யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் பலி | தினகரன் வாரமஞ்சரி

யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

திருகோணமலை-,கோமரங்கடவல, கறக்கஹவெவ பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் நேற்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே இடத்தைச் சேர்ந்த அஜித் குணசேகர (32வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-, கறக்கஹவெவ, லுனுகல விகாரைக்கு பின்புறமாக உள்ள காணியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த தந்தையும் மகனும் காவலில் ஈடுபட்டுவந்த போது தந்தை மலம் கழிக்கவென சேனைக்குப் பின்புறம் சென்ற வேளை, யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியதையடுத்து கூக்குரல் எழுப்பியுள்ளார். 

தன்னுடன் காவலில் ஈடுபட்டிருந்த தந்தையின் கூக்குரல் கேட்டு மகன் வேகமாக அந்த இடத்துக்குச் சென்றுள்ளார். மின் கம்பியில் பட்டு சிறிய காயத்துடன் தந்தை தப்பித்துக்ெகாண்டபோதும் அவ்விடத்துக்கு வந்த மகன் மின் கம்பியில் சிக்கி பலியாகியுள்ளார்.

தனது மகன் சத்தமிட்டதைக் கேட்டுத் தந்தை அந்த இடத்துக்கு வருகை தந்தபோது மின்கம்பியில் மகன் சிக்கி உயிரிழந்துள்ளதாக 60வயது தந்தை ஏ. குணசேகர பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கினார். மகன் மிருகங்களுக்காக வைத்த மின் வேலியில் மகனே சிக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சடலத்தைப் பார்வையிடுவதற்காக திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எஸ். எம். ரூமி சென்று பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டார்.  கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ரொட்டவெவ குறூப் நிருபர்  

Comments