முடிவுக்கு வரத் தொடங்கிய ஊவா - வெல்லஸ்ஸ கிளர்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

முடிவுக்கு வரத் தொடங்கிய ஊவா - வெல்லஸ்ஸ கிளர்ச்சி

ஸ்ரீ இராஜசிங்கன் என்ற பெயருடன் மன்னனாக வீற்றிருக்கும் துரைசாமி நாயக்கர் ஒரு போலி வேடதாரியென்னும் உண்மை கசிய தொடங்கியதும் பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வு வளர தொடங்கியது. அது மட்டுமன்றி பெருந்தொகையான சுதேசிகள் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு ஆங்கிலேய அரசுக்கு சார்பான போக்கினை மேற்கொள்ளவும் தலைப்பட்டனர். இதற்கிடையில் ஆங்கிலேயரின் இதயங்களில் இடம் பெறுவதன் மூலம் வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் பெறுபவர்களாகவும், அதற்காக உண்மையான தகவல்களை உடனுக்குடன் ஆங்கிலேய அதிகாரிகளின் செவிகளில் ஊதி வைப்பதை தமது முக்கிய பணியாகவும் அதை அரச விசுவாசமாகவும் கருதி செயல்பட்டனர். 

தமது ஆட்சி அதிகாரங்களைக் கைவிட்டு கண்டியை விட்டு வெளியேறுவதே உசிதமென ஒரு சந்தர்ப்பத்தில் கருதிய ஆங்கிலேயர் அவ்வெண்ணத்தைக் கைவிட்டு தமது ஆட்சியை மேலும் நிலை நிறுத்துவதில் கரிசனை கொள்ளலாயினர். 

சிங்களவர்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமையின்மையும் சுயலாபம் கருதி எதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், காட்டிக் கொடுப்பதில் வல்லவர்களாகக் காணப்படுவதையும் நன்குணர்ந்த வெள்ளையர் காற்று தம்பக்கம் வீசத் தொடங்கியமையை சாதகமாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

அரச சார்பு போக்கினைக் கடைப்பிடிக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இது ஆங்கிலேயருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கிளர்ச்சி நிகழ்ந்து வரும் பிரதேசங்களில் கலவரத்திற்குத் தலைமை தாங்குபவர்களை அப்பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அவர்களை பிற பகுதிகளின் குடியேறச் செய்வதன் மூலம் அவர்களின் செல்வாக்கை இல்லாதொழித்து செல்லாக்காசாக்கும் உத்திகளை பிரித்தானியர் கடைப்பிடிக்கலாயினர். கண்டி பிராந்தியமெங்கும் ஆங்கிலேய இராணுவம் தமது சிங்கள கையாட்கள் சகிதம் முற்றுகையிட்டு தாக்குதல்களை முன்னெடுத்தது.  

இச்சந்தர்ப்பத்தில் வந்துராகல விகாரை பற்றிய தகவல்களை இரு சிங்கள ஒற்றர்கள் வெள்ளையரிடம் தெரிவித்தனர். இவர்களது தகவல்களின்படி மாவத்தகம நிலமே தலைமையில் தாக்குதலுக்கு தயார் நிலையில் போராளிகள் குழுவொன்று வந்துராகல விகாரையில் நிலை கொண்டிருப்பது தெரியவந்தது. எனவே 1818ஜுன் மாதம் 16ம் திகதி லெப்டினண்ட் மார்பி (Maarffi) தலைமையிலான குழுவொன்று வந்துராகல விகாரை வளாகத்தை முற்றுகையிட்டது.  

ஆங்கிலேய இராணுவத்தின் வருகையறிந்த போராளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்ட போதும் தலைமை தாங்கிய மாவத்தகம நிலமே கைது செய்யப்பட்டான். இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான் மாவத்தகம நிலமே. ஆங்கிலேயரின் இராணுவ நீதிமன்றம் நிலமேயை குற்றவாளியாகக் கண்டு மரணதண்டனை விதித்தது. 

நாடளாவிய ரீதியில் சுதந்திர போராட்டத்தை முறியடிக்கும் ஆங்கிலேயரின் நடவடிக்கையின் மற்றுமோர் அம்சமாக லெப்டினண்ட் டொபீன் (Dobeen) தலைமையிலான குழு நான்கு கோறலை (கேகாலை)யிலும் மூன்று கோறளை (ரூவான்வெல்ல)யிலும் நுழைந்தது. டொபீன் தனது அணியுடன் மொற்ட்டுகந்த என்னுமிடத்தைக் கடந்து உடுகம வரை வந்து சேர்ந்தான். போராளிகளின் குழுவொன்று அங்கு தரித்திருப்பதாக அறிந்து அவன் அங்கு வந்திருந்தான். எனினும் கெப்பெட்டிப் பொலையின் வீரர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தனர். எனினும் அவர்கள் நிலை கொண்டிருந்த இடத்தில் அபூர்வமான கித்துல் மரக் குற்றியொன்றை ஆச்சரியமாகப் பார்த்தனர் ஆங்கிலேயர். 

கித்துள் மரக்குற்றியின் நடுப்பகுதியில் நிறைந்து காணப்படும் ‘சோறு’ என்றழைக்கப்படும் பதார்த்தம் (யானைகளினதும், மனிதர்களினதும் விருப்புக்குரிய உணவு) நீக்கப்பட்டு குழாய் அமைப்பினைக் கொண்ட அம் மரக்குற்றிக்குள் நானூறுக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளும், வெடி மருந்துகளும் நிரப்பப்பட்டிருந்தன. போராளிகளினால் தயாரிக்கப்பட்ட இக் கித்துள் மரக் குற்றி இடத்துக்கு இடம் கொண்டு செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 

மேலும் தகவல்களைச் சேகரித்த லெப்டினண்ட் டொபீன் இப்போராளி குழுவை நேரடியாக வழிநடத்தியிருப்பது கெப்பெட்டிப் பொல என அறிந்துகொண்டான். கெப்பெட்டிப்பொல தற்போது ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து பின்வாங்கிய போதும் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டு ஊவாவின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அங்கு சென்று கொண்டிருப்பதாகவும் மக்களிடமிருந்து அறிந்து கொண்டான் டொபீன். இதனை சகல இராணுவ முகாம்களுக்கும் அறிவிக்கவும் செய்தான் அவன். 

உடனடியாக லெப்டினண்ட் வில்கின்சன் ஊவாவை நோக்கி படையணியொன்றை வழிநடாத்திச் செல்லலானான். இது பற்றி பசறைக்கும், பதுளைக்கும் தகவல்களை அனுப்பியதோடு அப்பிரதேசங்களுக்கும் இரு படையணிகளை அனுப்பிவைத்தான் பசறைக்குச் சென்று கொண்டிருந்த ஆங்கிலேய படையணி எவ்வித இடையூறுகளுமின்றி பசறையை நெருங்கியது. அங்கு போராளிகள் தங்கியிருந்த இடத்தையறிந்து அவ்விடம் முற்றுகையிடப்பட்டது. எனினும் பதுளையை நோக்கிச் சென்ற படையணி வழியில் சுதந்திர போராளிகளின் கடும் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. இக்கடுந்தாக்குதல் காரணமாக இரண்டு ஆங்கிலேய இராணுவ வீரர்கள் வழியில் மரணமடைந்தனர். காயமுற்றோரையும் சுமந்தவாறு எஞ்சிய வீரர்கள் ஒருவாறு பதுளையை அடைந்தனர். 

கண்டிக்கு கொண்டுவரப்பட்ட சிங்களச் சிறைக்கைதிகள் வழக்கு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டனர். ஆளுநரின் அனுமதியின் பிரகாரமே நீதிமன்ற தீர்ப்புகள் அமைந்தன. ஹக்மனை தென்வத்தைரால மற்றும் குனம்மடுவ லேக்கம் ஆகிய இருவரும் சிறை பிடிக்கப்பட்டனர். 

 01. 1818மே மாதம் 09ம் திகதியும் 10ம் திகதியும் தும்பறையில்; நடைமுறையில் இருக்கும் சட்டபூர்வமான அரசுக்கு எதிராக கிளர்ச்சி புரிந்தமை. 

02. மேற்கண்ட நடவடிக்கைக்காக ஆயுதங்கள் சேகரித்தலும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டமையும்.  

03. அத்தினங்களில் நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக அங்கு அனுப்பபட்ட அதி உத்தம இங்கிலாந்து மன்னரின் இராணுவ வீரர்களை தாக்கியமை. 

04. கிளர்ச்சியாளர்களைக் கைது செய்வதற்கு இடமளிக்காமை. 

மேற்கண்ட நான்கு குற்றச்சாட்டுகளும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சுமத்தப் பட்டவையாகும். 

விசாரணை மேற்கொண்ட இராணுவ நீதிமன்றம் இருவரும் குற்றவாளிகளென தீர்மானித்து மரண தண்டனை விதித்தது. இங்கிலாந்து மன்னரின் இராணுவத்திற்கு கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரம் கொண்ட ஆளுநர் அவர்களினால் அவர் விரும்பும் ஒரு நாளில் குறிப்பிடபட்ட நேரத்தில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுவார்களெனவும் அத் தீர்ப்பு கூறியது.  

சிலவேளைகளில் இராணுவ நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பும் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்ததால் குணம்மடுவ லேக்கம் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆயுட்காலச் சிறைத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டான். அவனது தண்டனை வெளிநாட்டில் கழிக்கப்படவேணடுமென கூறப்பட்டிருந்ததால் அவன் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு மொரிஷியஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். இம்மன்னிப்பு தெனவத்த ராலவுக்குக் கிட்டவில்லை. அவனை தூக்கிடும் உத்தரவு தும்பறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரியாக பதிவியிலிருந்த மேஜர் கென்னிடம் ஒப்படைக்கப்பட்டது.  

பின்னர் மேலும் சில சிறைக்கைதிகள் வழக்கு விசாரணைக்கு முகம் கொடுத்தனர். புதிய அரசனுக்கு ஆதரவாக இருந்தமையினால் கைது செய்யப்பட்ட ஈரியகம படிக்கார லேக்கம் மீது நாடு கடத்தப்படும் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஆங்கிலேய அரச விசுவாசியாக இருந்த ஊடுநுவர கஹலவத்த கேறாளையின் வீட்டை தீயிட்டு கொளுத்திய குற்றத்திற்காகவும் டிங்கிரி அப்புவின் சிரம் கொய்தமைக்காகவும் டிங்கிரி அப்புவின் சிரத்தை வெட்டிய அதே நேரத்தில் அதே இடத்தில் சிரச்சேதம் மேற்கொள்ளவேண்டுமென ஈரியகம களுபண்டா என்பவனுக்கு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இத்தண்டனை 31ம் திகதி நிறைவேற்றப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. பகிரங்கமான வயல் களத்துமேட்டில் டிங்கிரி அப்பு அனுபவித்த அனைத்து சித்திர வகைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சிரச்சேதம் நிறைவேற்றப்பட விருந்தது. ஆனால் ஈரியகம் களுபண்டா ஆங்கிலேயரின் சித்திர வதைகளுக்கும் சிரச்சேதத்திற்கும் இடமளிக்கப்போவதில்லையென சங்கற்பம் பூண்டான். 30ம் திகதி இரவு சிறைக்குள்ளேயே நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டான் களுபண்டா. 

கைதி தற்கொலை செய்து கொண்ட போதும் வெள்ளையர் விடவில்லை. அவனது உயிரற்ற உடலை குறிப்பிட்ட நேரத்தில் சித்திரவதைகளுக்குள்ளாக்கி சிரச்சேதம் செய்து அத் தண்டனையை முறைப்படி நிறைவேற்றினர். புரட்சித் தலைவன் கெப்பெட்டிப்பொலையின் போராளிகள் தமது போராட்டங்களிலிருந்து பின்வாங்குவதற்கு வெடி மருந்து தட்டுப்பாடும் ஒரு காரணமாகியது. இது பற்றி ஆளுநர் ரெபர்ட் பிரவுன்றிக் பின்வருமாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தான். 

‘எமது இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக சமாளிக்க முடியாத நிலையில் கெப்பெட்டிப்பொல தனது முகாமிலிருந்து தப்பியோடிவிட்டான். எனினும் கண்டித் தலைவர்கள் பலர் இன்னும் அவனது அணியில் இணைந்துள்ளனர்.  

ஹேவாஹெட்ட, கொத்மலை, வலப்பனை, ஊவா பகுதிகளிலிருந்து வந்திருக்கும் சாதாரண மக்கள் பலர் இத்தலைவர்களுடன் இணைந்துள்ளனர். எமது இராணுவம் தற்போது இக்கிளர்ச்சித் தலைவர்களைத் தேடிச் சென்றுள்ளது. 

தொளஸ்பாகையின் மேற்புறம் மகாவலி கங்கையைக் கடந்து கொத்மலை நோக்கி கிளர்ச்சிக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. இப்போதும் 100ஆயுதம் தரிந்த வீரர்கள் கெப்பெட்டிப்பொலையுடன் உள்ளனர். ஆயுதம் தரியாதவர்களும் அதற்குச் சமமான எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகின்றது. கெப்பெட்டிப்பொல மற்றும் அவனது உதவியாளர்களைக் கைதுசெய்வதற்கு எமது இராணுவம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.’ என்று தெரிவிக்கும் தனது அறிக்கையை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்த பிரவுன்றிக், இயன்றளவு கிளர்ச்சித் தலைவர்களைக் கைது செய்து அவர்கள் மூலமாக நாடளாவிய கிளர்ச்சி நடவடிக்கைகளைத் தடுப்பதெனவும் திட்டமிட்டான்.  

1817செப்டம்பர் மாதம் முதல் கண்டி இராசதானி முழுதும் யுத்தகளமாகவே விளங்கியது. இதன் காரணமாக சிங்களவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், காணி நிலங்கள், வீடுகளுக்கு பெரும்சேதங்கள் ஏற்பட்டன. எனினும் இன்னல்களுக்கு மத்தியிலும் தமது சுதந்திர போராட்டம் வெற்றியளிக்குமென்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் காணப்பட்டது. ஆனால் அவர்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாக அமைந்தது.

படிப்படியாக சுதந்திர போராட்டம் வலுவிழந்து கொண்டிருந்தது. வெளிவந்து கொண்டிருந்த தகவல்கள் பின்வாங்குதல் பற்றிய செய்திகளாகவே இருந்தன. மக்களின்மனோதிடமும் எதிர்பார்ப்பும் மங்கிப் போகத் தொடங்கியது. இதற்கப்புறமும் காடுகளில் மறைந்திருப்பதால் எப் பலனும் கிட்டப் போவதில்லையென அவர்கள் உணரலாயினர். வயிற்றுப் பசியும், பீதியும், சந்தேகமும் மக்களை அலைக்கழித்தன. இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதே ஒரே வழி என சிந்திக்கத் தொடங்கினர்.  

1818ம் ஆண்டு நடுப்பகுதியில் ஒளிந்த வாழ்ந்து கிராமவாசிகள் தாம் வாழ்ந்த பிரதேசங்களை நாடி படையெடுக்கத் தொடங்கினர். (தொடரும்)

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(கண்டிச் சுதந்திர போராட்டங்கள்)
சி.கே. முருகேசு

Comments