ரூ. 1,000: அரசே சம்பளத்தை தீர்மானிக்கும் சக்தியாக இனித் திகழவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ரூ. 1,000: அரசே சம்பளத்தை தீர்மானிக்கும் சக்தியாக இனித் திகழவேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000ரூபா சம்பளம் அதிகரிப்பு கிடைத்தால் அது வரவேற்கக் கூடியதுதான். அரசாங்கமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இனித் திகழவேண்டும். கூட்டு ஒப்பந்தம் எனும் பேச்சு அவசியமற்றது.

அதற்கான உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் நேற்று தெரிவித்தார்.    தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000ரூபா குறைந்தபட்ச வேதனமாக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்கவுள்ளதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் கூறியதாவது,  

பெருந்தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டது முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைகளைக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கலாமெனக் கூறி அதற்காகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திய தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் இன்று அந்த ஒப்பந்தம் பற்றிய எந்தப் பேச்சுக்களும் இல்லாமல் அரசாங்கத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை வழங்கப் போவதாக தெரிவிக்கிறார்கள்.  

அவ்வாறெனின் கூட்டு ஒப்பந்தம் வெறும் நாடகமா?   அத்துடன், அரசாங்கத்தின் அறிவிப்புத் தொடர்பில் கம்பனிகளினதும் நிலைப்பாட்டையும் அறியவேண்டியுள்ளது.   தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000ரூபா சம்பளம் அதிகரிப்பு கிடைத்தால், அது வரவேற்கக் கூடியதாகும். முறைப்படி 2015மார்ச்சில் செய்திருக்க வேண்டிய கூட்டு ஒப்பந்தம் 2016ஒக்டோபரிலேயே செய்யப்பட்டது. அங்கு 19மாதங்கள் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன்பிறகு 2018செப்டம்பர் செய்திருக்க வேண்டிய ஒப்பந்தம் 2019ஜனவரியிலேயே செய்யப்பட்டது.  

 ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை. அதற்கான நிலுவைக் கொடுப்பனவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இப்போதைய 750ரூபாவிலிருந்து 1,000ரூபா அதிகரிப்பு சாதாரணமாக கிடைத்திருக்க வேண்டியதே.  

 கடந்த 2018சம்பள பேச்சுவார்த்தைகளின்போது மொத்தச் சம்பளமாக 950ரூபா வை வழங்க கம்பனிகள் சம்மதித்து இருந்தன. நல்லாட்சி அரசாங்கம் 50ரூபா வழங்க அத்தனை ஏற்பாடுகளும் செய்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்த நிலையிலேயே இருந்தது. இந்த இரண்டையும் சேர்த்துத்தான் 1000ரூபா என அறிவிக்கிறார்களோ தெரியவில்லை. அப்படி ஆயின் அது மொத்தச் சம்பளமே அதற்கு கம்பனிகள் பல நிபந்தனைகளையும் விதித்து இருந்தன. இப்போதைய அறிவிப்பில் அப்படியான எந்த விளக்கமும் இல்லை. ஆயிரம் ரூபா வழங்குவதற்கான பரிசீலனை அறிவிப்பாகவே உள்ளது.  

 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க அரசு அறிவித்தாலும் அதனை வழங்க வேண்டிய கம்பனிகள் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. எனவே இதன் நடைமுறை சாத்தியம் பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.  

 கடந்த காலங்களில் கம்பனிகள் இத்தகைய அறிவிப்புகளின்போது காட்டிய எதிர் வினைகளை நாம் மறந்துவிடவில்லை.

அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்து நிதி ஒதுக்கீடுகள் செய்த போதும் கூடக் கம்பனிகள் பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்தன.     இந்த நிலையில், ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த முடிந்தால், அரசாங்கமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இனித் திகழவேண்டும். இடையில் கூட்டு ஒப்பந்தம் எனும் பேச்சு வார்த்தை நாடகம் அவசியமற்றது. அதற்கான உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments