பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் | தினகரன் வாரமஞ்சரி

பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம்

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லா கடன் வழங்கும் விசேட வேலைத்திட்டம் இம் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

இதன் பிரகாரம் உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர் ஒருவர் 8இலட்சம் ரூபாய் வட்டி இல்லாக் கடனை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.  

2018ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் முதல் கட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் பிரவேசிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காத 2016மற்றும் 2017ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடனைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10ஆயிரமாக அதிகரிக்கப்படும். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென விசேட குழுவொன்றை அமைச்சர் பந்துல குணவர்த்தன நியமித்துள்ளார். 

இந்தக் குழு அதன் அறிக்கையை மூன்றுமாத காலப்பகுதிக்குள் ஆராய்ந்து வழங்கும் எனவும் இதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார். 

உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி வண. பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா அம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ் ஆகியோர் குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

குழுவின் அமைப்பாளராகவும் செயலாளராகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளார். 

கடந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் 2,000பேர் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டுள்ளனர். இவர்கள் உள ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளானமை இதற்கான காரணமாகும்.    வருடத்திற்கு 30,000மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். என்றாலும் 2,000பேர்வரை பல்கலைக்கழக கல்வியை பகிடி வதை காரணமாக கைவிடுகின்றதுடன், 20,000வரையான மாணவர்கள் வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களை நோக்கி நகர்கின்றனர். இதனால் வருடத்துக்கு 50பில்லியன் வரையான அந்நிய செலாவணியை நாம் இழக்கின்றோம். உலகில் இலவசக் கல்வி காணப்படும் ஒருசில நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆகவே, இவ்வாறான அநீதியை கண்டு நாம் வெட்கமடைய வேண்டும். 

 கடந்த 5 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக கல்விக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments