தோட்டத் தொழிலாளர்களின் நனவாகும் கனவு.... | தினகரன் வாரமஞ்சரி

தோட்டத் தொழிலாளர்களின் நனவாகும் கனவு....

கி.மு. 2737ஆம் ஆண்டளவில் சீன மாமன்னர் சென் நுங்கால் எதேச்சையாக கண்டறியப்பட்ட தேயிலையானது இன்று நீருக்கு அடுத்தபடியாக உலக மக்களால் விரும்பி அருந்தப்படும் பானமாக இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தினமும் 300பில்லியன் தேயிலைக் கோப்பைகள் தயாரிக்கப்படுவதாகவே புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அந்த அளவு பிரபல்யமடைந்திருக்கும் தேயிலையானது, 1824ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பேராதனை தாவரப் பூங்காவில் நாட்டப்பட்டு பரீட்சார்த்தமாக வளர்க்கப்பட்டது.

அவ்வாறு இலங்கையின் காலநிலை மாற்றங்களுக்கும் இயற்கை சூழலுக்கும் தேயிலை பொருந்துகின்றதா என்பது பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருந்த பின்னணியிலேயே 1867ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் எனும் பிரிட்டிஷ் காரரால் கண்டி லூல்கந்துரவில் 19ஏக்கர் பரப்பில் வர்த்தக ரீதியிலான தேயிலை பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. அத்தேயிலை தோட்டத்தின் முதலாவது உற்பத்தி 1872ஆம் ஆண்டு லண்டன் நகரில் விற்பனை செய்யப்பட்டது. 

இதுவே தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக தென்னிந்தியாவின் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்திய வம்சாவளியினரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான வழியை வகுத்தது. அவ்வாறு கொண்டுவரப்பட்டு இலங்கையில் கரையிறக்கப்பட்ட தொழிலாளர்கள் நடைபயணத்திலேயே மலையகப் பிரதேசத்தை சென்றடைந்தனர். அந்த கடினமான பயணம் அவர்களில் சிலருக்கு மரணத்தையும் எஞ்சியோருக்கு வேதனையையுமே பெற்றுக்கொடுத்தது. 2018ஆம் ஆண்டு 150,000மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலையின் வருமானமாக 1.4பில்லியன் டொலர்களை நாட்டுக்கு ஈட்டிக் கொடுத்திருந்தபோதிலும் நாளாந்த ஊதியமாக வெறும் 1000ரூபாவை பெற்றுக்கொள்வதே இத்தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இலங்கை வரலாற்றில் அதுவரை காலமும் ஒன்றுதிரளாத அளவில் தோட்டத்தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு தமக்கு நியாயமான ஊதியத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், அவர்களின் அப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கையின் நாலாதிசைகளிலும் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமைக்காக குரல் கொடுக்க விரும்பிய இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட இந்த நாட்டு மக்கள் கறுப்புச் சட்டை அணிந்து காலிமுகத்திடலில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போராட்டங்களின் தாக்கத்தினாால் அப்போதைய அரசும் அரச தலைவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தபோதிலும் 1000ரூபாய் என்பது அடையமுடியாத இலக்காகவே இருந்தது.  

இந்தப் பின்னணியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தாம் வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியத்திற்கான 1000ரூபா கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார். அவரின் அந்த உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்த தோட்டத் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக வாக்களித்தனர். ஒருபுறத்தில் அவ் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மறுபுறத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிவரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலுமே கோட்டாபய ராஜபக்‌ஷ தான் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார். 

பொதுவாக இந்த நாட்டின் வர்த்தக துறையையும் உள்நாட்டு உற்பத்தி துறையையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கிலும் பொதுமக்களின் வாழ்க்கை செலவைக் குறைக்கும் அதேவேளை, உற்பத்தியாளர்களின் உழைப்பை உயர்த்தும் நோக்கிலும் புதிய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கின்ற வரிச்சலுகை மற்றும் உர மானியம் ஆகிய இரண்டினதும் நேரடி பலனைப் பெறும் தோட்ட உரிமையாளர்கள் அதிலிருந்து இச்சம்பள அதிகரிப்புக்கான மேலதிக செலவினை ஈடுசெய்து கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதனை சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையில் அரசாங்கத்திற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்குமாக இருப்பின் அது தொழிலாளர் சமுதாயத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசிற்கும் வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதாகவே அமையும். குறிப்பாக மேற்குறிப்பிட்ட சலுகைகளைக் கொண்டு நீண்ட காலமாக கிரமமாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ளப்படாதிருக்கும் தேயிலை மீள் நடுகையை சிறந்த முறையில் முன்னெடுப்பதுடன் அதன் வளர்ச்சிக்கு உர மானியத்தை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் தேயிலை உற்பத்தியை எதிர்காலத்தில் சீர்செய்து கொள்வதற்கும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.  

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அவர்களின் கோரிக்கைக்கேற்ப 1000ரூபா வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக தோட்டத் தொழிலாளர்களின் வதிவிடம் உள்ளிட்ட சகல துறைகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் அதேவேளை, அச்சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கின்றது. அச்செயற்பாடுகளுக்கு தோட்டத் தொழிலாளர்களின் தலைமைத்துவங்கள் ஊக்குவிப்பையும் பூரண ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதன் மூலம் மிக மோசமான நிலையில் இருக்கின்ற தோட்டத் தொழிலாளர் சமூதாயத்தின் அடிப்படை தேவைகளை சிறந்த நிலைக்கு கொண்டுவரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக போஷாக்கின்மை மற்றும் அதன் ஒரு தாக்கமாக கல்வி கற்கும் ஆற்றலில் ஏற்படும் வீழ்ச்சி ஆகியன பெருந்தோட்ட இளம் சமுதாயத்தினர் மத்தியில் காணப்படுகின்ற அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாகப் பாதிக்கக்கூடிய விடயங்களாக இருக்கின்றன. ஆகையால் அவற்றிற்கு பரிகாரம் காணும் வகையில் அரச தலைமைத்துவத்தினதும் அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெருந்தோட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பெற்றுக்கொள்வதற்கான சாதகமான தன்மையினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அச்சமுதாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் இன்றைய அரசியல் தலைமைத்துவத்தின் தலையாய கடமையாகும்.  

இந்த சம்பள அதிகரிப்பு என்பது தோட்டத் தொழிலாளர் சமுதாயத்திற்கு சாதகமானதாக அமைய வேண்டுமாயின் அவர்களுக்கான மாற்று வருமானங்களைப் பெறும் வழிகளையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் நாளாந்தம் எட்டு மணித்தியால உழைப்பின் மூலம் பறிக்கக்கூடிய கொழுந்தானது சராசரியாக 16முதல் 18கிலோவாக இருப்பதால் அந்த உழைப்பில் மாத்திரம் தங்கியிருப்பது அச்சமூகத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக அமையாது. ஆகையால் தோட்ட நிர்வாகம் தேயிலை கொழுந்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கும் தொழிலாளர் தரப்பில் ஒத்துழைப்பு நல்குதல் அவசியமாகும்.

எவ்வாறாயினும் நாட்டிற்கு முக்கியமான வெளிநாட்டு செலாவணியை பெற்றுத்தருகின்ற ஒரு சமூகம் என்ற வகையில் அச்சமூகத்தைப் பாதுகாக்க வேண்டியது நாட்டின் ஏனைய சமூகங்களினதும் சமூக கடப்பாடாகவே அமைகின்றது. ஆகையால் இந்த நாட்டில் இதுவரை காலமும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவருகின்ற தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டிய கைமாற முடியாத பொறுப்பினைக் கொண்டிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம், வெறும் இலாபத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கு மாறாக அவர்களுக்கு அவ் இலாபத்தை ஈட்டிக்கொடுப்பதற்காக வெயில் மழை எனப் பாராது அட்டை, குளவி, பாம்பு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது நேர்மையாக உழைக்கும் தொழிலாளர் சமுதாயத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து அரசின் சம்பள உயர்வு தீர்மானத்தை மிக நேர்த்தியாக செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும் என்பதே தொழிலாளர்களினதும் அரசாங்கத்தினதும் எதிர்பார்ப்பாகும். அதுவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால ஊதிய உயர்வுக் கனவை நனவாக்க வழிவகுக்கும்.

ரவி ரத்னவேல்

Comments