கதிரவனைப் போற்றித் துதிக்கும் தைப்பொங்கல் விழா | தினகரன் வாரமஞ்சரி

கதிரவனைப் போற்றித் துதிக்கும் தைப்பொங்கல் விழா

இந்து மக்களுக்குரிய பண்டிகைகள், விழாக்கள் என்பன ஒவ்வொரு தத்துவச் சிறப்பையும் தனித்துவத்தையும் எடுத்துக் காட்டும் வகையிலேயே அமைந்துள்ளன. அந்த வகையில் ஒன்றாக முக்கியத்துவம் பெறும் தைப்பொங்கல் திருநாள் ஒரு பண்டிகை என்பதற்கும் மேலாக, சூரிய வழிபாட்டுக்குரிய அதிவிசேட தினமாகவும் சிறப்புப் பெறுகிறது.   நவக்கிரக நாயகர்களுள் முதன்மையானவர் சூரிய பகவான். உலகில் சூரியனின் இயக்கம் செம்மையாக அமையப்பெற்றால்தான் மனிதகுலம் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும் செயற்படக்கூடியதாக இருக்கும். அதாவது உலகம் முழுவதும் உயிர்ப்புடனும், சக்தியுடனும் இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாகவும் ஆதாரமாகவும் திகழ்வது சூரிய சக்தியாகும். உழவுத் தொழிலுக்கு துணை நிற்கும் நிலம் நீர், ஆகாயம் எனும் இயற்கைச் சக்திகளின் செயற்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும் பெரும் சக்தியாகவும் கண்கண்ட தெய்வமாகவும் விளங்கும் சூரிய பகவானை போற்றித் துதிக்கும் வகையில் வருடந்தோறும் நடத்தும் ஒரு வழிபாட்டு நிகழ்வாகவே தைப்பொங்கல் அமைந்துள்ளது.  

இன்னொரு வகையில் சொல்வதானால் நன்றி மறவாமையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் பெருவிழாவாக தைப்பொங்கல் அமைந்திருப்பதை குறிப்பிடலாம். பயனை அனுபவிக்கும்போது, அந்தப் பயனைப் பெறுவதற்கு உதவிய எவரையும் எதனையும் மறந்துவிடலாகாது என்ற உயர்ந்த பண்பையும் தைப்பொங்கல் எடுத்துக்காட்டுகிறது.  

உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் விவசாய முயற்சிகளின்போது நிலத்தில் விதைத்து அறுவடைசெய்த நெல்லிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட புத்தரிசியைப் பயன்படுத்தி சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து தைமாதப் பிறப்பைக் கொண்டாடுவதே தைப்பொங்கல் வரலாற்றின் ஆரம்பமாக அமைந்திருந்தது. இதனால்தான் உழவர் திருநாள் என்ற பெயரிலும் தைப்பொங்கல், அழைக்கப்பட்டு வந்தது. காலப் போக்கில் இது, இந்து மக்களது பண்டிகைகளுள் ஒன்றாக மாறியதால் உழவர் பெருமக்கள் மட்டுமல்ல, அனைத்து இந்து மக்களும் தைமாதப் பிறப்பு நாளில் சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து வழிபாடு செய்வது வழக்கமாகிவிட்டது.  

சூரிய பகவானின் இராசி மண்டலப் பிரவேசமே ஒவ்வொரு தமிழ் மாதங்களினதும் உதயமாக அமைகின்றது. மகர இராசிப் பிரவேசத்தின் போது தை மாதம் பிறக்கின்றது. பூவுலக மக்களுக்குரிய ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒரு நாளாக அமைந்துள்ளது. தைமாதம் முதல் ஆனி மாதம் வரையிலான ஆறுமாத காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகும். இது உத்தராயணம் என்று சொல்லப்படுகின்ற சூரிய பகவானின் வடதிசைப் பயண காலமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். இது தட்சணாயணம் என்று சொல்லப்படுகின்ற சூரிய பகவானின் தென்திசைப் பயண காலமாகும். இந்த வகையில், தேவர்களுக்குரிய பகற்பொழுதின் ஆரம்பநாள் தான் தைமாதப் பிறப்பாகும். பூவுலக மக்களுக்கு இதுவே தைப்பொங்கல் விழாவாகவும் அமைந்திருப்பதால், தைமாதப் பிறப்பானது இருவகையில் சிறப்புப் பெறுகிறது.  

இந்து மக்கள் தங்கள் இல்லங்களில் தைமாதப் பிறப்புநாளின் அதிகாலையிலேயே பொங்கல் வழிபாட்டுக் கருமங்களை ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டு முற்றத்தை துப்புரவு செய்து, பசுவின் சாணத்தினால், மெழுகி, மஞ்சள் நீர் தெளித்து, கோலமிட்டு, அவ்விடத்தில் புதுப்பானை வைத்து புத்தரிசி கொண்டு, சூரியன் உதயமாகும் கிழக்குத் திசையை நோக்கி பொங்கல் செய்வது பாரம்பரிய வழக்கமாகும். ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.  

தங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி முடித்த பின்னர் அதே இடத்திலேயே தலைவாழை இலையில் பொங்கல் சாதத்தை சூரிய பகவானுக்குப் படைத்து வழிபாடு செய்யும் நிகழ்வானது, தெய்வ வழிபாட்டின் உன்னத செயற்பாடாகவே அமைந்துள்ளது. இந்த வகையில் பொங்கல் சாதமானது சூரிய பகவானுக்குரிய நைவேத்தியப் பொருளாக சிறப்புப் பெறுவதுடன், அவரது அருளால் பெற்றதை அவருக்கே நன்றியுடன் நிவேதனம் செய்யப்படுவதையும் இது எடுத்துக் காட்டுகிறது.   தைமாதப் பிறப்பு என்பது, வெறுமனே பொங்கலுடன் நின்று விடுவதில்லை. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்லப்படும் சிறப்புச் சொற்றொடருக்கு அமைய, இந்து மக்கள் திருமணம், புதுமனை பிரவேசம், புதிய கல்விச்சாலைகள், விற்பனை நிலையங்கள் ஆரம்பித்தல், விவசாய உற்பத்தி போன்ற பல்வேறுபட்ட சுப கருமங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தைமாதப் பிறப்பை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமாகும். தை மாதத்தில் ஆரம்பிக்கும் கருமங்கள் பெரும் வெற்றியையும் சிறப்பையும் கொடுக்கும் என்பதில் இந்து மக்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.  

மலரும் தைத்திங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமையவேண்டும் என இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக!  

அ. கனகசூரியர்

Comments