அமெரிக்க - ஈரான் மோதல்; இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க - ஈரான் மோதல்; இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல்கள் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றும் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் வலுசத்தி இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.  

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றமாக சூழல் தொடர்ந்து காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

உலகளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் மசகு எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி ஈரானின் கடல் மார்க்கமாகவே கொண்டுசெல்லப்படுகிறது. இதன் காரணமாக மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கக் கூடுமென செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விலையும் ஓரளவு அதிகரித்திருந்தன.  

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

எரிபொருள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விலையும் அதிகரிக்கப்படாது. அத்துடன், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமுலில் இருந்த எரிபொருள் விலைச் சூத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படாது. உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 65.92 அமெரிக்க டொலராக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.    

Comments