அடிப்படை வசதிகளற்ற பூர்வீக தமிழ் பிரதேசம் பன்குளம் | தினகரன் வாரமஞ்சரி

அடிப்படை வசதிகளற்ற பூர்வீக தமிழ் பிரதேசம் பன்குளம்

திருகோணமலை மாவட்டத்தின் அனுராதபுர வீதியில் 24கிலோமீற்றர்  தொலைவில் உள்ள தனிப்பிரதேச செயலகமே இந்த பன்குளம் ஆகும். இப்பிரதேசத்தில்  உள்ள குளங்களில் பாய் பின்னுவதற்கு தேவையான ‘பன்’ புல் அதிகமாக  காணப்படுவதனால் பன்குளம் என்ற காரணப் பெயரால் இப்பிரதேசம்  அழைக்கப்படுகிறது. 

இக்கிராமத்தின் பூர்வீகம் பற்றி விளக்கிறார் பன்குளம் பிரதேச  சபையின் உறுப்பினரும் இப்பிரதேசசத்தின் பூர்வீக குடியிருப்பாளருமான  தங்கராஜா ராஜமணி (வயது-74) 1960ம் ஆண்டுக்கு பின் பனிக்கட்டி முறிப்பு  எனும் பெயரிலேயே இங்கு பிரதேச சபை இருந்து வந்தது. 

அப்போது பன்குளம் கோயிலடி, மயிலக்குபாவெவ, குமுக்வெவ,  ஆணைகட்டி, ரொட்வெ போன்ற பகுதிகளில் தமிழ் சிங்கள முஸ்லிம் குடியேற்றங்கள்  இருந்து வந்துள்ளது.  பிரித்தானிய கடற்படையில் பணியாற்றியவர்களில் 75  வீதமான தமிழர்களுக்கும் 25வீதமான சிங்கள மற்றும் இஸ்லாமியர்களுக்குமாக  4200ஏக்கர் காணி வழங்கப்பட்டது. இக்காணியில் 3ஏக்கர் வயல் காணியும் 1  ஏக்கர் வீட்டுக் காணியும் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். 

திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களைச்  சேர்ந்த பிரித்தானிய கடற்படையில் பணியாற்றியவர்களுக்கு இவை வழங்கப்பட்டன.  

பன்குளம் பிரதேசம் 1990ம் ஆண்டுக்கு பின் மொறவெவ என்ற  சிங்களப் பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. பிரதேச செயலகம் பிரதேசசபை  வைத்தியசாலை போன்ற பெயர்கள் மொறவெவ என்றும் தபால் நிலையம் மற்றும் கமநல  அபிவிருத்தி நிலையம் என்பன பன்குளம் என்ற பெயர்ப் பலகையினையும் தாங்கி  நிற்கின்றன. பன்குளம் என்ற பெயர் மருவி மொறவெவ எனும் பெயர் படிப்படியாக  உபயோகத்துக்கு  இப்பிரதேசத்தின் பூர்வீகம் தொடர்பாக அவர் தெரிவித்தார். 

பன்குளம் பிரதேச சபை எல்லைக்குள் பல கிராமங்கள் உள்ள போதும்  சாந்திபுரம் எனும் கிராமத்தை நாம் அவதானிப்போமானால் ஏனைய கிராமங்களின்  பிரச்சினையை இதன் மூலம் ஊகிக்க முடியும். 

குடிநீர்ப் பிரச்சினை 

இக்கிராமத்தில் குளங்கள் பல காணப்படுகின்ற போதும் சீரான  குழாய் மூலமான குடிநீர் திட்டம் இல்லை அதற்கான நடவடிக்கைகள் பல  மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் குழாய் மூலமான மிகவும் அத்தியாவசியமான குடிநீர்  வசதி இன்னும் இக்கிராமத்திற்கு எற்படுத்தப்படவில்லை. இதனால் குடிநீரால்  ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு இக்கிராம மக்கள் முகம் கொடுத்து வந்துள்ளனர். 

எனவே,  மாரிகாலத்தில் கூட கிணறுகளில் உள்ள தண்ணீர்  குடிப்பதற்கு உகந்ததல்லாமல் போய்விடுகிறது.

கோடை காலத்தில் கிணற்று நீர்  வற்றி விடுகின்றது. தற்போது கடற்படையின் மேற்பார்வையில் ஆரோ பிளான்ட் ஒன்று  நிறுவப்பட்டுள்ளது அதில் சிலர் குடிநீரைப் பெற்று வருகின்றனர். எனினும்  அவையும் நிலத்தடி நீரையே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன. கோடையில்  நிலத்தடி நீர் வற்றும் போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. 

வாழ்வாதார தொழில் 

விவசாயம் செய்வதற்கு சிறந்த பிரதேசமாக காணப்படுகின்ற போதிலும்  காலத்திற்கு விதைப்பு செய்து காலத்திற்கு அறுவடை செய்யும் மரபு குறைந்து  வருகின்றது. இதனால் வாய்கால்களில் நீர் திறப்பதில் சிக்கல்கள்  காணப்படுகின்றது. மேலும் பயிர்கள் நோய்தாக்கத்திற்கும் இயற்கை அழிவுக்கும்  உள்ளாகி வருகின்றது.இது தொடர்பான வழிகாட்டல் கடந்த காலங்ளைப் போல விவசாய  போதனா அசிரியர்களால் தற்போது வழங்கப்படுவதில்லை சிறந்த வயல் மற்றும்  தோட்டக் காணிகள் நீர் வளம் என்பன இருக்கின்ற போதும் தம்புள்ளை மரக்கறியை  எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலை தற்போது காணப்படுகிறது. எனவே விவசாயம்  தொடர்பான சீரான அறிவித்தல் இல்லை என்பது இப்பகுதி விவசாயிகளின் கருத்தாக  காணப்படுகின்றது. 

மேலும் இங்கு கால்நடை வளர்ப்பு சிலரால் மேற்கொள்ளப்பட்டாலும்  அதற்கான மேச்சல் தரை ஒதுக்கப்படாத காரணத்தால் பட்டிகளிலேயே ஆடு மற்றும்  மாடு வளர்ப்பு இடம் பெறுகின்றது. எனவே இத்தொழிலும் விருத்தியடையாது  காணப்படுகின்றது. 

இதனால் 200குடும்பங்களுக்கு குடியிருப்பும், வயல் நிலங்களும்  பதிவினையும் கொண்டுள்ள மக்களில் 80குடும்பங்களே நிரந்தர  குடியிருப்பாளர்களாக உள்ளனர். ஏனையோர் தொழிலுக்காகவும் பிள்ளைகளின்  கல்விக்காகவும் நகரத்திலும் வேறு சில மாவட்டங்களிலும் வாழ்ந்து  வருகின்றனர்.

1990ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகத்திற்கு சென்றவர்கள் திரும்பி  வராமல் அங்குள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும் அறிய முடிகிறது 

வீதிப்புனரமைப்பு 

இக்கிராமத்தில் கடந்த அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மூலமாக  குறுக்கு வீதிகள் சில புனரமைக்கப்பட்டிருந்த போதும் பிரதான வீதி குண்டும்  குழியுமாக கிரவல் வீதியுமாகவே காணப்படுகின்றது. பாரிய வீதி அபிவிருத்தி  திட்டம் மூலம்  இவ்வீதி புனரமைக்கப்படும் என்று அதிகாரிகளும்  அரசியல்வாதிகளும் தெரிவித்த போதும் இவ்வீதி இன்று வரை புனரமைக்கப்படவில்லை  என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

எனவே பூர்விக தமிழ் எல்லைக்கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு  அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என திட்டங்கள்  தீட்டும் போதும்  அபிவிருத்தி செய்யும் போதும் இவர்களின் வாழ்வாதாரமும் அதன் நிலைபேறு  தன்மையும் ஆராயப்பட வேண்டும். மேலும் வாழ்வாதாரம், குடிநீர், வீதி  அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதிகளும் எதிர்வரும் காலங்களில் சிறப்பாக  முன்னெடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என இக் கிராம  மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

வடமலை ராஜ்குமார்

Comments