அமெரிக்க - ஈரான் யுத்தத் தவிர்ப்பினால் தப்பிப் பிழைத்த இலங்கை பொருளாதாரம் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க - ஈரான் யுத்தத் தவிர்ப்பினால் தப்பிப் பிழைத்த இலங்கை பொருளாதாரம்

கடந்த மூன்றாம் திகதி ஈராக்கில் வைத்து ஈரானின் மூத்த படைத்துறைத் தளபதியாகிய காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமும் முறுகல் நிலையும் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்பப்புள்ளியாக ஆகிவிடுமோ என்ற அச்ச உணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருந்தது. காசிம் சுலைமானியின் இறுதிக் கிரியைகளில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.  

ஐந்து நாட்கள் கழித்து பத்திற்கும் மேற்பட்ட ஏவுகனைகளை ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவி ஈரான் பதிலடி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆயினும் அமெரிக்கா காங்கிரசும் அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள் பலரும் ஒரு போருக்கான தயார்நிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இல்லை என்பதாகவும் டிரில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை மத்திய கிழக்கில் யுத்தத்திற்கு செலவழிப்பதைவிட வீடற்றிருக்கும் அமெரிக்க மக்களுக்கு வீடுகளை வழங்கவும், தொழில் அற்றோருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தரவும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரியதுடன் ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க துருப்பினரையும் மீள அழைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  

எனவே ஈரானுடனான முழு அளவிலான ஒரு போருக்குப் பதிலாக மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமே அந்நாடு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளது.  

மறுபுறம் ஈரான் அமெரிக்காவுடன் முழு அளவிலான ஒரு போருக்கு தாம் தயாரில்லை எனவும் தமது தளபதி கொல்லபட்டமைக்கு பதில் தாக்குதலையே தாம் நடத்தியதாகவும் தமது தளபதி கொல்லப்பட்டமை ஒரு பயங்கரவாதத்தாக்குதல் எனவும் கூறியது. உடனடியாக ஒரு முழு அளவு யுத்தம் மூண்டு விடுமோ என்ற அச்சத்தை இவ்விரு தரப்பினரின் அறிவிப்புகளும் ஓரளவு தணிப்பதாக இருந்தாலும் மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் நெடு நாளைக்கு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.  

சிறு அளவிலான தாக்குதல்கள் இருபக்கத்திலிருந்தும் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இதன் மூலம் மத்திய கிழக்கில் ஒரு அசாதாரண சூழல் தொடரக்கூடிய நிலையும் பொதுமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு சூழல் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

180 பயணிகளுடன் ஈரானிலிருந்து உக்ரேனுக்கு புறப்பட்ட ஒரு சிவிலியன் விமானம் விழுந்து நொருங்கி அதில் பயணித்த அத்தனை பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

வளைகுடாவின் வான் பரப்பு சிவிலியன் விமானங்களுக்கு எந்தளவு தூரம் பாதுகாப்பாக இருக்கப் போகிறது என்ற கேள்விக்குறி இதன் மூலம் எழுந்திருக்கிறது.  

அமெரிக்காவின் நட்பு நாடுகளின் பொருளாதார இலக்குகளை ஈரான் குறிவைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் பிரதான எண்ணெய் உற்பத்தி மையங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி இருக்கிறது.  

கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி 66 டொலர்களாக இருந்த மசகெண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜனவரி 6ம் திகதி 71 டொலர்களாக உயர்ந்தது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் முழு அளவு யுத்தத்தை மறுதலித்த நிலையில் கடந்த 9ஆம் திகதி 65.37 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே மசகெண்ணெய் விலையில் இப்போதைக்கு பாரிய அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது புலனாகியது.  

பலவீனப்பட்டு போயுள்ள இலங்கைப் பொருளாதாரம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாடு ஒரு முழு அளவிலான யுத்தமாக வெடிக்குமாயின் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். மசகெண்ணெய் விலை அதிகரித்துச் செல்லுமாயின் அதன் நேரடிப் பாதிப்புகள் இலங்கைப் பொருளாதாரத்தின் நாடி நரம்புகளின் எல்லாப் பகுதிகளிலும் தாக்கம் செலுத்தும். சென்மதி நிலுவை உற்பத்திச் செலவு, பணவீக்கம், நாணய மாற்றுபீடம் என்னும் குறிக்காட்டிகளில் பாதகமான தாக்கங்களை அது உருவாக்கும் உணவு, உடை, உறையுள் என்னும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்களுக்கு அதிக பணம் தேவைப்படும்.  

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாகிய தேயிலை ஏற்றுமதிகளில் 31 சதவீதம் ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள்லேயே கொள்வனவு செய்யப்படுகிறது.  

இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகள்   அத்துடன் தேயிலையின் மிகப் பெரும்பகுதி மத்தியகிழக்கு நாடுகளுக்கே செல்கிறது.

இப் பிராந்திய நாடுகளில் ஏற்படும் யுத்த சூழல் இலங்கையின் தேயிலை ஏற்றுமதிகளில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.  

தற்போது சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு தொழில்வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உழைத்தனுப்பும் பண அனுப்பல்கள் ஆடை ஏற்றுமதி மற்றும் தேயிலை ஏற்றுமதி வருமானங்களுக்கு அடுத்த படியாக இலங்கையில் மூன்றாவது முக்கிய வருவாய் மூலாதாரமாகும்.  

மத்திய கிழக்கில் ஏற்படக்கூடிய ஒரு வலுவான மோதல் சூழ்நிலை இவர்களில் பலரது தொழில் வாய்ப்புகளில் பாதுகாப்பற்ற சூழலையும் வேலை இழப்புகளையும் உருவாக்குவதால் பலர் நாடு திரும்ப நேரிடும். இதனால் இலங்கை கணிசமான வருவாய் இழப்பை சந்திப்பதுடன் உள்நாட்டில் வேலையின்மை அதிகரிப்பதற்கும் இது இட்டுச் செல்லும்.  

கடந்த காலங்களில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்தங்களின் போது இலங்கையின் பொருளாதாரம், கணிசமான இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. இத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாதிருக்க பாரிய யுத்த சூழல் மத்திய கிழக்கில் உருவாகாமல் தடுக்க உலக நாடுகள் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.  

முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்தங்கள் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களாலேயே ஏற்பட்டன. அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மற்றும் உயிரிழப்புகள் மிகமிக அதிகம்.

அப் பாதிப்புகளிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு விட்டதாக சொல்ல முடியாது. இந்த யுத்தங்களுக்கான உடனடிக் காரணம் யாரோ ஒரு முக்கிய நபரின் படுகொலையாகவே அமைந்திருந்தது. எனவேதான் சுலைமானியின் படுகொலை அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.  

அவ்வாறான முழு அளவிலான ஒரு யுத்தம் ஏற்பட நாடுகள் கூட்டுச்சேர வேண்டியிருக்கும். தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக அதன் வளைகுடா நட்பு நாடுகள் உள்ளன.

ரஷ்யா மறைமுகமாக ஈரானுக்கு ஆதரவு வழங்கலாம். சீனாவின் பொருளாதார கரிசனைகள் ஈரானுக்கு உதவத் தூண்டலாம். ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பத்தில் மதில் மேல் பூனையாக இருக்கலாம்.  

ஈராக் யுத்தத்தின் போது ஜோர்ஜ் புஷ்க்கு ஆதரவாக ஐரோப்பாவின் சில நாடுகள் செயற்பட்டமையும் இங்கு குறித்துக் காட்டப்பட வேண்டும்.  

எவ்வாறாயிலும் 1980களிலும் அதற்கு முன்னரும் ஏற்பட்ட யுத்தங்கள் போலன்றி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எதிர்கால மூன்றாம் உலக யுத்தம் ஒன்று குறுகிய காலப்பகுதியில் மிகப்பெரிய அவலத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையக் கூடும்.  

உலகச் சம நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு எவ்வகையிலும் சமமான நாடன்று. அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஈரானை இலகுவில் வீழ்த்தி விடக்கூடும். ஆயினும் உலகின் நதிக்கரை நாகரீகங்களில் ஒன்றான மொசப்பத்தோமிய நாகரிகத்தின் தொட்டிலான ஈரான் இறுதிவரை போராடும் என்பதை மறுக்கமுடியாது.     

போர் எவருக்குமே வெற்றியளிப்பதில்லை. முழு மனித குலமே அதன் மூலம் தோல்வியையே சந்திக்கிறது. அமெரிக்காவின் காதில் எல்லா நாடுகளும் சத்தமாக இதைச் சொல்ல வேண்டியது அவசியம்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments