உழைப்புக்கான கௌரவம் | தினகரன் வாரமஞ்சரி

உழைப்புக்கான கௌரவம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கையைப் பாராட்டி வரவேற்றிருக்கும் அஸீஸ் ஜனநாயக தொழிலாளர்  காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸிஸ், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை மதித்து அவர்களது உழைப்புக்குக் கௌரவம் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் தொழிலாளர் வர்க்கம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். கடந்த வருடத்தில் கூட 550ரூபாய் சம்பளத்தை 750ரூபாயாக அதிகரித்ததாகக் கூறி அந்த மக்கள் ஏமாற்றப்பட்டனர். ஊக்கக் கொடுப்பனவாக 60-,70ரூபாயைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர். 

முதலாளிமார் சம்மேளனத்திற்குச் சார்பாகவே கடந்த கால அரசுகள் நடந்து கொண்டன. தேயிலை விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும்போது அதன் பலனை முதலாளிமார் சம்மேளனம் மட்டுமே அனுபவித்தது. ஏழைத்தொழிலாளியை மறந்தே செயற்பட்டனர். ஆனால், தேயிலை விலை குறையும்போது மட்டும் அதனைத் தொழிலாளர் மேல் சுமத்தி சம்பளத்தை தவிர்த்தனர்.  

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் நியாயமான கோரிக்கையென 52நாட்கள் பிரதமராக பதவி வகித்த கால கட்டத்தில் மஹிந்தராஜபக்ஷ வலியுறுத்தி வந்தார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி மிகக்குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது இன்று தோட்டத்தொழிலாளர்கள் பெருமகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். 

ஆனால், முதலாளிமார் சம்மேளனம் இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை குழப்புவதற்குத் திட்டங்கள் தீட்டலாம். பல்வேறு போலி காரணங்களையும் முன்வைக்க முயற்சிக்கலாம். இவ்விடயத்தில், ஜனாதிபதி கவனமாகச் செயற்பட வேண்டும் முதலாளிமார் சம்மேளனம் போடக் கூடிய தடைக்கற்களை உடைத்தெறியும் மனவலிமை ஜனாதிபதிக்கு உண்டு என்பதில் எமக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அஷ்ரப் அஸீஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம் 

Comments