‘கெப்பெட்டிப்பொலையை சிறைப்படுத்தி ஆங்கிலேயருடன் இணைய விரும்பிய (இளைய) பிலிமத்தலாவை’ | தினகரன் வாரமஞ்சரி

‘கெப்பெட்டிப்பொலையை சிறைப்படுத்தி ஆங்கிலேயருடன் இணைய விரும்பிய (இளைய) பிலிமத்தலாவை’

துரைசாமி நாயக்கனென வேடமிட்டு அரியணையேறியவன் வில்பாவே என்னும் சிங்கள பௌத்தன் என்பதை அறிந்த பின்னர், பிரபுக்கள் பரம்பரையின் வழிதோன்றலல்லாத ஒரு சாதாரண தர குடும்பத்தவனாகிய வில்பாவே முடிசூட்டப்பட்டமை கண்டியின் பிரபுக்கள் சந்ததியினரை அவமதிக்கும் செயலாகுமென கிலேசம் கொண்டான் (இளைய) பிலிமத்தலாவை. இவனுடன் மற்றுமொரு பிரபல பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த மடுகல்லேயும் இணைந்து கொண்டான். கெப்பெட்டிப்பொல மலைநாட்டு சிங்கள பிரபுக்கள் வகுப்பினரை சாதாரண குடிமக்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டதாக குற்றம் சுமத்தி மொனரவில கெப்பெட்டிப்பொலையை இரகசியமான இடமொன்றில் சிறைவைத்தனர் பிலிமத்தலாவையும், மடுகல்லேயும். இத்தகவல் பொதுமக்களிடம் வந்து சேராவிடினும் ஆளுநர் பிரவுன்றிக் அறிந்து கொண்டான். 

ஆங்கிலேய பேரரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரன் கெப்பெட்டிப்பொலை இவ்வாறு கைது செய்யப்பட்டமையை ஏழுகோறளைக்கு பொறுப்பாக பதவி வகித்த ஆங்கிலேய மாவட்ட ஆட்சியாளருக்கு அறிவித்த பிலிமத்தலாவை ஆங்கிலேயருடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் தயாரானான். 

இது பற்றி இங்கிலாந்து நாட்டின் இராஜாங்க செயலாளர் பெத்தர்ஸ்டுக்கு அறிவித்த ஆளுநர் பிரவுன்றிக் பிலிமத்தலாவையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமரச பேச்சு வார்த்தைக்கும், ஒப்பந்தமொன்றுக்குமாக பல கடித பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தாம் எவ்விதமான முடிவினையும் எடுக்கவில்லையெனவும் இங்கிலாந்துக்கு தெரிவித்தான். 

ஆளுநர் பிரவுன்றிக் இராஜாங்க செயலாளருக்கு இவ்வாறு தெரிவித்திருந்தான். 

“தற்போது நமது சிறைக்கைதிகளாக கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் மற்றும் கப்புலத்தலான முதலான தமது உறவினர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் முன்னர் வகித்த பதவிகளில் அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட வேண்டுமெனவும், தனது தந்தையார் முன்னர் வகித்துவந்த பதவிகள் மற்றும் வரப்பிரசாதங்கள் கண்டியின் வழமை பிரகாரம் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பிலிமத்தலாவை கோரியுள்ளான். மேலும் ஆளுநர் பிலிமத்தலாவையின் கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்று செயற்படுமாகில் உடனடியாக கிளர்ச்சித்தலைவன் கெப்பெட்டிப்பொல உட்பட சகல கிளர்ச்சியாளர்களையும் அரசாங்கத்திடம் தாம் கையளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று பிலிமத்தலாவை தெரிவித்துள்ளதாக இராஜாங்க செயலாளருக்கு அறிவித்தான் பிரவுன்றிக். 

பிலிமத்தலாவை தரப்பிலிருந்து இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும், ஆங்கிலேயர்களின் ஆட்சியை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் இணக்கப்பாடு உட்பொதிந்திருந்தமையை ஆளுநர் உணர்ந்திருந்தான். எனினும் இச் சிங்கள தலைமைகள் மீது நம்பிக்கை கொள்ளும் நிலையில் ஆளுநர் இருக்கவில்லை. தமது வெற்றி எப்போது எவ்வாறு அமையுமென்பதை தாம் தீர்மானித்துவிட்டதோடு அதற்கான காய் நகர்த்தல்களை கிரமமாக மேற்கொண்டு வருவதனால் பிலிமத்தலாவையின் கடிதங்களுக்குச் சாதகமான பதில்களை அளிக்காதிருந்தான் ஆளுநர். 

குருணாகல பிரதேசத்தில் அமைதி நிலவியமையினால் அங்கு தரித்திருந்த இராணுவ படையணிகளை மாத்தளை பிரதேசத்திற்கு அனுப்பிவைத்த ஆளுநர் கண்டியிலிருந்து பிறிதொரு படையணியை அரிஸ்பத்து, தும்பறை வழியாக மாத்தளைக்கு அனுப்பிவைத்தான். லெட்டினண்ட் கேர்ணல் கெலீ தலைமையில் ஒரு படையணியை எத்காலைக்கு அனுப்பினான். கேப்டன் க்ளென்ஹோம் தலைமையிலும் ஒரு படையணியை அக்குறணையைப் பாதுகாப்பதற்காக நியமித்தான். மேலும் பல இடங்களில் இவ்வாறு படையினரை தயார் நிலையில் வைத்திருந்தான் ஆளுநர். இவ்வாறு நிறுத்தப்பட்ட படையினருக்கு எவ்விடத்திலும் எதிர்ப்புகள் காட்டப்பவில்லை.  

இவ்வாறு கண்டி பிராந்தியமும், மாத்தளை பிரதேசமும் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கிளர்ச்சியாளர்களைத் தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. 

ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயுத மேந்தி போராடிய வரலாறு மத்திய மலைநாட்டைச் சார்ந்ததாகும். ஆங்கிலேய அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அக்கால கட்டத்தில் தமக்குள் பகிர்ந்துகொண்ட தகவல்கள், கடிதங்கள் மூலமாக அன்றைய மலைநாட்டு மக்கள் அனுபவித்த சுதந்திர வேட்கையை சரித்திர குறிப்புகள் ஊடாக அறிய முடிகிறது. 

இதே சமயம் பதுளை பிராந்தியத்துக்குப் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக பதவி வகித்த சோவர்ங், கண்டி பிராந்திய ஆணையகத்துக்கு தகவலொன்றை அனுப்பி வைத்திருந்தான். 

பதுளையை அண்மித்த மெதகிந்த கிராமத்தில் ஆங்கிலேய இராணுவம் தீவைப்பு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டமையினால் அக்கிராமம் வெறிச்சோடியது. எரிந்து சாம்பலாகிப்போன கிராமத்தில் கடும் குளிர் நிலவியது. ஒரு சில குடும்பங்கள் மாத்திரம் அவ்வூரில் எஞ்சியிருந்தன. 

உணவுத் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை அடைந்திருந்தது. உணவுக்கு வழியில்லை. பசியினாலும், பட்டினியினாலும் வாடிப் போயிருந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவு வேளையில் வீசிய கடும் குளிரில் நடுங்கினர். 

பசியும் கடும் குளிரும் அவர்களை வாட்டி வதைத்த போதும் அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளையணுகி தமக்கு உதவுமாறு கோர முன்வரவில்லை. மரணத்தைத் தழுவினாலும் மாற்றானிடம் மண்டியிடப் போவதில்லையென தீர்மானித்த அவர்கள் தீயைமூட்டி அதனைச் சுற்றி அமர்ந்து குளிர்காய்ந்தனர். பின்னர் அனைவருமாக அத்தீச்சுவாலைகளுக்குள் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர் என அத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இலங்கைத் தீவில் எங்கும் நிலவியிராத ஆபத்துகளிலும், ஆங்கிலேயர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களிலும் சிக்கித் தவித்த மத்திய மலைநாட்டு மக்கள் தமது இருப்பிடங்களைத் துறந்து பாதுகாப்பான இடங்களை நாடி இடம்பெயர்ந்தமை பரவலாக இடம்பெற்றது.  

ஓரளவு அமைதி நிலவியபோது செப்டம்பர் மாதமளவில் தமது சொந்த இடங்களுக்கு அவர்கள் திரும்பி வந்தபோது அவர்கள் முன்னர் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அரசிடம் கையளிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களின் விளை நிலங்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் மேடுகளாக காட்சியளித்தன. 

அம்மக்களின் வீட்டுத் தோட்டங்களில் நிமிர்ந்து நின்ற மரம் செடிகள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. சில இடங்களில் மக்கள் குடியிருந்த வீட்டு மனைகள் இருந்த இடம் தெரியாதவண்ணம் அழிக்கப்பட்டிருந்தன. விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சிய கால்வாய்கள், அணைக்கட்டுகள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. எனவே ஊருக்குத் திரும்பிய மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியது வெள்ளையர் அரசு. 

ஆங்கிலேய இராணுவத்தினர் புரிந்த அட்டூழியங்கள் கண்டி இராச்சியத்தின் மூலை முடுக்களிலெல்லாம் எதிரொலித்தன. சவரக் கத்தியை கையில் வைத்திருந்த மந்திகளின் செயற்பாடுகளை ஒத்ததாக இராணுவத்தினரின் நடவடிக்கைகள் அமைந்தன. மத்திய மலைநாட்டு மக்களுக்குப் பழகிப் போயிருந்த, விவசாயமும் அதன் மூலமாக உணவும், தென்னை, பாக்கு, மிளகு முதலிய உற்பத்திகளும் அதன் மூலமாக வருமானமும் இல்லாமல்போன நிலையில் நிராதரவாகினர் கண்டி கிராம மக்கள். 

உண்ண உணவும், உடுதுணிகளும், உறையுளும் இல்லாதவர்களாக பசியினாலும், பஞ்சத்தினாலும் அம்மக்கள் அவதியுற்றமை சில ஆங்கிலேய அதிகாரிகளின் கண்டனங்களுக்குள்ளாகின. குருணாகலை பிரதேச நீதி விசாரணைகளுக்குப் பொறுப்பாக இருந்த ஜேம்ஸ் கெமல் இப்படுபாதகச் செயல் பிரித்தானிய பேரரசுக்கும், பிரித்தானிய இராணுவத்தின் நற்பெயருக்கும் ஏற்பட்ட அபகீர்த்தியெனத் தெரிவித்தான். 

பதுளை, வெல்லஸ்ஸ, அங்குராங்கெத்தை, இரத்தினபுரி, தும்பறை, உடுகிந்த, யட்டகிந்த, மெத கிந்த, மாத்தளை, வலப்பனை ஆகிய இடங்கள் உள்ளடங்களாக மத்திய மலை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்கள் இத்தகைய அழிவுகளைச் சந்தித்தன. சுமார் ஒரு வருடகாலமாக ஆங்கிலேயர் மேற்கொண்ட மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் காரணமாக இப்பிரதேசங்களை மீள கட்டியெழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. கெப்பெட்டிப்பொலையைக் கைது செய்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்திய பிலிமத்தலாவையின் செயலும்; மக்களின் இத்தகைய நிர்க்கதி நிலைக்கு ஏதுவாக்கியது. 

எச்சந்தர்ப்பத்திலும் கெப்பெட்டிப்பொலையை ஆங்கிலேயரிடம் கையளித்து விட்டு தனது தந்தை வகித்த பதவியையும் சலுகைகளையும் அடைவதிலேயே பிலிமத்தலாவை குறியாக இருந்தான். (தொடரும்)  

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(கண்டிச் சுதந்திர போராட்டங்கள்)
சி.கே. முருகேசு

Comments