மஹாபொல நிதியம் ஒவ்வொரு மாதமும் 15இல் வழங்கப்படும் | தினகரன் வாரமஞ்சரி

மஹாபொல நிதியம் ஒவ்வொரு மாதமும் 15இல் வழங்கப்படும்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அத்துடன், மஹாபொல புலமைப் பரிசிலுக்கான நிதியை அதிகரித்துக்கொள்ளும் சில உபாய மார்க்கங்களையும் அரசாங்கம் வகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் நிலுவைப் பணம் எதிர்வரும் வாரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இனிவரும் காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாகவந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டது.    மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் தொகையாக தற்போது 5ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. அதனை 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்;. மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப்பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கின்றது. 

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல நிதியத்தில் 10.5 மில்லியன் ரூபா நிதி இருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் 2 பில்லியன் ரூபா நட்டம் இழக்கப்பட்டது.

நட்ட நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும்.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். மஹாபொல நிதியத்தை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.   

புதிய லொத்தர் சீட்டொன்றை ஆரம்பித்தல், மஹாபொல புலமைப்பரிசிலில் நன்மை பெற்று உலகளாவியில ரீதியில் பரந்துவாழும் பொருளாதார மட்டத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களிடம் நிதியை சேகரித்தல், நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் நிதி சேகரித்தல் உப்பட பல்வேறு மூலோபாயங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நமது நிருபர்

Comments