கல்முனையிலும் சுவரோவியங்கள்... | தினகரன் வாரமஞ்சரி

கல்முனையிலும் சுவரோவியங்கள்...

சுவரைக் கண்டால் அதில் விளம்பரங்களை ஒட்டி அல்லது அதில் எதாவது கிறுக்குவோரையே​ நாம்  கண்டு வந்திருக்கின்றோம். ஆனாலும் 'சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்'  என்னும் நமது முன்னோர்களின் வாக்கினை நாம் யாரும் கண்டு கொண்டதில்லை. 

நாட்டின் தலைவராக வருகின்றவர் அந்நாட்டினை அழகு பார்க்கும்  கலையுணர்வு மிக்க செயற்பாட்டாளராக இருப்பது வேகமான  உலக இயங்கியலில்  புதினமான செய்திதான். ஆனாலும் நமது நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற  ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அண்மைக்கால செயற்பாடுகள் கட்சி  அரசியலுக்கு அப்பால் அவதானிக்கக்கூடியவையாக  மாறிவருகின்றன. 

அதில் ஒன்றுதான் அவரது எண்ணத்தில் உதித்த நாட்டை அழகு படுத்தல் எனும்  தேசிய திட்டத்தின் கீழ் தீவு முழுவதும் சுவரோவியம் வரையும்  செயற்றிட்டமாகும். 

கடந்த வருடம் முதல் கல்முனைப் பிரதேசத்தில் தமிழ்-, முஸ்லிம் பாடசாலை  மாணவர்களிடையே 'போதை ஒழிப்பு' செயற்றிட்டத்தை போட்டி நிலை எழுத்தாக்கச்  செயற்பாடாக முன்னெடுத்த ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷன் கிழக்கு மாகாணத்தின்  வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்முனைக்குடி சாகுல் ஹமீட் வலியுள்ளாவின்  கொடியேற்றப் பள்ளி முன்றலில் இதனை நடைமுறைப் படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும். 

அவுஸ்திரேலிய குடிவரவு ஆலோசகர் சட்டத்தரணி மர்யம் மன்சூரின் வழிகாட்டலின்  கீழ் கடல் வளத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட இப்பிரதேச மக்களுக்கு கடல் வளத்தைப்  பாதுகாப்பதன் அவசியத்தையும் போதை ஒழிப்பு விழிப்பூட்டலையும் எண்ணக்  கருவாகக் கொண்டு இரு தள நோக்கில் இவ் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

வருடம் ஒன்றிற்கு 8மில்லியன் பிளாஸ்றிக் கழிவுகள் கடலில்  கொட்டப்படுவதாகவும் கடல் மாசடைவதற்கான 80வீத காரணம் மனிதர்களின்  செயற்பாடுகளே என்றும் ஐ.நா உறுதி செய்துள்ளது.

இதனை மையப்படுத்தியதாகவே  இச் சுவர் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது  இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓரு ஆண்டுக்கு 5இலட்சம் கோடி  ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடந்தேறுகின்றது. 

போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை  ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இலங்கையின்  சட்டத்துறைக் கட்டமைப்பும் அரசாங்க ஒழுங்கமைப்புக்களும் அண்மைக்காலத்தில்  போதையை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு அரும்பாடுபட்டு வருகின்றன. இதனை  மக்கள் மத்தியில் பதிய வைப்பதே  இச் சுவர் ஓவியத்தின் மற்றுமொரு  நோக்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களைத் தவறான வழிகளில் திசை திருப்பி தம் அரசியல் இலக்குகளை அடைய  எத்தனித்து வந்த ஆட்சியாளர்கள் மத்தியில் கலையார்வமும் திறனும் கொண்ட  இளைஞர் சமுதாயத்தை நன்னோக்கமுள்ளவர்களாக மாற்றும் ஜனாதிபதியின் இச்  செயற்றிட்டம் எதிர்கால சமுதாயத்திற்கு முன்மாதிரியும் எடுத்துக்  காட்டுமாகும். 

இன ரீதியான விடயங்களை வெளிப்படுத்தவே இச் சுவர் ஓவியத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகக் கண் கொண்ட பார்வையாளர்களுக்கு  முற்றுப்புள்ளி வைத்து அவரவர் பிரதேசத்தின் சுவர்களை தாங்கள் விரும்பும்  கருப்பொருளில் வடிவமைக்கும் சுதந்திரம் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு  உண்டு என்பதை பறைசாற்றும் வகையில் கிழக்கின் முதலாவது சுவர் ஓவியம்  கல்முனை முஸ்லிம் இளைஞர் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டிருப்பது  வரவேற்கத்தக்க அம்சமாகும். 

ஓவியங்களுக்கு மனதைக் கவரும் சக்தியும் குளிர்ச்சிமிக்க மனநிலையை  வரவழைக்கும் திறனும் உண்டு. அசிங்கமாகவும் வெற்றிடமாகவும் கிடக்கும்  சுவர்களில் பிரத்தியேக வகுப்பு நிலையங்களும் வர்த்தக நிறுவனங்களும் 'விளம்பரம் ஒட்ட  வேண்டாம்' என்னும் வழமையான அறிவுறுத்தல்களை கவனத்திலெடுக்காது செயற்படும்  கடந்த கால செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவே சுவர்களை  அழகுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. 

ஜனாதிபதியின் இத்திட்டத்தில் இணைவதன் மூலம் சுவர்களைப் பாதுகாக்கவும்  அழகுணர்சியினைப் பெறவும் முடியும் என்பதுடன் பொறுப்புணர்ச்சி மிக்க  இளைஞர்களையும் உருவாக்கலாம் என்பதும் எமது திண்ணமாகும்.

ஜெஸ்மி எம்.மூஸா

Comments