ஆயிரம் ரூபாய் அதிகரிப்புக்கு தடையான காரணிகள் ஆராய்வு | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபாய் அதிகரிப்புக்கு தடையான காரணிகள் ஆராய்வு

சட்டத்தில் திருத்தம் தேவையென சங்கங்கள் சுட்டிக்காட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் அடுத்தவாரம் அரசாங்கம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், இதன்போது சம்பள அதிகரிப்புக்குத் தடையாகவுள்ள காரணிகளுக்கான தீர்வுகள் குறித்தும் தீர்க்கமான கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.  

மார்ச் முதலாம் திகதிமுதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பிலான அறிவிப்பை ஜனாதிபதி விடுத்திருந்ததுடன், மறுநாள் பொங்கல் தினத்தன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு 1000ரூபாய் சம்பள அதிகரிப்பு என அறிவித்திருந்தார்.  

என்றாலும், அரசாங்கத்தின் அறிவிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் பச்சைக்கொடி காட்டவில்லை. தம்முடன் எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படாது அரசாங்கம் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவது கடினமானதெனவும் முதலாளிமார் சம்மேளனம் கூறியிருந்தது.  

இந்நிலையில், முதலாளிமார் சம்மேளத்தின் அறிவிப்பு தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வினவிய போது, நாம் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானித்துள்ளோம். 1000ரூபாய் சம்பள அதிகரிப்பைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியாகவுள்ளனர்.  

 வரிச் சலுகை உட்பட பல மானியங்களைக் கம்பனிகளுக்கு அரசாங்கம் வழங்குகிறது. சலுகைகளை மேலும் அதிகரிக்கவுள்ளோம். அதன் அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கு 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.

இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குச் சட்டத்தில் திருத்தம் செய்ய ​வேண்டும் எனத் தொழிற்சங்கத் தலைவர்களும் சட்ட வல்லுநர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டத்தை திருத்தினாலே சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து ஆயிரம் ரூபாய் அதிகரிப்பை உறுதிப்படுத்த முடியும் என்று சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார். (வி)

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments