ரஞ்சனின் ஒலி நாடாக்களை செவிமடுக்க 10 பொலிஸ் குழு | தினகரன் வாரமஞ்சரி

ரஞ்சனின் ஒலி நாடாக்களை செவிமடுக்க 10 பொலிஸ் குழு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கடந்த காலச் செயற்பாடுகள் ஒலி நாடாக்கள் விவகாரம் உள்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது நடவடிக்கைகளால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட பலரும் சிக்கி விழிபிதுங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.  

அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி கூட அபகீர்த்திக்குள் தள்ளப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்து  இருபத்தோராயிரம் ஒலி நாடாக்களில் பெரும்பாலானவை சில தனியார் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானமை குறித்தும் பரவலாகவே பேசப்பட்டு வருகின்றது. ரஞ்சனால் முத்திரையிடப்பட்டு புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒலி நாடாக்கள் எவ்வாறு ஊடகங்களுக்குக் கிடைத்தன என்ற கேள்வி இன்றும் எழுந்துள்ளது.  

இது ஒரு புறமிருக்க இந்த பெரும் எண்ணிக்கையான ஒலி நாடாக்கள் தொடர்பில் ஆராயவும் விசாரணைகளை முன்னெடுக்கவும் பத்து பொலிஸ் குழுக்களை அமைக்க பொலிஸ் தலைமைகம் தீர்மானித்துள்ளது. அரச பகுப்பாய்வுப் பிரிவின் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த பத்து பொலிஸ் பிரிவினரும் ஒலி நாடாக்களை தனித்தனியாக செவிமடுத்த பின்னர் அதில் குற்றமிழைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால், அதில் தொடர்புபட்ட சகலரிடமும் விசாரிக்கவும், வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி கிடைக்கப்பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. அறிக்கை கிடைக்கப்பெற்ற மறுதினமே பொலிஸ் குழுக்களின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு குழுவிடம் முதற் கட்டமாக ஆயிரம் ஒலி நாடாக்கள் என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டு ஆராயப்படும் அத்துடன் ஒவ்வொரு அதிகாரியும் ஒலி நாடாக்களைத் தனித்தனியே செவிமடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குக் கணனி தொழில் நுட்பத்தையும், மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

இது இவ்விதமிருக்க ரஞ்சன் ராமநாயக்க தொடர்பிலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒலிநாடாக்கள் குறித்தும் நீதிமன்றத்தின் மூலமும், பொலிஸ் தலைமையகத்தின் மூலமாகவும் இரண்டு புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க அரசு தீர்மானித்திருப்பதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனித்தனியே முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் மூலம் அரசாங்கமும் விசாரணைகளை தனித்தனியே மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருக்கின்றது.

எம்.ஏ.எம். நிலாம்

Comments