இரு தினங்களுக்குள் தீர்வின்றேல் ஐ.தே.க பிளவுபடும் சாத்தியம் | தினகரன் வாரமஞ்சரி

இரு தினங்களுக்குள் தீர்வின்றேல் ஐ.தே.க பிளவுபடும் சாத்தியம்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்றுவரும் தலைமைத்துவ பதவி இழுபறியில் எந்த நேரத்திலும் கட்சி பிளவுபடும் அச்சுறுத்தலே காணப்படுகின்றது. நாளை திங்கட்கிழமைக்குள் இணக்கப்பாடொன்று எட்டப்படாது போனால், சஜித் பிரேமதாஸ அணி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகித்த கட்சிகளுடன் இணைந்து புதியகூட்டணியை ஆரம்பிக்கத் தீர்மானித்திருக்கின்றது. 

அதே சமயம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பு ரணில் – கரு, சஜித் ஒன்றுபட்ட தலைமைத்துவ சபையின் கீழ் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவும் பின்னர் கட்சிக்குத் தலைவரொருவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற விசேட மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்கவை 2024வரையிலான காலப்பகுதிக்குக் கட்சியின் தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தலைவரை பதவி விலகக் கோருவது கண்டிக்கத்தக்கது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்  இவ்வாறு கடுமையாகக் கண்டித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கேட்டனர்; கொடுத்தோம். பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் பதவி கேட்டனர். அதனையும் கொடுத்தோம். இப்போது கட்சியின் முழு அதிகாரத்தையும் சஜித்துக்குத் தருமாறு கேட்கின்றனர். இது எந்தவகையில் நியாயமானது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்விகளைத் தொடுத்துள்ளார். 

பல்வேறு கட்டங்களிலும் கட்சிப் பெரும் பின்னடைவைக் கண்டபோது அதனைக் கட்டியெழுப்புவதற்காக பெருந்தியாகங்களை செய்த ஒரு தலைவரை தூக்கியெறிய முற்படுவது நியாயமானதா? என்றும் அவர் கேட்டிருக்கின்றார். அன்று அவரை தலைவராக பிரேரித்த போது ஒருவர் கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கிடையில் ஏன் இந்த மனமாற்றம் ஏற்படவேண்டும்? இது குரோதத்தன்மையுடன் கூடியதென்றே நோக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார். 

இதேவேளை, பாராளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு வந்து தலைவரை மாற்றக் கோருவது யாப்புக்கு முரண் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது சிறுபிள்ளைத்தனமான  செயலாகும். கட்சி யாப்புக்கமைய கட்சியின் செயற்குழுவே தலைவர் உட்பட நிருவாகத்தை மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பின்னர் அதனை விசேட மாநாட்டிலேயே அங்கீகரிக்க வேண்டும். அதனைச் செய்வதை விடுத்து பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் அதனைச் செய்ய முடியாது. அது யாப்புக்கு முரணான செயலாகும் அதன் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல வஜிர அபேவர்தன, செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் அதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று அல்லது நாளை ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோர் தனித்துப்பேசி இணங்கப்பாட்டுக்குவர உத்தேசித்துள்ளனர். இந்தச் சந்திப்புக்கு ரணில் விக்கிரமசிங்கவே அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதன்போது தேர்தலுக்குப் பின்னர் சஜித்தை தலைவராக அறிவிக்கும் உறுதி மொழியை ரணில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிகொத்தா வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. 

2024வரை தன்னைத் தலைவராக கட்சி ஏற்றுக் கொண்ட போதிலும் அப்பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்குக் கிடையாதெனவும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தான் அரசியலிலிருந்து ஒதுங்கத் தீர்மானித்திருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார். 

ரணிலின் யோனைகள் தொடர்பில் சஜித் பிரேமதாஸ மறுப்பெதனையும் தெரிவிக்காத நிலையில், சஜித் தரப்பிலுள்ள ரணிலை கடுமையாக விமர்ச்சிக்கும் தரப்பினரே அவரை பதவியிலிருந்து வெளியேற்றும் முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். ரணிலுக்கு மிக நெருக்கமாக இருந்த சிலரும் கூட இன்று ரணிலை எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். 

இவ்வாறான நிலையில், நாளையோ, மறுதினமோ தங்களது கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிட்டாதுபோனால், புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கப்போவதாக சஜித் தரப்பு தெரிவித்திருக்கின்றது. அவ்வாறான ஒரு நிலை உருவானால், ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடுவதைத் தவிர்க்கவியலாது என்று சிரேஷ்ட தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கட்சி பலவீனப்படும் நிலை உருவாகுமானால், வரக் கூடிய தேர்தல்களில் இருதரப்பினரும் தோல்வியையே சந்திக்க நேரிடலாமெனவும் அவர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர். 

எம்.ஏ.எம். நிலாம்

Comments