புத்திஜீவிகள் வெளியேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

புத்திஜீவிகள் வெளியேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்

நாட்டின் துரித அபிவிருத்திக்காக புத்திஜீவிகளின் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால், இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (10) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

1,282 பட்டதாரிகளுக்கான பட்டங்கள் இதன்போது வழங்கப்பட்டன. ஒரு கலாநிதி பட்டம் உட்பட 224 பட்டப் பின்படிப்பு மற்றும் முதுமாணி பட்டங்களுடன் 1,057 பேர் தமது முதலாவது பட்டத்தை பெற்றுக்கொண்டனர். 

2019 ஆம் ஆண்டு விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜனாதிபதியினால் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.  இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரண்டாம் நிலை கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் உயர் தரம்வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமானால் நாட்டிலிருந்து மூளைசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும் என்பதுடன் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்களவு நாட்டை விட்டும் வெளிச்செல்வதையும் குறைப்பதற்கும் உதவும். 

தொழிற் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளின் தரத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். 

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்பள்ளிக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரை கல்வித் துறையில் தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு திட்டமிட்டவகையில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்கு ஒத்துழைக்குமாறு இத்துறையில் உள்ள அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். 

அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் கொத்தலாவல பல்கலைகழகத்தின் வேந்தர் தயா சந்தகிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments