கொழும்பு துறைமுக நகரம் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பின் தற்போதைய வர்த்தக மைய விஸ்தரிப்பாக 1.4பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய நகர அபிவிருத்தியாக கொழும்பு துறைமுக நகரம் மாறியிருக்கிறது. இத்திட்டம் பூர்த்தியடையும்போது 15அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 269ஹெக்டயர் விஸ்தீரனத்தைக் கொண்டுள்ளதுடன் தற்போதைய வர்த்தக மைய மாவட்டத்துடன் இணைந்ததாக கடலிலிருந்து நிலத்தை மீளப்பெறும் ஒரு செயற்திட்டமாக அமைந்துள்ளது.  

நிதியியல் மாவட்டம், மத்திய பூங்கா வாழ்விடம், சர்வதேச தீவு, கப்பல் தொகுதி மற்றும் தீவக வாழ்விடம் என பல அம்சங்களைக் கொண்ட ஒரு செயற்திட்டமாக கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ளது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி செயற்திட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் 5.7மில்லியன் சதுர மீற்றர் விஸ்தீரனம் கொண்ட கட்டட வசதியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. A தர வகுப்பு அலுவலகங்கள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாச விடுதி, கப்பல் தொகுதி, சில்லறை வர்த்தக மையங்கள், ஹோட்டல்கள் என தெற்காசியாவின் மையமாக இந்த துறைமுக நகரம் மாறவுள்ள கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் ஆரம்பம் முதல் இதுவரை எவ்வித விபத்துகளுமின்றி 12மில்லியன் மணித்தியாலங்களை பாதுகாப்பாக கடந்துள்ளது.

இத் திட்டத்திற்காக 2.4மில். தொன் கற்கள், 650தொன் இரும்பு, 7.19மில். லீற்றர் டீசல், 1500விநியோகத்தர்கள் என உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக நகரத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கொழும்பு துறைமுக நகரத்தின் தாய் நிறுவனமான China Communications Constructions Company நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது சமூகப் பொறுப்புணர்வு அறிக்கை இதுவாகும். இந்த அறிக்கை கடந்த 13ஆம் திகதியன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சூயுவான், நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்கிரம, துறைமுக நகரத்தின் திட்டப்பணிப்பாளர் நிஹால் பெர்னாண்டோ மற்றும் CCCCயின் பிரசார தலைவர் லியூ யான், China Harbour Engineering Company இன் பிரதி முதல்வர் ஹுவாங் யோங்கே மற்றும் CHEC Port City Colombo இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜியாங் ஹவ்லியாங் ஆகியோர் கலந்துகொண்டனர். 

2014செப்டம்பர் முதல் 2019நவம்பர் வரையான காலப்பகுதியை உள்ளடக்கி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் பல்துறை சார்ந்தோர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் ஆவணப்படுத்தியுள்ளது. தெற்காசியாவில் உலகத்தரம் வாய்ந்த நகரமாகவும் மிகவும் வலுவான பொருளாதார மையமாகவும் கொழும்பு துறைமுக நகரத்தை கட்டியெழுப்புவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுக்கேற்ப தலைசிறந்த உட்கட்டமைப்பு, காணிப்பெறுமதி மேம்பாடு, நகர அபிவிருத்தியை ஊக்குவித்தல் மற்றும் நிலையான தொழில்வாய்ப்புகளை வழங்குதல் அடங்கலாக இலங்கையில் பொருளாதார மற்றும் சமூகப் பயன்களை CCCC உறுதி செய்யும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கட்டுமானப் பொருட்கள் முதற்கொண்டு அலுவலகப் பொருட்கள் வரையில் உள்நாட்டுப் பாகங்கள் மற்றும் உள்நாட்டு மயப்படுத்தப்பட்ட கொள்வனவுகளுக்கு முன்னுரிமையளித்து, தகுதி வாய்ந்த உள்நாட்டு வழங்குனர்களுடன் நீண்டகால பங்குடமைகளை நிறுவனம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 1,500உள்நாட்டு வழங்குனர்களை முறையாகப் பயிற்றுவித்து, சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு கொழும்பு துறைமுக நகரம் அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த மாபெரும் செயற்திட்டத்தைத் திட்டமிட்டு, வடிவமைத்து, நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு வடிவமைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 8,000உள்நாட்டவர்களுக்கு நேரடியாக நிலையான தொழில் வாய்ப்புக்கள் நிறுவனத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.  

பொறியியலாளர் முதல் நிர்வாகி வரை உயர் திறனும், சிறந்த அனுபவமும் கொண்ட ஊழியர்களை நிறுவனம் அறிவுபூர்வமாக வளர்த்தெடுத்துள்ளது. வேலைத்தள செயன்முறை விளக்கங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பயிலுனர்களுக்கிடையில் இடைத்தொடர்பு, நுண்ணறிவு அடிப்படையிலான அறிவுப் போட்டிகள் அடங்கலாக வருடாந்த பணியாளர் பயிற்சித் திட்டங்களை தீவிரமாக ஊக்குவிப்பதிலும் கொழும்பு துறைமுக நகரம் ஈடுபட்டுள்ளது. 2019ஒக்டோபரின் முடிவில் 620பேரின் பங்குபற்றலுடன், 16பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பயிற்சிகளுக்காக 37மில்லியன் ரூபா (203,000அமெரிக்க டொலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 90%இத்தேவைகளுக்காக சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தின் மூலம் சமூக அபிவிருத்தியை ஊக்குவித்து, உள்நாட்டில் வாழ்வாதாரம் சார்ந்த தேவைகள் மற்றும் மேம்பாட்டை கண்காணித்து உள்நாட்டு சமூகத்திற்கு கண்கூடான நன்மைகளை வழங்குவதே கொழும்பு துறைமுக நகரத்தின் நோக்கமாகும். நீர்கொழும்பு பகுதி மீனவர்களின் கஷ்டமான வாழ்வியல் நிலைமைகள் தொடர்பான விபரங்களைத் திரட்டிய பின்னர், இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற ஸ்தாபனங்களுடன் ஒன்றிணைந்து மீனவர் வாழ்வாதார மேம்பாட்டுச் செயற்திட்டத்திற்காக ரூபா 550மில்லியன் தொகையை நிதியுதவியாக வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. நீர்கொழும்பு பகுதிகளிலுள்ள கிட்டத்தட்ட 15,450மீனவர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர் சமூகங்களுக்கு 35மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து 6,000பேருக்கு சேவைகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது. நிதியுதவிகளை வழங்குவதற்காக நீர்கொழும்பு முதல் வத்தளை வரையில் 77மீன்பிடி சங்கங்களுக்கு மொத்தமாக ரூபா 154மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் மண்ணரிப்பு சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடற்கரைப் பிரதேசங்களை மறுசீரமைத்து, நீர்த்தடுப்பணைகளை நிர்மாணிப்பதற்கும் ரூபா 300மில்லியன் தொகையை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியவற்றின் பங்குடமையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளுடன் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு ரண் பூமி பேரணியை கொழும்பு துறைமுக நகரம் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. நாடெங்கிலும் 9மாகாணங்கள், 25மாவட்டங்கள் மற்றும் 1,500கிராமங்களை உள்ளடக்கிய இந்த 40நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் 10மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை ஈர்த்துள்ளது.  

பாடசாலை உபயோகப் பொருட்களை நன்கொடையாக வழங்கி, சிறப்பான கல்வியை வழங்குவதற்காகவும், கற்பித்தல் மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் கல்வி அமைச்சுடன் இணைந்து Hope செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Angels முன்பள்ளியில் வசதிகளை மேம்படுத்தல்,

உலக பல்கலைக்கழக விவாத சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்தல், கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தின் வெகுசன ஊடக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சிறுவர்களை தெரிவு செய்தல் மற்றும் உள்நாட்டில் இளைஞர், யுவதிகளை வலுவூட்டுவதற்காக NSBM Green பல்கலைக்கழகத்துடன் இணைந்து பங்குடமையை ஏற்படுத்தல் அடங்கலாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

நிர்மாண நடவடிக்கைகளின் போது காயம் அல்லது சேதாரம் மூலமான ஆபத்துக்களைக் குறைக்கும் வகையில் அனைத்து செயற்பாடுகளிலும் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் மிகவும் கவனமாக முன்னெடுத்துள்ளது. 4,224பேரின் பங்குபற்றலுடன் 192இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பயிற்சி அமர்வுகளை இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்துள்ளதுடன், எவ்வித விபத்துக்களுமின்றி சுமார் 12மில்லியன் மணித்தியாலங்கள் பணி நேரத்தை வெற்றிகரமாக அது கடந்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பி.வீரசிங்கம்

Comments