கலாசார அடையாளங்களால் அழிக்கப்பட்ட பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

கலாசார அடையாளங்களால் அழிக்கப்பட்ட பெண்கள்

எனக்கு நீ அடிமை, உன்னை நான் வென்றுவிட்டேன் என்று பிறர் உணர வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? உங்கள் சொத்துக்களையோ, உங்களின் உடைமைகளையோ அல்லது உங்களையோ தாக்க மாட்டார்கள்.

உங்கள் வீட்டுப் பெண்களை அம்மா, மனைவி, அக்கா, தங்கை, மகள் இவர்களில் யாரையாவது வந்து நிர்வாணப்படுத்துவர், பாலியல் வன்புணர்வு செய்வர், கொடூரமாக உறுப்புகளை சிதைத்து கொலை செய்வர்.

இதை இல்லையென்று மறுக்கவே முடியாது. ஏனென்றால் வரலாற்றில் இச் சம்பவங்கள் உண்மையாக நடந்திருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல இலட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவ் வரலாற்று கொடூரங்களில் ஒன்று தான் இந்தியா- -- பாகிஸ்தான் பிரிவின் போது ஏற்பட்ட சம்பவம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. பாகிஸ்தான் தனி நாடு என்று அறிவித்த பிறகு நடைபெற்ற சம்பவங்களாகவே இவை கருதப்படுகிறது.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். அதற்கான போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்தது. இதனால் ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே இந்தியா - பாகிஸ்தான் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

பிரிவினையில் ஹிந்து முஸ்லிம் பிரச்சினை மிகத் தீவிரமானது. காரணம் எதுவும் தேவையாய் இருக்கவில்லை. அவன் ஹிந்துவா அப்படியானால் அவன் என் எதிரி அவனைக் கொல்ல வேண்டும் என்று கொக்கரித்தான் ஒரு முஸ்லிம். அதே போலத்தான் இங்கேயும் முஸ்லிம் என்றால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று கிளம்பினார்கள்.

இந்த வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் கலாசாரத்தின் ஓர் அடையாளமாக பார்த்தார்கள். பெண்களை தாக்குவது மூலமாக அவர்களின் கலாசாரத்தையே குலைத்து விட்டதாக பெருமை கொண்டார்கள்.

உன்னை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே என் இலக்கு என்று இறங்கியவர்களுக்கு சிறுமியா, கர்ப்பிணியா, வயது முதிர்ந்தவளா என்று எதுவும் பார்க்கத் தெரியவில்லை. எதிரி நாட்டிலிருந்து வந்திருக்கிறாள். அவளை சிதைத்தாள் அவர்களின் கலாசாரமே குலையும்.

எப்படியும் இறக்கத்தானே போகிறாள் அதற்கு முன்பாக அவளை ஒரு முறை பாலியல் வன்முறை செய்து விடலாம் என்று களமிறங்கினார்கள். பெண்களை களங்கப்படுத்துவது மூலம் எதிராலியின் மதத்தை களங்கப்படுத்தியதாக நினைத்தார்கள். இதற்கு பாலியல் வன்முறை மட்டும் தீர்வல்ல வாழ்நாள் முழுதும் அந்த வடு அவர்களுடனே இருக்க வேண்டும் என்று நினைத்து சில கொடூரங்களையும் நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமிய பெண்களின் உடலில் சூலத்தை, சக்கரம், ஓம் என்ற அடையாளத்தை பொறித்தார்கள். ஹிந்துப் பெண்களின் மார்பகங்களில் பிறை நட்சத்திரத்தை பொறித்தார்கள்.

இந்த கொடூர நிகழ்விலிருந்து கர்ப்பிணிப்பெண்கள் கூட தப்பிக்கவில்லை. நடுவீதியில் இழுத்து வரப்பட்டு கருவில் இருக்கும் குழந்தை வெளியில் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்கள் கர்ப்பிணிப்பெண்கள். என் எதிர்கால எதிரியை கொன்று விட்டேன் என்று கொக்கரித்தான் அந்த கொலைக்காரன். என் வம்சம் உன் வயிற்றில் வளர்வதன் மூலம் உன் மதம் அழியட்டும் என்று கத்திக் கொண்டே எதிரி நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தார்கள்.

பாலியல் வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாமல், மிகவும் கொடூரமாக பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட சிதைந்த நிலை. அத்தோடு இலட்சக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டார்கள், கட்டாயத்திருமணம் செய்து அடிமைகளாக வைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

எதிரி நாட்டினரால் திடீரென்று கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரத்தை தாண்டியது.

அரசாங்கம் அந்தப் பெண்களை மீட்க, காப்பாற்ற அவசரச் சட்டமும் கொண்டு வந்தது. சரி, அரசாங்கத்தின் திட்டப்படி மீட்கப்படும் பெண்களை என்ன செய்வது எங்கே பாதுகாப்பது.

நீ இன்னொருவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறாய், அவன் உன்னை புணர்ந்த நேரத்தில் உன் உயிர் பிரிந்திருக்க வேண்டாமா இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய் என்று சொல்லி எதிரி நாட்டினரிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களை இங்கே யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே பல பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

பக்கத்து தெருவில் எதிரி நாட்டினர் நுழைந்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்களை கடத்திப் போகிறார்களாம் என்ற புரளி பரவ இங்கே தன் வீட்டுப் பெண்களை வரிசையாக நிற்க வைத்து கிணற்றில் தள்ளியோ அல்லது கழுத்தை நெரித்தோ கொன்று விடுவார்கள்.

எங்கள் வீட்டுப் பெண் என் கையால் இறந்துவிட்டாள். அவள் எதிரியின் கைகளில் சிக்கவில்லை எங்கள் குலப்பெருமையை காப்பாற்றிவிட்டோம்  என்ற மகிழ்ச்சியில் அவர்கள் தங்களின் தாய், மனைவி சகோதரிகள், மகள் ஆகியோரை கொன்று குவித்தனர். இப்படியான புரளியால் மட்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே கொன்று குவிக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட இலட்சக்கணக்கான பெண்கள் இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டார்கள். அதேயளவு பெண்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஏராளமானோர் மனநலம் குன்றி தெருக்களில் அனாதைகளாக திரிந்தார்கள்.

இவை வரலாறு எமக்கு விட்டுச் சென்ற மாறா வடுக்களாகும். பெண்களை கலாசாரம், சம்பிரதாயங்களின் உரிமைகளாக கற்காலம் தொட்டு பார்க்கப்பட்டு வருவது இன்றும் தொடரும் அவலங்களாகும். பெண்கள் வெறும் பண்டங்களாகவே பார்க்கப்படுகின்றனர். பெண்களுக்கான கொடூரங்களும் கொலைகளும் இன்று தொடர்கதையாகவே இருக்கிறது. இவ்வாறான வரலாற்று தவறுகளை இனியும் நிகழ விடாது தடுக்கும் மன திடத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

Comments