இதுதான் தைப்பொங்கல்! | தினகரன் வாரமஞ்சரி

இதுதான் தைப்பொங்கல்!

“எல்லாரும் எங்க விடியுதில்ல எண்டு இருப்பாங்க, நான் எண்னண்டா விடியாமல் ராத்திரி அப்படியே இருக்கணும் எண்டு நினைக்கிறேனே” என நினைத்தபடியே தரையில் சாய்ந்து கண்களை மூடினாள் மனோன். அவள் வெகு விரைவில் கண்களை மூடிவிட முடியாது. “நாளைக்கு நேரத்தோட எழும்பி மா அரைத்து, அத வறுத்து, ரவுணுக்குப்போய் சுமதி ரீச்சர் வீட்ட குடுத்துத்து, அப்படியே வேங்கு மனேச்சர் ரதி அக்கா வீட்டில வீட்டுவேலையும் செய்துத்து ஆறுமணிக்கெல்லாம் வீடு திரும்பணும்” என முணுமுணுத்தபடியே உடல் களைப்பு நினைவை மறைக்க உறக்கத்திற்குச் சென்றாள். வயிற்றின்மீது திடீரென ஒரு கை. உணர்ச்சி வெளிப்பட்டுக் கண்களை விழித்தாள். அது தனது மகளின் கை. எட்டு வயது நிரம்பிய தர்சினியையும் அணைத்துக் கொண்டு வாழ்வின் விடியலுக்காக உறக்கத்தில் ஆழ்ந்தாள்.  

அதிகாலை நான்கு மணிக்கொல்லாம் தர்சினியின் இறுக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்து விடுவாள். அரைத்தூக்கம் அவளை ஆட்டிப்படைக்க மாவை அரைத்து எடுக்க அதிகாலை ஐந்து மணியாகிவிடும். ஆறுமணிக்கெல்லாம் சுமதி ரீச்சர் வீட்ட போகத் தயாராகி விட்டாள். தர்சினியை பக்கத்து வீட்டுச் செல்லம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவாள். தர்சினி தலையணையை அணைத்துக்கொண்டு செல்லம்மாவின் விறாந்தையில் நித்திரை செய்தாள்.  

மணிகண்டர் எழுந்து வந்து “என்ன செல்லம் இந்தப் பொடிச்சி கடும் குறக்க கிழுக்கிறாள்”.் அத ஒழுப்பு தேத்தண்ணி குடுப்பம்”. “அவள் ஒழும்ப மாட்டாள் நீ பல்லக் கொப்புளிச்சுத்துவா தேத்தண்ணி தாறன்.“வனிசிக்காரன் போகல்லயா?.”“ஏழு மணியாப் பொயித்து இன்னும் அவனக் காணல்ல.”இல்லாட்டி ஒரு வட்டர் பையை வாங்கித்து வா.” “ஆ அப்ப தேத்தண்ணி அடுப்பப் பாரு நான் கடைக்குப் போய் வாங்கித்து வாறன்” என புறப்பட்டாள் செல்லம்மா.  

செல்லம்மா வட்டர் பையுடன் வந்து விட்டாள். “என்ன தேத்தண்ணி கொதிச்சு வத்தித்து ஏன்? இவ்வளவு நேரம் செண்டது.”“அதக்கேட்டால்ல பவான்ர புள்ளைக்கு புறந்தநாள் செய்யிராங்க பீக்கர் கட்டுப்படுது.” “ஆ நமக்குச் சொல்லயுமில்ல.”“சொல்லாட்டி நமக்கென்ன, காசி மிச்சம், அதோடயும் நமக்கு எந்த புள்ளகுட்டி எண்டு நினைச்சுதுகளோ” என்று புலம்பினாள் செல்லம்மா. “அத உட்டுத்து தேத்தண்ணிய ஊத்து ஆறிப்போகு” தேநீர் ஊற்றும்போது பிறந்தநாள் வீட்டில் ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள் ஒலித்தன. தர்சினி திடீரென நித்திரை விட்டு விழித்தாள். “சரி பொடிச்சி ஒழும்பித்து”. “பல்லத்தீட்டித்து ஓடியா தேத்தண்ணி தாறன்.”பாட்டி என்ன பாட்டுக் கேட்குது.”அது புறந்தநாளாம்.” “நானும் போகயா. ”போறண்டா, குளிக்க வாத்து மாப்போட்டு உடுறன் நேரஞ்செண்டு சுமியையும் கூட்டித்துப் போவம்.” என்றாள் செல்லம்மா.  

உற்சாகம் எல்லையற்று எழ, பல்லைத்துலக்கி தேநீரை அருந்தினாள் தர்சினி. “வீட்ட போய் வடிவான சட்ட எடுத்துத்து வரயா?.”“அம்மா கதவ பூட்டிப் போட்டு பொயித்தாவு இன்னா ஒரு சட்ட தந்துத்துப் போயிருக்குது. இதப் போடுவமே இதுவும் வடிவான சட்டதான்.” என்று கூறி சமாளித்து விட்டாள். தர்சினியைத் தயார்படுத்தி விட்டு. “நீ இருந்து விளையாடு நான் வாசலக் கூட்டிப்போட்டு வாறன்.”“சரி பாட்டி கெதியா வரணும்” என்றாள் தர்சினி.  

செல்லம்மாவும் வேலைகளை முடித்துவிட்டு வந்து நெத்தலி மற்றும் மரவள்ளிக்கிழங்கும் இட்டு சமைத்து மதிய உணவை சமைத்து விட்டாள். மதிய உணவை மூவரும் உண்டனர். உண்டு முடித்தவுடனே தர்சினி “பாட்டி போவமா?.” 

“பொறன் சுமதியும் வரட்டும்” என்று கூறி முடிக்கும் முன்னரே சுமதியும் அவளது அம்மாவும் செல்லம்மாவின் திண்ணையில் நின்றார்கள்.  

“என்ன நீங்க போறல்லயா” என்றாள் சுமதியின் தாய். “எனக்குச் சொல்லல்ல, இந்தப் பொடிச்சத்தான் உன்னோட உடுவம் எண்டு’’. “ஏன் மதியம் போயிருக்கலாமே” என்றான் மணிகண்டன். “யாருக்கு வேணும் இந்த ஊத்த கோழிப் பிரியாணி? அதுதான் தண்ணிச் சாப்பாட்டுக்கு போவமெண்டு.” 

“அப்ப ஏன் நிக்கிறியள் நடங்களங்கா” என்றான் மணிகண்டன். “நீயும் அதுகளோட பொயித்து வா” என்றாள் செல்லம்மா. சுமதியின் தாய்க்கு தர்சினியின பழைய ஆடையைப் பார்த்ததுமே அழைத்துச் செல்ல விருப்பமில்லை. நாங்க பிறந்தநாள் வீட்ட பொயித்து அப்பிடியே இவர்ர தாயிர வீட்டயும் போகப்போறம். அவளக் கூட்டிப்போய் என்ன செய்ர, நீ நில்லா நாங்க வர இருட்டாயிரும், இவர்ர சைக்கிலுல வந்தாலும் வந்திருவம்” என்று கூறி “அப்பா களண்டுத்தம் இதுகளுக்கிட்ட இருந்து” என நினைத்துக்கொண்டு செல்லம்மாவின்   திண்ணையில் இருந்து மின்னலாய் மறைந்தாள் சுமதியுடன்.  

“அவங்க போகட்டும்மென வா நாம கணேசனோட்ட பொயித்து வருவம்”. “என்னத்துக்குப் போகப்போறா”. “அவன் கச்சான் புடுங்கினவனாம் அண்டு பிச்சக்காசு எடுக்கப்போக்குள்ள அங்கால வாவன் எண்டவன். அதுதான் பொயித்து வருவமே.”“செக்கலாக மட்டும் தர்சினியையும் வச்சித்து இருந்திராத?”. “இல்ல நாங்க வந்திருவம்்”. என்று கூறி தோளில் வெள்ளைத் துண்டை எறிந்தான். கையில் தர்சினியைப் பிடித்து நடந்தான்”.  

மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருவரும் நிலக்கடலையுடன் வந்தார்கள். “தர்சினிக்குட்டி” என்று அழைத்தபடி மனோனும் வந்தாள். “அம்மா வந்துத்தாவு” எனக் கூறி மணலில் கால்கள் புதைய துள்ளிக் குதித்து ஓடினாள் தர்சினி. “என்ன வேலை முடிஞ்சுதுபோல”. “ஓம் அம்மப்பா முடிஞ்சுது”. மனோன் தனது சேலையைப் பிடித்துக் கொண்டிருந்த தர்சினியிடம் “பாட்டிக்கிட்டச் சொல்லு போயித்து வாறம் எண்டு” என்றாள் மனோன். “பாத்தயா பொடிச்சிய தாயக் கண்டவுடனே நம்மள மறந்துட்டாள்” என்று கூறி நகைத்தான் மணிகண்டன். தர்சினியும் மனோனும் செல்லம்மாவின் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள்.   மறுநாள் மனோன் வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில் அந்தப் பெண் “நாளைக்கு கொஞ்சம் பலகாரம், முறுக்கு செய்யணும், அரிசி மாவைக் கொஞ்சம் கூடக் கொண்டுவா மனோன்”. “சரி அக்கா நான் கொண்டுவாறன்”. அப்போதுதான் அவளுக்குத் தெரியும் புதிய வருடம் தடம் பதிப்பதற்கு இன்னும் ஏழு நாட்கள் மாத்திரமே உள்ளதென்று. அவளுக்கு தலைக்குள் பல சிந்தனைகள் பத்தும் பலதுமாகச் சுழன்றது. “ஐயோ புது வருசம் புறந்தா அங்கால பொங்கல் வருது தைப்பொங்கல் நாள் நான் எண்ட வாழ்க்கையில மறக்கணும் எண்டு நினைக்கிறன் கடவுளே இந்த முறையும் பொங்கல ஆரவாரமில்லாம அசிப்பில்லாமச் செஞ்சிரோணும்”. என நினைத்து எண்ணங்களின் ஒன்று திரட்டலினால் வெப்பம் நிறைந்த மூச்சுக் காற்றை வெளியேற்றினாள்.  

கவலையோடு பஸ்தரிப்பிடத்திற்கு வந்தாள். ஏன் அவள் தைப்பொங்கலை வெறுக்கிறாள் என்று கேட்கவில்லையே? பத்து வருடங்களுக்கு முன்பு மனோனும் கங்கனும் ஒருவரை ஒருவர் காதலித்துத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார்கள். மனோனும் ஒரு குழந்தைக்குத் தாயானாள். கங்கன் தச்சுத் தொழில் செய்பவன். அவர்கள் சந்தோசமாக வாழும் அளவிற்கு வருமானமும் கிடைத்துள்ளது. பின்னர் கங்கனுக்கு தச்சுத் தொழிலிருந்து போதியளவு வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கங்கனுக்கு பலர் மீதும் கோபம் ஏற்பட்டது. மனோனுடனும் சரியாகப் பேசுவதில்லை. மனோனுக்குக் கவலையாக இருந்தது. தைப்பொங்கல் தினமும் நெருங்கியது. “நாளைக்கு தைப்பொங்கல் பாலெல்லாம் வேண்டணும்” என்றாள் மனோன். “எனக்கிட்ட ஒண்டும் வேண்டக் காசில்ல நீ என்னண்டான செய்” எனக்கூறி துவிச்சக்கரவண்டியைத் தள்ளினான்.  

சூரியனும் உதித்த பின்பு கங்கன் மதுவாடையுடன் வீட்டிற்கு வந்தான். அவன் மது அருந்தியிருந்ததை அறிந்த அவள் “ஏன் இவ்வளவு நேரம் செண்டு வாறீங்க? பொங்கலெல்லாம் பொங்கணுமெண்டு தெரியாதா?, ஒரு நாளும் இல்லாம குடிச்சுத்து வந்திருக்கிறா?”. “பொங்கலும் கிங்கலும் அவன் இவன் நகை நட்டு, காசி பணம் வேண்டி கலியாணம் கட்டி ஒண்டொட்டு ஒருநாளைக்கு வேலைக்கு போய் சந்தோசமா இருக்கிறானுகள். நான் உன்ன கலியாணம் கட்டினத்தில இருந்து மாரடிச்சி மாரடிச்சி தோள் மூட்டெல்லாம் களண்டதுதான் மிச்சம்”. உண்ட புத்தியக் காட்டித்தா பாத்தயா! 

 ஒண்டும் வேணா எண்டு தானே கலியாணம் கட்டினனி”. “ஆருக்குத் தெரியும், இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா ஏன் உன்னக் கட்டுறன்” குடிபோதையில் உழறினான் கங்கன். கோபமடைந்த மனோன் அழுது புலம்பினாள். இருவருக்கும் இடையில் வார்த்தைப்பிரயோகம் அதிகரித்ததால், கங்கனுக்குக் கோபம் அதிகரித்து மனோனுக்கு ஓர் அறை கொடுத்தான். மனோனும் “ஓ” என அழ ஆரம்பித்தாள். “அடிச்சி கிடுச்சி போட்டாச் சரி முட்டக்கண் ஊத்தத் தொடங்கிடுவாள்” என்று கூறி அன்று அவள் கண்களில் இருந்து மறைந்தவன் தான் கங்கன், இன்றுவரை அவளது கண்களின் முன்னால் தோன்றவில்லை.  

எல்லோரும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், அவளுக்குக் கவலையும் கண்ணீருமே பிறந்தது. அன்றிலிருந்து பல வீடுகளில் சமையல், பாத்திரங்கள் கழுவுதல் என பலவேலைகளிலும் ஈடுபட்டுப் பணத்தைச் சேமித்து குறிப்பிட்ட காலத்திற்கு வேலைக்குச் செல்லாமல் ஓய்வெடுத்து தர்சினியைப் பெற்றெடுத்தாள். இதற்குப் பல வழிகளிலும் செலம்மாவே உதவியாக இருந்தாள். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஏன் அவள் தைப்பொங்கலை வெறுத்தாள் என்று. தர்சினிக்கும் தைப்பொங்கல்  தினத்தன்று புத்தாடை அணிவித்ததும் இல்லை. அவளுக்குத் தைப்பொங்கல் நாள் எதுவென்று இன்றுவரை தெரியாத நிலமையே காணப்படுகிறது.  

மறுநாள் அதே வீட்டிற்குப் புதுவருடத்திற்கான பண்டம் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தாள். பேருந்தில் இருந்து இறங்கியதும் அருகிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில், கையில் பொதியுடன் ஓர் ஆண் நின்றுகொண்டிருந்தான். வழமையாக அவள் ஆண்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அன்று அவளுக்குத் திரும்பிப்பார்க்க வேண்டும்போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தாள்; கங்கன் நின்றுகொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் மல்க தர்சினிக்குத் தந்தை கிடைத்து விட்டதாக நினைத்துக் கால்களை நகர்த்த, மனம் அதை மறுத்தது. “திரும்பவும் நம்மளக்கண்டு போனாலும் போவான்” என நினைத்துக் கால்களின் நகர்வை கஷ்ரப்பட்டு குறைத்துக் கொண்டு காணாதவரைப்போன்று நடக்கத் தொடங்கினாள்.  

தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த கங்கன், பார்வையை நீக்கி சற்று முகத்தை உயர்த்தினான். தன்னைத்தாண்டிச் செல்வது மனோன் என்பது அவனுக்குத் தெரியவந்தது. மனோன் என அழைத்துக்கொண்டு அவள் பின்னால் ஓடிச் சென்று அவளை அடைந்தான். ஒட்டியுலர்ந்த கன்னங்கள், மங்கிய ஆடை, தலையில் மாமூட்டை இவற்றையெல்லாம் கண்ணுற்றதுமே “இதென்ன கோலம் ஏன் இப்பிடி” எனக் கண்களில் கண்ணீர் மல்க நின்றான் கங்கன். அவளுக்கு ஏதுமே பேசத் தோன்றவில்லை. அவனைக்கண்ட ஆனந்தத்தைப் பல இன்னல்களுக்கும் மத்தியில் மறைத்துக்கொண்டு “இடையில பொண்டாட்டிய உட்டுத்துப்போனா இப்பிடித்தான் இருப்பாங்கா. வேற பட்டுப் பீதாம்பரத்தோடயும் நகைநட்டோடயும் பளபளண்டா இருப்பாங்க?” “என்ன உடு ஏன் நீயும் அடையாளமே மாறிப்போய் இருக்கிறா? காசி இல்ல போல! காசி வேணும் எண்டுதானே என்ன உட்டுப்போட்டு ஓடினனீ” என்று கோபமாகப் பேசினாள்.  

ஆண்கள் அழுவதென்பது குறைவு. ஆனால், கங்கன் வீதியென்றும் கவனிக்காது அழத்தொடங்கினான். “உனக்குச் செய்த பாவம் என்ன இப்படியெல்லாம் ஆட்டிப்படைச்சுப் போட்டுது. ஒருவன நம்பி கொழும்புக்கு வேல தேடிப்போய் ஏமாந்து போயித்தன். ஒரு நாள், ஒரு பாரிசலத் தந்து ஓர் ஆளுக்கிட்ட குடுக்கச் சொன்னான்.

நானும் போனன் போனதுக்குப்புறகுதான் தெரியும் அது கஞ்சாப் பாரிசல் எண்டு. என்னமா பொலிஸ் வந்தானெண்டு தெரியா. பக்கெண்டு விலங்க மாட்டினான். கொண்டு கஞ்சாக் கேஸ் எண்டு ஜெயிலில அடச்சவன்தான். இப்பதான் உண்மையான குற்றவாளியப் புடிச்சானுகள். அதால என்ன ஜெயிலில இருந்து வெளியேத்தினான். ஜெயிலில இருந்ததனாலதான் உங்கள வந்து பாக்கேலாமப் பொயித்து. அதுதான் இப்ப வந்தனான். அங்க வரத்தான் நிற்கிறன். உள்ளுக்குள்ள இருந்ததால இடம்தெரியல்ல. நம்மட புள்ள என்ன செய்யுது, புள்ளயா பொடியனா எண்டுகூட எனக்குத் தெரியாது.”“பத்து வருசத்துக்குப்புறகு தன்ர புள்ள ஆம்பிளயா, பொம்பிளயா எண்டு கேக்கிற ஆம்புள நீதான். நீ சொல்லுற கேக்க எனக்கு நேரமில்ல. கனநேரம் இவடத்த நிக்க ஏலாது. பார்க்கிறாக்கள் ஒரு மாதிரி நினப்பாங்க”. என்று கூறி நடந்தாள்.  

எப்படியோ கங்கன் மனோன் வர முன்பே வீட்டிற்கு வந்தான். செல்லம்மாவின் மூலமாக கங்கன் தர்சினியை அறிந்து அவளிடம் தான் அவளுடன் அப்பா என்று அறிவித்தான். “அம்மா உங்கள வெளிநாடு போயித்தாரு எண்டவங்க. ஏன் நிறைய நாள் கழிச்சி வாறீங்க? லெட்டர் போட்டிருக்கலாமே”. அவளுடைய மழலைப்பேச்சு அவனை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. மனோன் வீட்டிற்கு வந்தாள். தர்சினி “அம்மா, அப்பா வந்துத்தாரே எனக்கு பொங்கலுக்கு பாட்டி புறொக் ஸ்கூலுக்கு கொப்பியெல்லாம் வாங்கி வந்திருக்காரே”. மகிழ்ச்சியால் ஆரவாரித்தாள். மனோனுக்கு கோபம் ஏற்பட்டு கங்கனின் பொருட்களையெல்லாம் வீசினாள். தர்சினி “அம்மா, அப்பா” என அழுதாள். கங்கன் “நான் அண்டைக்குச் செய்த பிழைய நீ இண்டைக்கு செய்யாத” எனப் பொறுமையாகப் பேசினான். “நீ அதச் சொல்லத் தேவயில்ல. இஞ்ச இருந்தனியெண்டா நான் பாட்டியோட்ட போயிருவன்”. எனக் கூறி தர்சினியைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.  

செல்லம்மாவிடம் சென்று மனோன் கங்கனைக் கண்டதையும் நடந்தவற்றையும் கூறினாள். “அவன் தான் நடந்ததச் சொல்லியிருக்கிறான். நீ என்னண்டா அவன்ர மூஞ்சில அடிச்சமாதிரி கதச்சிஅவன வெளியேத்திப் போட்டா? அவன் எப்பண்டான வருவான் எண்டு தானே பொங்கலும் கொண்டாடாம பொங்கலெண்டா என்னண்டு தெரியாதளவிற்கு அவள வச்சிருக்கிறா?, பள்ளில வந்து படிச்சதச் சொன்னாலும் அதயும் கண்டுக்காத மாதிரி இருக்கிறா? நீ கிழவி கட்டல்ல. உனக்காக இல்லாட்டியும் இதுற முகத்துக்காக எண்டாலும் சேர்ந்து வாழு” எனப் புத்திமதிகளைக் கூறி அவளைத் தேற்றினாள். இப்போது அவள் அவளது மனத்திற்கு இடம்கொடுத்து “சரி பாட்டி நீங்க சொல்லுற மாதிரி நான் செய்யுறன்”. என்று கூறி மனோன் தர்சினியையும் அழைத்துச் சென்று கங்கனை அழைத்து வந்தாள்.  

மறுநாள் தைப்பொங்கலும் பிறந்தது. கங்கனும் மனோனும் வீட்டை அலங்கரித்து கோலம் போட்டுப் பொங்கலுக்குத் தயார்படுத்தினர். தர்சினி “இப்பிடித்தானாம்மா பொங்கலுக்கு செய்யுற” என்று ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கேட்டவாறே இருந்தாள். மனோனும் பதிலளித்தவளாக அவளை நீராட்டி புத்தாடை அணிவித்தாள். அதை அறிந்ததுமே அவளது கால்கள் தரையில் நிற்கவில்லை. பொங்கலுக்கு இனிப்புக்களைச் சேர்க்கும்போது தர்சினி “அப்பா பேரீச்சம்பழம் போடுங்கப்பா” என்று கூறிக்கொண்டு ஆரவாரம் இட்டாள். பொங்கலும் தயாராகி விட்டது. கங்கன் சூரியனுக்குப் படைக்கும்போது தர்சினி மழலையில் “தோடுடைய செவியன்” தேவாரத்தைப் பாடினாள். மூவரும் சூரியனை வணங்கிவிட்டு ஆலயத்திற்குச் சென்றனர்.

அப்போது தர்சினி “அம்மோ ஏன் நாம இப்பிடி ஒருநாளும் செய்யல்ல” கேள்விக்குப் பதில் கூறமுடியாமல் மனோன் கங்கனைப் பார்க்க, கங்கன் “அப்பா இப்பானே வந்தனான்.”“அப்பண்டா நீங்க இனிமேல் ஓர் இடமும் போகக் கூடாது” எனக் கங்கனின் தோளைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தாள். மூவரும் தங்கள் வீட்டை வந்தடைந்தனர்.

சிவராசா ஓசாநிதி  
சித்தாண்டி

Comments