தலைமைப் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு ரணிலுக்கு கடும் அழுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

தலைமைப் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு ரணிலுக்கு கடும் அழுத்தம்

ஐக்கிய தேசிய கட்சித் தலைமைப் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அக்கட்சியின் உயர்மட்டத்தை சேர்ந்த பலரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இந்த வாரத்துக்குள் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கத் தவறினால் தங்களது அடுத்தகட்ட நகர்வு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனச் சஜித்தரப்பு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் போது தீர்வு எட்டப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் அது குழப்பத்திலேயே முடிந்தது. ரணில்தான் தொடர்ந்தும் தலைமைப்பதவியில் இருக்க வேண்டுமென வலியுறுத்திய அகில விராஜ் காரியவசம், ஆசூ மாரசிங்க, பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க, வஜிர அபேவர்தன உள்ளிட்டோர் கடந்த கட்சி மாநாட்டின்போது 2024ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே தலைமைப்பதவியில் இருப்பதற்கு ஏகமனதான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.  

அதேவேளை, சஜித் பிரேமதாஸ தரப்பைச் சேர்ந்த ரஞ்சித் மத்தும பண்டார, அஜித் பி.பெரேரா, எஸ்.எம்.மரிக்கார், தலதா அத்து கோரள, சந்திராணி பண்டார, கபீர் ஹாஹிம் மலிக் சமரவிக்கிரம போன்றோர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 26வருடங்களாக தலைமைப் பதவியில் தொடர்கிறார்.

ஆனால், கட்சி பலம் கொண்டதாக மாற்றப்படவில்லை. எனச் சுட்டிக்காட்டியதோடு ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் பதவி விலக வேண்டுமெனக் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். 

இதன் காரணமாக அன்றைய கூட்டம் முடிவெடுக்கப்படாத நிலையில், குழப்பத்தில் முடிந்தது. இந்த வார முற்பகுதியில் தான் வெளிநாடு செல்ல விரும்புவதால், இரண்டொரு தினங்களில் நாடு திரும்பியதும் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடி தீர்க்கமான முடிவை எடுக்கலாமென இங்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். ஆனால், அதற்கு சஜித் தரப்பினர் இணங்க மறுத்து. ரணிலை பதவி விலகுமாறு கோரி கூச்சலிட்டுள்ளனர். 

தற்போது சஜித் பிரேமதாஸ தரப்பினர் பெரும் அதிருப்தி நிலையில் காணப்படுகின்றனர். அடுத்த கட்ட நகர்வு குறித்து சஜித் அணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவிருக்கின்றனர். அடுத்த இரண்டொரு தினங்களுக்கிடையில் தாங்கள் எடுக்கும் மாற்றுத்தீர்வு மக்களுக்கு அறிவிக்கப்படவிருப்பதாக சஜித் அணியின் முக்கியஸ்தர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம் 

Comments