தமிழர் மத்தியில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்து | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் மத்தியில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்து

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். அவ்வாறு எனில் அதனை நாம் எவ்வளவு கவனமாக விதைத்து பயன்பெற வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலான திருமணங்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடைபெறும் ஏற்பாடாகும். ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள் நடைபெறுவதும் அதனை சட்ட ரீதியாக கொண்ட நாடுகள் உண்டு என்றாலும் இலங்கையில் அது ஏற்றுக்கொள்ளகூடிய திருமணமாக இல்லை. இலங்கையை பொறுத்த வரைக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்கள் சமய , கலாச்சார முறையில் திருமணம் நடைபெற்று அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் பதிவு திருமணமே சட்டரீதியானதாக உள்ளது. திருமணத்தை பதிவு செய்யாது தமது கலாச்சார சமய முறைப்படியாக நடைபெற்ற திருமணங்கள் சட்ட ரீதியற்றதாகவே கருதப்படுகிறது. ஊரைக் கூட்டி, மணமகன், மணமகள் வீட்டாரின் பூரண சம்மதத்துடன் நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும் சட்டரீதியாகவும் பதியப்படும். அவ்வாறான திருமணங்களின் பின்னரான அவர்களின் வாழ்க்கை தொடர்பாக பலரும் கவனம் செலுத்துவதில்லை.வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தை பொறுத்த வரைக்கும் திருமணம் செய்து வைப்பது என்பது பெரும்பாடு! அதிலும் பெண் வீட்டாரென்றால் பெரும் கஷ்டங்களை அனுபவித்தாக வேண்டும்.யாழ்ப்பாண திருமண முறையில் சீதனமும் சாதியும் செல்வாக்கு செலுத்துகின்றன. யாழ்ப்பாணத்தில் சாதியம் அதிகம் செல்வாக்கு செலுத்தும் இடம் திருமணமாகவே கல்வி கற்குமிடம், தொழில் செய்யுமிடம் என்பவற்றை விட திருமணம் எனும் போது சாதி முன்நிற்கிறது. சாதி விஷயத்தில் திருமண வீட்டார் அதில் அதிக கவனம் செலுத்தாது விட்டாலும் கூட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் சுற்றத்தார் என்போர் சும்மா இருக்க மாட்டார்கள். தோண்டிக் கொண்டே இருப்பார்கள்.மணமக்கள் இருவரும் ஒரே சாதி எனும் போது அது தொடர்பில் பேச்சுகள் எழாது. ஆனால் இருவரில் ஒருவர் சாதி குறைவாகவோ உயர்வாகவோ இருந்தால் அது ஒரு பேசுபொருளாக மாறிவிடும். சாதி பேச்சால் குழம்பிய திருமணங்கள் பல. அதனால் எத்தனையோ காதல் ஜோடிகள் சாதியினால் பிரிந்து வேறு திருமணங்கள் செய்து கொண்டுள்ளனர்.சாதி மறுப்பு திருமணங்கள் அல்லது கலப்பு திருமணங்கள் என்பது தனியே இருவர் சம்பந்தப்பட்ட விடயமாக பார்க்கப்படுவதில்லை. அது அந்த குடும்பத்தின் பரம்பரை மற்றும் கௌரவம் சார்ந்ததாக பார்க்கப்படும்கிறது. சகோதரர் ஒருத்தர் சாதி மாறி திருமணம் செய்தால் , அவர்கள் சகோதரங்களின் திருமணங்களில் கூட அது தாக்கம் செலுத்தும். அவரின் அக்கா/ அண்ணா. அல்லது தம்பி/ தங்கை சாதி மாறி திருமணம் செய்தவர் என கூறி அவரின் திருமணம் குழம்பும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வளவு தூரத்திற்கு தமிழர் மத்தியில் சாதியம் ஆழ வேருன்றி இருக்கிறது. அடுத்தது சீதனம். மாப்பிளை செய்யும் தொழிலுக்கு ஏற்ற மாதிரி சீதன (சந்தை) பெறுமதி இருந்தாக வேண்டும் வைத்தியர், பொறியியலாளர் அதிக சந்தை பெறுமதி வாய்ந்தவர்கள். சீதன சந்தையில் முதல் தரத்தினர். அவர்களைத் தொடர்ந்து சட்டத்தரணி, வங்கி முகாமையாளர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகஸ்தர்கள். ஆசிரியர்கள் என அவரவர் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப சீதன தொகைகள் வேறுபடுகின்றன.சீதன சந்தையில் கேள்வி குறைவாக உள்ளோர் அல்லது சீதன தொகை குறைவாக உள்ளோர் பட்டியலில் துறை சார்ந்தவர்களும் சுய தொழில் புரிவோரும் வருகிறார்கள். இவர்கள். சீதன சந்தையில் கேள்வியற்றவர்கள், நாட்கூலிக்கு செல்வோர், தனியார் ஒருவரின் கீழ் வேலை செய்வோர் உதாரணமாக கடைகளில் வேலை செய்வோர் என்போர் சீதன சந்தையில் கவனிப்படாதவர்கள்.பெண் வீட்டார் தமது பண வசதிக்கும் சமூக அந்தஸ்துக்கும் ஏற்பவும், பெண் வேலை செய்பவரானால் ஆயின் அவரின் கல்வி மற்றும் தொழில் தகமைக்கு ஏற்பவும் மாப்பிள்ளை பார்த்தாக வேண்டும். இவ்வாறான திருமண சந்தையில் சமீப காலமாக குழப்பத்தை ஏற்படுத்துவோராக வெளிநாட்டு மாப்பிள்ளைகள் திகழ்கின்றனர். வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் 'சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது' என்ற முகவுரையுடன் பெண் தேடும் போது பெண் வீட்டாருக்கு அச்சொல் மந்திரம் போல இருக்கும்.

‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்ற அடையாளமே அத்தகைய மாப்பிள்ளைகளின் தகமை, அவர்கள் வெளிநாடுகளில் செய்யக் கூடிய தொழில், பொருளாதார நிலைமை என எதனையும் பெரும்பாலான பெற்றோர் கவனத்தில் கொள்வதில்லை. சீதனம் கேட்காத சீமான் என எண்ணி பெண்ணைக் கட்டி வைத்து விடும் பெற்றோர் பலர். அந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் இங்கே நல்ல கல்வி தகமைகளுடன், கை நிறைய சம்பளத்துடன் வேலை செய்யும் பெண்களை சீதனம் வேண்டாம் என கூறி திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்தின் பின்னர் சீதனம் கேட்டு பிரச்சனை பண்ணும் மாப்பிள்ளைகளும் இருக்கவே செய்கின்றார்கள். சாதி, சீதனம் என இரு பெரும் தடைகளைத் தாண்டி தமது பிள்ளைகளுக்கு திருமணத்தை நடத்தி ஒப்பேற்றி விட்டால் தமது கடமைகள் முடிந்து விட்டன என பெருமூச்சு விடும் பெற்றோர், அவர்கள் தமது வாழ்க்கையை பார்த்து கொள்வார்கள் என நினைத்து ஒதுங்கிக் கொள்கின்றனர். பெற்றோர் ஒதுங்கி கொள்ளும் போது திடீரென வாழ்க்கையில் ஒரு பெரும் பாரம் தம் மீது சுமத்தப்படுவதாக நினைக்கும் கணவனும் மனைவியும் உணரும் சந்தர்ப்பமும் உண்டு. தனியே வாழ்க்கைப் பயணத்தை தொடர முடியாது திணறுவோரும் உள்ளனர். சிலர் மட்டுமே அந்த சுமையை சுகமாக சுமந்து பயணிக்கின்றார்கள். பெரும்பாலனோர் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தே பயணிக்கின்றனர். இன்னும் சிலர் நடுவிலேயே தமது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்குகின்றார்கள். முன்னர் கூட்டுக் குடும்ப வாழ்க்கை பரவலாகக் காணப்பட்டது. இருவரிடமும் விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் காணப்பட்டன. சிறு சிறு பிரச்சனைகள் பெரிதாகாமல் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைப்பார்கள். பெரியவர்களின் வாழ்க்கை அனுபவத்துடனும் வழிகாட்டலுடனும் புதுமண தம்பதிகள் தமது வாழ்க்கை பயணத்தை நடத்தினர். தற்காலத்தில் தனிக்குடித்தன வாழ்வும், தனிமையும் புதுமண தம்பதிகளிடத்தே பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன. அதனால் குடும்ப வன்முறைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன. அவர்களை கண்காணிக்கவும் அல்லது வழிநடத்தவும் மூத்தோர் இல்லாத காரணத்தால் அவர்கள் மத்தியில் பிரிவுகள் ஏற்படுகின்றன என்றொரு பார்வை உள்ளது.யாழிலுள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெறும் சிவில் வழக்குகளில் விவாகரத்து வழக்குகளே அதிகளவில் நிலுவையில் உள்ளது. பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் திருமணம் ஆகி ஓராண்டுக்கும் மூன்றாண்டுக்கும் இடைப்பட்ட கால பகுதிக்குள் தாக்கல் செய்யப்பட்டவையாகவே உள்ளன. விவாகரத்து இலகுவில் பெற்றுகொள்ள முடியாத நிலை காணப்படுகின்ற போதிலும் விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அதேவேளை சமூகத்திற்கு பயந்து பிடிக்காத அல்லது ஒத்துவராதவர்களுடன் ‘பல்லை கடித்துக்கொண்டு’ வாழ்பவர்களும் பரவலாக இச் சமூகத்தில் உள்ளன. ஏனெனில் விவாகரத்து பெற்றவர்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை மிக மிக அரிது. அதிலும் ஆண்களுக்கான மறுமண வாய்ப்பு ஓரளவுக்கு இருந்தாலும் பெண்களைப் பொறுத்த வரை அது கடினமானதே.விவாகரத்து பெற்றவர்களுக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால் அதில் பெரியளவில் பிரச்சனைகள் இருக்காது. இருவரும் விவாகரத்தை பெற்று தத்தமது வழிகளில் சென்று விடுவார்கள். பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் விவாகரத்து பெற்று வேறுவேறு வாழ்வை தேடிப்போவதில் சிக்கல்கள் உள்ளன. பிள்ளை தாயுடனா அல்லது தந்தையுடனா வாழ்வது? பிள்ளையின் செலவுகளுக்கு யார் பொறுப்பு? வரப்போகின்றவர் (மறுமணத்தின் மூலம்) பிள்ளையை எவ்வளவு தூரம் ஏற்றுகொள்வார்? போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் முரண்பட்டு மோதிக் கொள்ளும் பல தம்பதியினர் வாழ்க்கை பிடித்து போகின்றதோ இல்லையோ ‘பிள்ளைகளுக்காக’ எனும் ஒரு காரணத்திற்காகவே பிடிக்காத வாழ்க்கையை கொண்டிருக்கிறார்கள்.பிரச்சினைகளுக்கு தைரியமாக முகம் கொடுத்து வாழ்க்கையில் முடிவெடுக்கத் தெரியாத சில தம்பதியினர் வேதனை விரக்தியில் மூழ்கி தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள் அவர்களுக்கு ஒழுங்கான வழிகாட்டல்களும் , ஆதரவும் அன்பும் கிடைக்குமானால் தற்கொலைகளைத் தவிர்க்கலாம். பிரச்சனைகளை மனம் விட்டு பேச கூடிய ஒருவர் இத் தருணங்களில் அவசியம். அவர்கள் தனிமைப்படுத்தப்படும் போதுதான் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு விடுகின்றன. பல தடைகளை தாண்டி திருமணம் எனும் பந்தத்தில் இணைந்த பின்னர் எதிர்பார்த்த வாழ்க்கை அமையாவிடினும் கிடைத்த வாழ்க்கையை, எதிர்பார்த்த வாழ்க்கையாக மாற்றி வாழ வேண்டும். இதற்கு கணவன், மனைவி இருவருமே ஒத்துழைக்க வேண்டும். எதையுமே உருவாக்குவதும் ஏற்படுத்துவதும் தான் கஷ்டம். உடைப்பதும் முறிப்பது சுலபம். விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத தருணத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. கணவன், மனைவி இடையில் அன்னியோன்னியமும் நட்பும் காணப்பட வேண்டும். கிழமையில் ஒரு நாளையாவது இருவரும் ஒதுக்கி வெளியிடங்களுக்கு சென்றோ, தனிமையில் இருந்தோ மனம் விட்டு பேசி தமது வாழ்வை அடுத்து கட்டம் நோக்கி நகர்த்த வேண்டும். தங்கள் பிரச்சினைகளை முடிந்தவளவு தாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சினைகளை பேசி தீர்ப்பதன் ஊடாகவே மனதிற்கும் உடலிற்கும் ஆரோக்கியம் கிடைக்கும். வாழ்க்கை ஒரு முறைதான். அதனை நாமே வாழ்ந்து கொண்டாடி தீர்க்க வேண்டும்.  

தம்பதியினரிடையே விரிசல்கள் தோன்றுவதற்கு பல வழக்கமான காரணங்கள் இருக்கலாம். அதாவது சந்தேகம், புரிந்து கொள்ளாமை போன்ற பாரம்பரிய காரணங்கள். அவற்றுக்கு மேலாக மேலும் சில காரணங்கள் உள்ளன. முதலாவது அலைபேசி. வீட்டுக்கு வரும் கணவனும் மனைவியும் தமது கைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதைவிட மேல் ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவது ஒருவருக்கொருவர் துணையாகவும், புரிந்து கொண்டு நாம் என்ற அடிப்படையில் செயல்படுவதற்குமே. ஒரு புதிய குடும்பத்தை கட்டி எழுப்புவதற்கான அவ்வாறான ஒரு பந்தத்தில் மூன்றாவது நபரை அதாவது வெளி நபரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. அவர் அப்பா, மாமாவாக இருந்தாலும் சரி. உண்மை இவ்வாறிருக்கையில் தம்பதியினர் தமக்கிடையே மூன்றாவது ஆளாக ஸ்மார்ட் போன்களை நுழையவிடக் கூடாது. மாமனார், நண்பர்கள் மற்றும் மச்சினிமார்களைவிட மிக மோசமானது ஸ்மார்ட் போன்கள். அவை கணவன் மனைவியிடையே மௌனத்தை வளர்த்து தேவையற்ற சந்தேகங்களையும் எரிச்சலையும் தோற்றுவிக்கும். எனவே, தம்பதியினர் குறைந்த பட்சமாக வீட்டுக்கு மாலையில் வந்த பின்னர் அல்லது ஓய்வு நாட்களில் போன்களை அழைப்புகளுக்காக மட்டும் பயன்படுத்தும் வழக்கத்தை கைகொள்ள வேண்டும்.  

ஆண்களை எடுத்துக் கொண்டால் மதுப் பழக்கத்தை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களை விட்டுக்கு அழைத்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். போதையில் வீடு வருவது நல்ல பழக்கம் அல்ல.  

கணவர் மனைவியிடையே பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை நீடிக்க விட்டு விடக் கூடாது. ஆங்கிலத்தில் ‘எட்ஜஸ்ட்’ என்று சொல்வார்கள். எது பிரச்சினையோ அதனுடன் பயணித்து தீர்த்துக்கொள்ள முணைய வேண்டுமே தவிர இருவரும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்து அவற்றிலேயே உறுதியாக நின்றால் பிரச்சினை மேலும் தீவிரமடையவே செய்யும்.  

கணவன் மனைவியரிடையே பழக்க வழக்கங்களும் பிரச்சினைகள் வளர காரணமாக அமைய முடியும். ஒத்துப் போகாத பழக்க வழக்கங்களை கைவிடுவதே உகந்தது.  

விவகாரத்து என்பது கெட்ட வார்த்தை அல்ல. அது தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று தம்பதியினர் விவாகரத்துக்கு செல்கிறார்கள் என்றால், அவர்கள் ஆரம்ப முதலே ஒருவரை ஒருவர் காதலிக்கவில்லை என்பதே அர்த்தமாகும். மேலும் அவசர கோலத்தில் எடுக்கப்படும் விவாகரத்து முடிவு என்பது, அவர்கள் தமது அடுத்த திருமண பந்தத்திலும் அவ்வாறான ஆத்திர முடிவுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதையே ருசுப்படுத்துகிறது என்பதை மறந்துவிடலாகாது.

மயூரப்பிரியன்

Comments