொங்கல் விழாவானது ஆரம்ப காலங்களில் உழவர்களினாலேயே கொண்டாடப்பட்டு வந்தது. அதாவது எமது ஜீவனோபாய தொழிலாக விவசாயமே காணப்பட்டது. இவ்வுலகமே விவசாயி என்பவனை நம்பியே உள்ளது.

அதனால் தான் " உழவன் இன்றேல் இவ்வுலகம் இல்லை" என முன்னோர்கள் கூறிவைத்தனர். வள்ளுவர் கூட பத்து குறட்பாக்களில் உழவின் சிறப்பை கூறியுள்ளார்.

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்உழந்தும் உழவே தலை"

அதாவது ' உலகத்தவர்கள் பல தொழில்களை செய்பவர்களாக இருந்தாலும் அவ்வுலகம் ஏர்த் தொழில் செய்பவனை நம்பியே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவு தொழிலே சிறந்தது என உழவின் மகிமையை கூறுகிறார்.

இவ்வாறு உழவினை செய்வதற்கு பிரதான மூலாதாரமாக விளங்குவது சூரியன். உலகுகெல்லாம் சோறும் போடும் உழவு சிறக்க வேண்டிய நேரத்தில் மழையையும், வெட்பத்தையும் கொடுக்கும் அச் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே இப் பொங்கல் பண்டிகை கொண்டாப்பட்டது. இதனால் ஆரம்ப காலங்களில் உழவர்கள் மாத்திரமே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

இதனால் இதனை 'உழவர் விழா' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் உழவர் அல்லாதோரும் இப் பொங்கல் பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். அதாவது தமக்கெல்லாம் சோறு போடும் உழவனுக்கும், உழவுக்கும், உலகுக்கும் உயிர்கொடுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் உழவர் அல்லாதோரும் இதனை கொண்டாடத் தொடங்கினர்.

இப் பண்டிகையை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வெப்ப வலைய நாடுகளை பொறுத்த வரையில் விதைத்த நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகும் காலம் தை மாதம் ஆகும்.

தமிழ் மக்களின் வருட ஆரம்பம் தை மாதத்துடனேயே ஆரம்பமாகிறது. அதேபோன்று தை மாதத்துடனேயே எமது கொண்டாட்டங்கள், விழாக்கள், நிகழ்வுகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன. அதேநேரம் சாத்திர ரீதியாகவும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

ஆரோக்கியம்

இப் பண்டிகை ஊடாக எமது ஆரோக்கியம் முக்கியத்துவத்தப்படுகிறது. பொங்கல் செய்யப்படும் இடம் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்டு அவ்விடம் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பொங்கல் பொங்கப்படுகிறது. மாட்டுச் சாணம் மிகச் சிறந்த கிருமிநீக்கியாகும்.

அத்துடன் பொங்கல் செய்யப்படும் இடத்தில் சாம்பிராணி புகை போடப்படுவதும், மஞ்சள் நீர் தெளிப்பதும் அவ்விடத்தை சுத்தப்படுத்துவதற்கான முறைகள் என்பதுடன் இவை சிறந்த தொற்று நீக்கிகளாகும்.

இதேபோன்று பொங்கல் பொங்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களான சர்க்கரை, பச்சையரிசி, பயறு, பசும் பால் போன்ற உணவுகள் மனித உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுக்கின்றன. சக்கரையானது உணவு சமிபாடு அடைவதற்கு சிறந்தாகும். அதனால் தான் சபைகளில் பந்தி பரிமாறுவதற்கு முன்பாக சக்கரை பரிமாறுவது வழக்கமாக இருந்தது. பச்சையரிசி ஊட்டச் சத்து நிறைந்த உணவு பொருளாகும். பயறு, பசுப்பால் போன்றனவும் அவ்வகையானவேயாகும்.

விருந்தோம்பல்

பொங்கல தினத்தன்று பொங்கல் பொங்கப்படும் இடத்தில் போடப்படும் கோலமே இதற்கான முதற்படியை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது "ஓரறிவுள்ள உயிர்கள் தொடக்கம் ஆறறிவுள்ள உயிர்கள் வரை வயிராற உண்ண வேண்டுமென்பதே" அதன் தத்துவமாகும். அதனால்தான் போடப்படும் கோலம் மாவினால் போடப்படுகிறது. மாவினால் போடும்போது எறும்பு முதலான ஊர்வன தமக்கான உணவாக அதனை எடுத்துக்கொள்ளும்.

அதேபோன்று பொங்கல் பொங்கியவர்கள் அன்றைய தினம் பொங்கல பொங்காதவர்களுக்கு கொடுத்து உணணும் வழக்கம் உள்ளது. இதனூடாக தமிழர் தம் முக்கிய பணபுகளில் ஒன்றான விருந்தோம்பல் வலியுறுத்தப்படுகிறது.

ஒற்றுமை

பொங்கல் விழா கொண்டாடுவதனூடாக அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் வீட்டில் ஓர் காரியத்தை அனைவரும் தம்மிடையே பகிர்ந்து செய்யவேண்டியதன் அவசியத்தையும் கூறுகிறது. பொங்கல் பொங்கும் போது பொங்கல் பானையை வைப்பது குடும்ப தலைவனது பொறுப்பாகும். அதில் பொங்கல் அரிசியை போடுவது ஆண்களின் பொறுப்பாகவும் தொடர்ந்து பொங்கலை நடத்திச் செல்வது குடும்பத் தலைவியின் பொறுப்பாகவும் அதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதும் அனைவரும் இணைந்து ஓர் காரியத்தை செய்யவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு பொங்கல் பண்டிகைக்கும் எமது அன்றாட வாழ்வியலுக்குமிடையில் பல்வேறுபட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளது. அவை எமது வாழ்வியலோடு ஒன்றித்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எமது வாழ்வியலிலும் எமது ஆரோக்கியத்தையும் பாதிப்பதாகவுள்ளது. அதனை இப் பொங்கல் பண்டிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினை அடிப்படையாக கொண்டே விளஙகிக்கொள்ள முடியும்.

ஆரம்ப காலத்தில் மன்னர்கள் எமது சுதேச விவசாயத்தை ஊக்குவிப்பதில் பெரிதும் பங்களிப்பு செய்தார்கள். குறிப்பாக விவசாயத்திற்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பாரிய குளங்களையும் கால்வாய்களையும் நீர்த்தேக்கங்களையும் அமைத்தனர். "வானிலிருந்து விழும் ஒருதுளி நீரையேனும் பயன்படுத்தாது கடலில் கலக்க விடமாட்டேன்" என்ற கொள்கையில் பராக்கிரமபாகு பராக்கிரம சமுத்திரத்தை அமைத்தான் என வரலாறு கூறுகிறது.

இவ்வாறு தன்னிறைவாக காணப்பட்ட எமது பாரம்பரிய விவசாயம் இலங்கை மீதான ஐரோப்பியரின் வருகையுடன் மாற்றமடைந்தது. அது எமது பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவும் எம்மக்களிடையே காணப்பட்ட சில வறட்டுக் கௌரவங்களாலும் எமது பாரம்பரிய நெல் விவசாயம் அழிவடையத் தொடங்கியது. இதன் விளைவு இன்று எமக்குத் தேவையான நெல் அரிசியைக்கூட உற்பத்தி செய்யமுடியாது இன்னொரு நாட்டை நம்பியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் எமது நாட்டில் உற்பத்தியாகும் பெருந்தோட்ட பயிர்களின் விலையையும் எம்மால் நிர்ணயிக்க முடியாத தன்மையும் காணப்படுகிறது. ஆகவே வாங்கும் பொருளின் விலையையும் விற்கும் பொருளின் விலையையும் என்றுமே நாம் தீர்மானிக்க முடியாதவர்களாக உள்ளோம்.

இன்று சந்தையில் அரிசியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண பொருட்களை விடவும் அரிசியின் விலை அதிகமாகவுள்ளது. எமது பாரம்பரிய விவசாய முறைகளையும் நெல்லினங்களையும் புறந்தள்ளி இறக்குமதி உரங்களையும் மரபணு நெல்லினங்களையும் பயிரிட்டதன் விளைவாக எமது பாரம்பரிய நெல்லினங்கள் அழிவடைந்ததுமட்டுமன்றி பருவம் தவறிய மழை காலநிலை மாற்றங்கள் என சூழலும் மாறிவிட்டது.

ஆரம்ப காலங்களில் சொந்த வயலில் விளைந்த நெல்லினை அறுவடைசெய்து பொங்கல் தினத்தன்று பொங்கல் பொங்குவதே வழமை. ஆனால் இன்று தை மாதம் கடந்து மாசி பங்குனியிலேயே அறுவடைசெய்யப்படுகிறது.

அது மாத்திரமின்றி வயல் நிலங்களை மண்ணிட்டு நிரப்பி அதன் மேல் கட்டடங்களை அமைத்து வருகிறோம். இதனால் வயல் நிலங்களின் அளவும் வெகுவாக குறைந்து வருகிறது.

இதேபோன்று நாகரிகம் என்ற பெயரில் எமது ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டோம். ஆரம்ப காலங்களில் மண் பானைகளில் பொங்கிவந்த நாம் இன்று இலகு என்பதற்காக எமது ஆரோக்கியத்தை மறந்து அலுமினிய ஈயப்பாத்திரங்களில்பொங்கல் பொங்குவதை நாகரிகமாக்கிக்கொண்டோம். தூய பசும்பாலை பொங்கலுக்குப் பயன்படுத்தியது மாறி பக்கெட் பால்களை பயன்படுத்துவதை வழக்கப்படுத்திக்கொண்டோம்.

மாவிலை வாழையிலை பயன்படுத்தியது அழிந்து பிளாஸ்ரிக்கிலாலான மாவிலை, வாழையிலை மாதிரிகளையும் பயன்படுத்துவதை நவீனம் என்கிறோம். எம்மிடையே குளிர்சாதனப்பெட்டி எப்போது அறிமுகமானதோ அன்று முதலே எம்மிடமிருந்த பகிர்ந்துண்ணல் அல்லது மற்றவருக்கு கொடுத்துண்ணல் என்னும் பண்பு அழிந்துபோய்விட்டது.

இவ்வாறாக நாம் நாகரிகம் என்ற பெயரில் எமது சுயத்தை தொலைத்து நாகரிக மோகத்துக்கு எமது தனித்துவத்தை அடமானம் வைத்துவிட்டோம். எமது பண்பாடுகள் எமது முறைகள் தான் சிறந்ததென்று மேலைத்தேயர்கள் இங்குவர நாமோ அவர்களுடையதைத் தேடி ஓடுகிறோம்.

எமது முன்னோர்கள் கூறிச்சென்ற அனைத்து விடயங்களிலுமே மனித வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான பல விடயங்கள் உள்ளன. என்பதை விஞ்ஞான ஆய்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன.

வேப்பமரத்தைச் சுற்றினால் புத்திரபாக்கியம் என்று சமய ரீதியாக அன்று சொல்லப்பட்டது.  வேப்பமரத்தின் காற்றினை சுவாசிப்பது உடலுக்கு மிகச் சிறந்த ஆரோக்கியமென விஞ்ஞானம் சொல்கிறது.

"நீறில்லா நெற்றி பாழ்" என்று ஔவ்வை சொன்னார். மனித உடலில் நரம்பு மண்டல குவியம் நெற்றிப் பொட்டிலேயே உள்ளது. எனவே அவ்விடம் எப்போதும் குளிர்மையாக இருக்கவேண்டும். அதற்காகத் தான் நெற்றிப் பொட்டில் திருநீறிட்டு சந்தணம் வைக்கவேண்டும் என அன்று சமய ரீதியாகக் கூறப்பட்டது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாதென்றும் கோயில் கோபுரத்தைவிட உயர்ந்ததாக கட்டடங்கள் அமைக்கக் கூடாதென்றும் அன்று கூறப்பட்டதற்கு காரணம் உண்டு. கோயில் கலசத்தில் உள்ள தானியங்கள் இடியைத் தாங்கக்கூடிய சக்தி கொண்டவையாக இருப்பதாக இன்றைய ஆய்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன. அத்தகைய தானியங்கள் பன்னிரண்டு வருடங்களில் காலாவதியாகிவிடும் என்பதாலேயே பன்னிரண்டு வருடங்களுக்கொருமுறை கட்டாயமாக ஆலயங்கள் கும்பாகிஷேகம் செய்யப்பட்டு அக்கலசங்கள் மாற்றப்படவேண்டுமென அன்று கூறப்பட்டது.

அதேபோன்று ஆலயங்களுக்கு செல்லும் ஆண்கள் மேலங்கி அணியக்கூடாதென்பதும் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியவேண்டும் என்பதும் அர்த்தம் பொதிந்தது. ஆலயங்களிலுள்ள லிங்கங்களிலிருந்து மனித உடலுக்குத் தேவையான கதிர்கள் கடத்தப்படுகிறது. எனவே ஆண்கள் மேலங்கியின்றி செல்லும் போது அக்கதிர்கள் நேரடியாக உடலை சென்றடையும். ஆனால் பெண்களுக்கு அது சாத்தியமன்று. அதனால்தான் ஆபரணங்களை அணியவேண்டுமென கூறப்பட்டது. தங்க ஆபரணங்களுக்கு அக்கதிர்களை ஈர்க்கும் சக்தியுள்ளதென்று இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறு அன்றைய காலங்களில் மனிதர்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு அத்தியாவசியமானவற்றை சமயம் சார்ந்து எம்முன்னோர்கள் வலியுறுத்திக்கூறியுள்ளார்கள். ஆனால் நாம் அதன் தார்ப்பரியம் புரியாது மூடநம்பிக்கைகள் என ஒதுக்கிவைத்துவிட்டோம்.

தை பிறந்து பொங்கலைக் கொண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு தான் நாம் முன்னேறிச் சென்றாலும் எமது சுவடுகளையும் ஆதார கட்டமைப்புகளையும் ஒரு போதும் மறந்துவிடலாகாது. ஒவ்வொரு தடவை நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் போதும் கீழடி ஆய்வுகள் எடுத்து சொல்லும் எமது தொன்மைகளை நாம் நினைவுகூற வேண்டும் என்று கூறி முடித்தார் அரிச்சந்திரன்.

ரி.விரூஷன்

Comments