பல்கலைக்குத் தகுதிபெற்ற அனைவருக்கும் உயர் கல்வியை தொடர 60 நாட்களில் வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

பல்கலைக்குத் தகுதிபெற்ற அனைவருக்கும் உயர் கல்வியை தொடர 60 நாட்களில் வாய்ப்பு

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளவர்களுக்கும் க.பொ.த உயர்தரம் பயின்ற அனைவருக்கும் உயர் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் எதிர்வரும் 60 நாட்களுக்குள் ஏற்படுத்திக்கொடுக்குமெனத் தகவல் தொலைத்தொடர்பு, தொழில் நுட்பம், புத்தாக்கம், உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக மாணவர்களை அனுப்பும் நிறுவனங்கள் விரைவில் ஒழுங்குப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாக தகுதிபெற்றுள்ள மற்றும் உயர்தரம் பயின்ற அனைவருக்கும் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் விரிவுப்படுத்தப்படும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார். அதன் பிரகாரம் புதிய அரசாங்கம் உயர்கல்வி தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. 

அதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள், விரிவுயாளர்களென துறைசார் நிபுணர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னமும் 60 நாட்களுக்குப் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குத் தகுதிபெற்ற அனைவருக்கும் உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கும். அதற்கான விசேட வேலைத்திட்டத்தையே தயாரித்து வருகின்றோம். இனிவரும் காலங்கில் மாணவர்கள்மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம், தாக்குதல்கள் அல்லது ஒடுக்குமுறைகள் இடம்பெறா. 

உயர்கல்விக்காக மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் செயன்முறையொன்று எதிர்காலத்தில் வகுக்கப்படவுள்ளது. 

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் பாரிய கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். உயர்கல்விக்காக அஸர்பைஜானுக்குச் சென்ற மூன்று மாணவிகள் உயிரிழந்துள்ளனர். ஆகவே, வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. உயிரிழந்த மாணவிகள் மூவரையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான சம்பவங்களைக் குறைக்க இலங்கையில் உயர்கல்வி விரிவுபடுத்தப்பட வேண்டும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்நாட்டில் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவ வேண்டியதன் அவசியம் உள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் பல்கலைக்கழகங்களில் பகிடி வதைகளுக்கு அனுமதியளிக்கப்படாது. அச்சம், பயம், சந்தேகமின்றி அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழத்தில் கல்வியைத் தொடர வேண்டும். ‘ஒருநாடு ஒரு சட்டம்’ என்பதே எமது கொள்கையாகும். அது சகலருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பகிடிவதை தொடர்பில் பொலிஸார் பின்பற்றும் சட்டங்கள் அவ்வாறு தொடர்ந்து பின்பற்றப்படும். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக தாக்குதல்களுக்கு உள்ளான மாணவர்களை வைத்தியசாலைக்குச் சென்று நான் பார்வையிட்டேன். இதுவரை 2,000 இற்கும் அதிகமான மாணவர்கள் பகிடி வதை காரணமாக பல்கலைக்கழக கல்வியை விட்டு இடைவிலகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments