வெளிநாட்டு பயணங்களுக்கு தடையில்லை; எனினும் முன்னெச்சரிக்கை அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாட்டு பயணங்களுக்கு தடையில்லை; எனினும் முன்னெச்சரிக்கை அவசியம்

சீனாவில் வேகமாக பரவும் Corona virus;

சீனாவின் வுஹான் நகரில் சுவாச நோயுடன் தொடர்புடைய புதிய வைரஸ் தொற்று விடயத்தில் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடையில்லை என்ற போதிலும் எச்சரிக்கை அவசியமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. விமான நிலையத்திலும் தற்பாதுகாப்பு திட்டங்களை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் (wuhan) வேகமாக பரவிவரும் புதிய கொரோனா (corona virus)வைரஸ் தொடர்பாக வெளிநாட்டு பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசிய மில்லையென்றும் உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இலங்கையருக்கும் வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்துவதற்கான அவசியமில்லையென்றும் இலங்கையின் சுகாதார அமைச்சு இலங்கையருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று தொடர்பாக இலங்கையின் சுகாதார அமைச்சு மிக விழிப்புடன் இருப்பதுடன் விமான நிலையமூடாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் தொடர்பில் விமான நிலையத்திலுள்ள சுகாதாரப் பிரிவு உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இப் பிரிவு இதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்த வைரஸ் தொற்று மற்றும் சுவாசநோய் தொடர்பில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

@ இருமும் போதோ அல்லது தும்மும் போதோ கைக்குட்டையொன்றால் மூடிக்கொள்ளவேண்டும். 

@ கைகளை சவர்க்காரம்கொண்டு சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். 

@ முகம் மற்றும் மூக்குப் பகுதியை தொடர்ந்தும் கைகளால் துடைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

@ சன நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் 

@ குறிப்பாகக் குழந்தைகள் கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான சன நெரில் உள்ள பகுதிகளுக்கு அநாவசியமாகச் செல்லுதல், அநாவசிய பயணங்கள் செல்லுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Comments