கவியுலகிற்கோர் "கவிதைச் சிறகு " | தினகரன் வாரமஞ்சரி

கவியுலகிற்கோர் "கவிதைச் சிறகு "

இது வீதிக்கொரு கவிஞனென்று கவிஞர்கள் அதிகரித்த காலம். அந்தக் காலத்தில் கவிதையுலகில் பெயர் போனவர்களை நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை. 1970களில் கிழக்கின் கல்முனையில் கவியரங்கக் கவிதைகள் கோலோச்சிய காலத்தில் எம்.ஏ. நுஃமான் முதலானோரோடு கவிதை எழுதிப் பெயர் பெற்றவர்தான் டாக்டர் தாஸிம் அகமது என்கிற குறிப்போடு, கவிதைச் சிறகு என்கிற கவிதை நூலை எழுதியிருக்கின்ற மூத்த இலக்கியவாதி. கொழும்பு வகவத்தின் தந்தையும் கவிஞரும், பாடலாசிரியருமான தாஸிம் அகமது பற்றிய ஒரு குறிப்புரையின் ஆரம்பத்தில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறை பேராசான், பேராசிரியர் றமீஸ் அப்துல்லா வழங்கியிருக்கிற குறிப்புரையொன்றே நாம் மேலே குறிப்பிட்டதாகும்.  

வெள்ளையில் ஒரு புள்ளி, சுழற்சிகள், கண்திறவாய், ஆசுகவி போன்ற நூல்களோடு இஸ்லாமியப் பாடல்கள் அடங்கிய இறுவட்டினையும் கலைக்கமல் குரலில் பாடி அதனை வெளியிட்டிருந்தார். இவ்வாறு கொழும்பில் இருந்து கொண்டு தமிழுக்குத் தமிழ் ஊட்டிக்கொண்டு அமைதிப் புறாவாக ஆரவாரமின்றி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிக்கொண்டும் வருகின்ற தாஸிம் அகமது, கவிதைச்சிறகு என்கிற கவிதை நூல் ஒன்றினை அண்மையில் வெளியீடு செய்திருந்தார். நீண்டகாலமாக கவிதைகள் பலவற்றை எழுதி வருகின்ற அக்காலக் கவிஞர்களுள் முக்கியமானவராக திகழ்கின்ற தாஸிம் இந்நூலை காப்பியக்கோ ஜின்னா ஷரிப்புத்தீன், தமிழ்மாமணி கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் அல் அஸூமத் போன்றோருக்கு சமர்ப்பித்திருக்கின்றார்.  

எழுபத்திரண்டு தலைப்புக்களில் மிகக் கச்சிதமான முறையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் காணப்படுகின்ற இக்கவிதைகள் வாசிப்பதற்கும், அதன் உட்கிடைக் கருத்துக்களும் பிரயோசனமானதாகக் காணப்படுவதும் இதன் மற்றுமொரு விசேட தன்மையாகும். கவிஞன் தன் வாழிடத்தையும், தன்னோடு ஒட்டியிருக்கிற தொழில் துறைகளையும் இணைத்தே கவிதை பாடவேண்டும். கவிதை என்பது தன்னுள்ளே இருக்கின்ற பலதரப்பட்ட எண்ணக் குமுறல்களை நாசுக்காக நாலுவரியில் அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் கூறுவதாகும். அந்த வகையில் நமது கவிஞர் தன்னுடைய இலக்கியப் பயணத்தில் தடம்பதித்தவைகள், தடத்திற்கு காரணமாய் அமைந்தவர்கள், வைத்தியத்துறையோடு சார்ந்தவற்றையெல்லாம் இணைத்து சாகசமாய் கவிவரி எழுதி அதற்கு சிறகு முளைக்கச் செய்து, கவிதை எனும் வெளியில் அதனைப் பறக்கவிட்டிருக்கிறார் என்றே கூறவேண்டியிருக்கிறது.  

பொதுவாகக் கூறுகின்றபோது, கவிதையானது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படுவதாகும். இதில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படும். புதுக்கவிதை என்பது மரபுக்கவிதையைவிட ஒரு சில கூறுகளில் மாறுபட்டதாகும். பாடுபொருள், உள்ளடக்கம், வடிவம் என்ற முக்கிய கூறுகளில் வழிதான் மாறுப்பட்டுத் தெரிகின்றது. புதுக்கவிதை எனப்படுவது உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமையைக் கொண்டுள்ளமை முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு இலக்கியக் கடலினுள் தன்னை முழுமையாக ஆட்கொண்டுள்ள இந்நூலின் சிறப்பம்சமாக பல்வேறு கவிதைகளைக் கூறலாம்.  

ஹைக்கூ கவிதைகள் பலவும் இந்நூலில் காணப்படுகின்றன. நிலவே உன்னைப் பாடுவதை நிறுத்திக் கொண்டோம் மறைக்கின்றனவே யுத்த மேகங்கள் என்கிறார் கவிஞர். இன்னுமொரு இடத்தில் எதிரியின் பிணத்தை மெல்லத் தூக்கு பாவம் அடியில் புழுக்கள் இவ்வாறு ஜப்பானிய ஹைக்கூவுக்குள்ளும் சில வருடல்களோடு கருத்தாழம் மிக்க கவிதைகள். 1969காலப்பகுதியில் தினபதி கவிதா மண்டலம் பக்கத்தில் அன்று எழுதிய கவிதையும் இதனுள் காணப்படுகிறது. அந்நாளில் எனும் தலைப்பில் இவ்வாறு கூறுகின்றார்.  

முதுமை என்னைத் தொடர்கிறது  

மூச்சின் வேகம் குறைகிறது  

புதுமை நிலைகள் அத்தனையும்  

தூசாய் எனக்குத் தெரிகிறது  

இதுவே யுலகம் என்றனுக்கு  

என்னும் எண்ணம் திரைகிறது.. என்று அக்கவி வரிகள் செல்கின்றன.  

கவிதைக்கு மொழியென்று ஒன்றும் கிடையாது. கிராமிய மொழிநடையில் கன்றுகளை இழந்த பசுக்கள் எனும் தலைப்பில் இவ்வாறு எழுதியிருக்கின்றார்.  

உள்ளதும் ஒர் புள்ளயப் பறி

குடுத்துட்டேனே இந்தப்  

பழி ஆர் ஆரச் சேருமோ  

அல்லாட பிச்சையா எண்ட புள்ள

போனத்த எப்படி நம்புற  

எல்லாம் மின் வெட்டி மறஞ்சாப்போல..  

சின்னத்தம்பிக் காக்கா  

கணகாட்டுப் பொறுக்காம

பச்சத்தண்ணியும் குடிக்காம  

வெறுங்குடலோட வெளிக்கிட்டுப் போன மகனாரு என்கிற தாய் தன் மகனின் மரணம் குறித்து விளம்புகின்ற பாடல் வரிகளிவை. கிராமிய மணம்தொட்டுச் செல்கின்றன.  

இக்கவிதை நூலினுள் இன்னும் சில விசேட கவிகளும் உண்டு. மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட், சிவகுருநாதன், முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா பற்றிய கவிதை, கொழும்பு வகவத்தில் பாடியவை, கல்முனையில் அக்காலங்களில் பாடியவை, பல்வேறு மேடைகளில் பாடியமை, இன்னும் பலவற்றைத் தாங்கிய இந்நூல் பற்றியும், நூலாசிரியரான தாஸிம் அகமது பற்றியும் தனது வாழ்த்துரையில் நீர்வேலி,  இ.முருகையன் இவ்வாறு கூறுகின்றார்.  

தாஸிம் அஹமதுவைச் சந்தித்தேன் அண்மையிலே! பேசுகிற பாணியினாற் பிழி ந்துவிட்டார் நெஞ்சகத்தை ஓசை பிசகாத உன்னத யாப்பதுடன் மாசேதும் இல்லாத மனப்பான்மை பூண்டிருப்பார்என்று தொடர்கிறது அக்கவிதை வரிகள். நூலாசிரியர் நேசமுள்ள வாசகர்களுக்கு எனும் தலைப்பில் நீண்ட விளக்கவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார். 1960களில் எம்.ஏ. நுஃமானின் ஏற்பாட்டில் கல்முனை பட்டினசபை மண்டபத்தில் நடைபெற்ற கவிதையரங்களில் கலந்து கொண்டு கவிதை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது எனக்கு வயது 18. அந்த வயதிலேயே கவிதை அரங்கில் மரபுக் கவிதை எழுதி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தமையை எண்ணிப் பார்க்கும் போது இப்போது வியப்பாயிருக்கிறது என்கிறார் .  

மொத்தத்தில் கவிதைகளுக்குச் சிறகு இருக்கிறது என்பதை இதன் மூலமாக நிருபித்திருக்கும் கவிஞர் நிறைவான ஆளுமை கொண்ட ஒருவர். அன்புசெலுத்தி வயது வித்தியாசமின்றி வரவேற்கும் பக்குவத்தில் அவருக்கு அவரே நிகர். தாஸிமின் கவிதைச் சிறகு என்றைக்கும் கவிதை வானில் சிறக்கடித்துக் கொண்டே இருக்கும். எல்லாம் நிறைவாக அடக்கப்பட்டுள்ள இத்தொகுப்பின் அட்டைப்படமும் இறகுகளால் வரித்துக் கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். அவருக்குள்ளே இருக்கும் கவிதைச் சுரங்கம் இன்னும் பல நூல்களை வெளியிடுவதற்கு தன்னைப் திடப்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் வழங்க வேண்டும். அவரின் கவிதைகள், பாடல்கள் என்றுமே ஆலோசனைகளை முன்வைக்கக் கூடியவை என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

Comments