ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளில் மலையக இளைஞர்களுக்கும் இடம் உண்டா? | தினகரன் வாரமஞ்சரி

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளில் மலையக இளைஞர்களுக்கும் இடம் உண்டா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் நாட்டில் நிலவிவரும் வேலையில்லாதோர் நிலை பற்றி அக்கறை கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.  

அரசு வேலை வாய்ப்பு என்றாலே உயர்கல்வியில் சித்தி என்னும் தகைமை அவசியம் என்ற விதியே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றும் முகமாக க.பொ.த.சா. கல்வியைக் கூட முழுமைப்படுத்தாக இளைஞர் யுவதிகளையும் அரசு துறைசார் தொழில்களில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இதன்படி பொருளாதார ரீதியில் நலிவுற்றோர்,  சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோர், பாடசாலையிலிருந்து இடைவிலகியோர் என இதுவரை எவரது கவனத்தையும் பெறாதிருந்த இளைஞர் சமூகம் இன்று நிம்மதி பெருமூச்சு விடும் வாய்ப்பு வரப்போகின்றது. இப்படி ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை  உருவாக்கப் போகின்றார்களாம். இதனால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள் பயனடையலாம். இவர்களுக்கு மாதாந்தம் 35000ரூபா சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

ஆனால் இவ்வேலைவாய்ப்புத் திட்டத்தில் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்படுவார்களா என்னும் கேள்வி எழாமல் இல்லை. க.பொ.த.சா.தரம் உயர் தரம் கற்று  சித்தியடைந்த மலையகத்தவர்களுக்கு   எப்போதாவது ஆசிரியர் தொழில்  மட்டுமே வரப்பிரசாதமாக கிடைத்து வந்தது.  

இதனை விடுத்து போதிய தகுதி இருந்தாலும் கூட வேறு எந்த அரசு தொழிலுக்கும் ஆசைப்படுவதைப் போலவே இருந்தது.  முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும்  இவர்களை அரசு தொழில் வாய்புகளில் இணைத்துக்கொள்ள இதுவரை எந்த வொரு அரசாங்கமும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஒரு வகையில் இது இன ரீதியான பாகுபாடு. இதனால் மலையக இளைஞர் யுவதிகள் அரசு தொழில்பற்றிய கனவு கூட காணமுடியாத பரிதாபம்.  

இன்று ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்கள் தலைநகர்  போன்ற இடங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். இவர்களில் க.பொ.த சாதாரண தரம், உயர்தரங்களில் சித்தியடைந்தவர்களும்  உள்ளனர். ஆனால் இவர்களில் பலர் கெளரவமான தொழில் செய்வதாக யாரும் எண்ணிவிடக்கூடாது. சில்லைறைக் கடையில் சிற்றூழியர்கள்,  தேனீர் கடைகளில் சிப்பந்திகள், இரும்புக் கடைகள் புடைவைக் கடைகளில் விற்பனையாளர்கள், சுமை தூக்கிகள், நடைபாதை வியாபாரம், கட்டட நிர்மாணங்கள் நடக்கும் இடங்களில் நாளாந்த ஊழியம் என்று நிலையான தொழில் ஏதுமின்றி அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை  வாழ்ந்து வருகிறார்கள்.   

உழைப்புக்கேற்ற ஊதியம் தருவார் இல்லை. ஆபத்தான தொழில் என்றாலும் கூட விபத்து நிவாரணங்கள் இல்லை. நிரந்தர தங்குமிடம் இல்லை. வீதியிலே தொழில், வீதியிலே சாப்பாடு. வீதியோரத்தில் தூக்கம். இதை விட்டால் வேறு கதியே இல்லை என்னும் நிலைமை.  

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிப்பு வெளியானது முதல் பெரும்பான்மை இன அரசியல் பிரமுகர்கள் தமது ஆட்கள் மூலம் வேலையில்லாதோர் விபரங்களைச் சேகரித்து வருகின்றார்கள். இதனால் இச்சமூக  சிங்கள   இளைஞர் யுவதிகளின் முகங்களில் சந்தோஷ சாயல். புதிதாக ஓர் நம்பிக்கை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்து வீடுகளிலும் ஒருவர் அரசு வேலை வாய்ப்பினை பெறப்போவதாக பெருமிதம். ஆனால் மலையகப் பகுதிகளில் எந்தச் சலனமும் இல்லை. ஏமாற்றம் ஏந்திய முகங்கள். இதுதான் இங்கு நிலை.  

ஆசிரியர் தொழிலைத்தவிர வேறு எந்த அரசு தொழில் அறிவிப்பு வந்தாலும் அதுபற்றி மலையகத் தலைமைகள் அலட்டிக் கொள்வதே இல்லை. எம்மவர் எவருமே இலாயக்கில்லை என்னும் இளக்காரம் பெரும்பான்மையினத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க தயக்கம்.  

இதனாலேயே மலையகத்தில் வேலையற்றோர் அதிகரிப்பு. விரக்தியுடன் நகர்ப்புறம் நோக்கிய படையெடுப்பு. குறைந்த வேதனத்தோடு விடிவு தெரியாத தவிப்பு. பெருந்தோட்டத் தொழில் இவர்களை ஈர்ப்பதாக இல்லை. அவர்களின் பெற்றோர் உறவுகள் சம்பள அதிகரிப்புக் கோரி எதுவுமே கிடைக்காமல் ஏமாந்து கிடப்பதை இவர்கள் பார்க்கத்தானே செய்கின்றார்கள்.  

பின்னர் எப்படி தேயிலைத் தொழிலில் ஆர்வம் வரும்? அதனால்தான் அத்தொழிலை புறக்கணிக்கின்றார்கள். இடம்பெயரத் தலைப்படுகின்றார்கள். இந்நாட்டில் எத்தனை பேர் இதனைப் புரிந்து கொள்கின்றார்கள்? கல்வியில் பின்தங்கிய சமூகம் என்று இலகுவாக முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவது சர்வசாதாரணமாகி விட்டது. தோட்டத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பெற்றோர்களுக்கும் வேதனக்குறைவு. நகரப்புறங்களில் நசுக்கப்படும் இளைஞர்களுக்கும் சம்பள பற்றாக்கறை. கூடிய சரீர உழைப்பு. அதி குறைந்த வருமான சேர்ப்பு. எத்தனை பரிதாபம்! இவர்களால் அரசாங்கம் அறிவித்துள்ள கல்வியில் நலிவடைந்தோருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தால் பயன்பெற முடியுமா என்பதே பலரதும் கேள்வி. எனினும் மலையக தலைமைகள் மெளனமாகவே இருக்கின்றன. சுய தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் பற்றி இங்கு கவனம் செலுத்தப்படுவதாக தெரிகின்றது. அண்மையில் சமூக வலுட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்டக் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ரமேஸ்பத்திரனவைச் சந்தித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்ட சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக தரிசு நிலங்கள் காடாக கிடக்கும் தோட்டக் காணிகளை இளைஞர்களுக்கு வழங்கி சுயதொழில் முயற்சிகளில் அவர்களை ஊக்குவிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.  

அத்துடன் வருமானப் பகிர்வுமுறையில் தொழிலாளர்களுக்கு தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளித்து அதன் மூலம் தேயிலை தோட்டங்களை அபிவிருத்தி செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மூடிக்கிடக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளை மீள் இயங்கச் செய்தல், தற்காலிக தொழிலாளர்களை (180நாட்களுக்கு மேல் வேலை செய்யும்) நிரந்தரமாக்கல் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை நல்ல யோசனைகள் தான். பெருந்தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள பெருந்தோட்டக் கம்பனிகள் இதற்கு எந்தளவு ஒத்துழைப்பு வழங்கப் போகின்றன என்பதைப் பொருத்தே பெறுபேறுகள் அமையும் என்பதே கடந்தகால அநுபவம் என்பதை மறந்து விட முடியாது. விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொள்ள பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தொண்டமான் கேட்டுக் கொண்டுள்ளார்.  

அத்துடன் மலையக புத்திஜீவிகள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளில் மலையக இளைஞர் யுவதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஏனெனில் மலையகத் தலைமைகளின் அழுத்தம் மந்தமாகும் பட்சத்தில் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்படும் அச்சம் எழாமல் இல்லை. ஊடகத் தகவல்களின்படி சமுர்த்தி பயனாளிகள் குடும்பம் அரசு உதவித் தொகைபெறும் குடும்பங்கள் பற்றியே அதிகம் கவனம் செலுத்தப்படலாம் என்று தெரிகின்றது. அவ்வாறு நிகழுமாயின் மலையக இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்புகள் கிடைப்பது சந்தேகமே. ஏனெனில் பெருந்தோட்டகளில் சமுர்த்தி பயனாளிகள் குறைவதுபோலவே அரசு உதவித் தொகை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவே!  

எனவே இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவதானம் செலுத்த வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் என்பது சாதாணமான சங்கதி அல்ல. பெறுமதிமிக்கவை. அரசு தொழில் வாய்ப்புகளில் இருந்து திட்டமிடப்பட்ட ரீதியாக  புறக்கணிக்கப்பட்டு வந்த நிலை இனியாவது மாறவேண்டும். அவர்கள் இந்நாட்டுக்கு அந்நியர்கள் அல்ல. 200வருடகாலம் இந்நாட்டின் பொளாதார அபிவிருத்திக்காக தலைமுறை தலைமறையாக தம் உடல் பொருள் ஆவியினை இழந்து கொண்டிருப்பவர்கள்.  

இவர்களை மனித நேயத்துடன் நடத்துவது அவசியமானது. தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டுள்ள இவர்களுக்கு பிற சமூகங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்களும் வழங்கப்படுவதே  சமத்துவமான அணுகுமுறை. இதனை நாடு புரிந்துகொள்ள வேண்டும். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தமது ஆளுமையால் அனைத்தையும் சாதிப்பார் என்றே மக்கள் நம்புகின்றார்கள்.    

பன். பாலா

Comments