ஐ.தே.க என்னை கவனிக்கத் தவறிவிட்டது | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.க என்னை கவனிக்கத் தவறிவிட்டது

மனம் திறக்கிறார் நுவரெலிய மாநகர சபையின்  முன்னாள் பிரதி மேயர் நேருஜி

கே: மிக நீண்ட காலத்தின் பின்னர் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்க்கை எப்படிப் போகிறது?

 பதில்:- நான் தொடர்ந்து 30வருடங்களாக நுவரெலியா மாநகர சபையில் உறுப்பினராக விளங்கி வந்திருப்பதோடு பிரதிமேயராகவும் இருந்து எமது சமூதாயத்திற்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்துள்ளேன். தற்பொழுது அரசியலில் முழுமையாக ஈடுபடாவிட்டாலும் ஒருசில அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதோடு எமது சமூகத்திற்கு தொடர்ந்து சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். நான் அரசியலில் சம்பாதித்தவன் அல்ல. மனுனரைப் போலவே இப்போதும் விவசாயம் செய்து நிம்மதியாக இருக்கிறேன்.

கே: முப்பது வருடங்களுக்கு மேலாக நீங்கள் நுவரெலியா மாநகரசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். நுவரெலியா உங்கள் சொந்த ஊரும் கூட. இந் நகரத்தின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி திருப்திகரமாக உள்ளதா? இல்லை எனக் கருதினால் ஏன்?

பதில்:- நுவரெலியா மாநகர சபையின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையில் சொல்கிறேன். நான் எதிர் பார்த்தளவு நகரம் அபிவிருத்தி அடைந்துள்ளது என்பது உண்மையானாலும் வேகம் போதவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நுவரெலியா ஒரு சுற்றுலா நகரமாகும் இங்கு வாழும் மக்கள் நூற்றுக்கு 75வீதத்திற்கும் அதிகமானோர் சுற்றுலாத் துறையை நம்பி வாழ்கின்றனர். எனவே சுற்றுலாப் பயணிகளின் மனதை கவரும் விதத்தில் நகரை அழகுபடுத்த வேண்டும். அத்தோடு சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும்.

நுவரெலியா குதிரைப்பந்தய திடலை முழுமையாக அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோல சகல விளையாட்டுகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். குதிரைப்பந்தய திடலினுள் பரந்த அளவில் காணி இருப்பதால் சகல விளையாட்டுகளும் விளையாடக்கூடிய மைதானங்கள் இங்கே அமைக்கப்பட முடியும்.

கிறகறி வாவியில் படகு சேவையை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. கேபல் கார் சேவையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். கடந்த 75வருடங்களுக்கு முன் இருந்த நானுஓயா நுவரெலியா இராகலை புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் உள்ள பெருந்தோட்ட லயன் காம்பராக்களை சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் விதத்தில் தனிவீடுகளாக மாற்றி அமைக்கலாம். வனப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். இரவிலும் சுற்றுலா பயணிகள் ரசிக்க கூடிய நிகழ்ச்சிகள் மற்றும் காணிவல் களியாட்டங்கள் என்பவற்றை இரவு பொழுது போக்காக அறிமுகம் செய்யலாம்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். நுவரெலியா மாவட்டத்துக்கு எம்.பியாக தெரிவு செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் கொழும்பை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நுவரெலியா எந்த அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இருக்க வாய்ப்பில்லை. தமிழ் எம்.பி.மார் பெருந்தோட்டம், தொழிற்சங்கம் என்ற மட்டத்தில் நின்று விடுவார்கள். நுவரெலியா அபிவிருத்தி குன்றியதற்கு இதுவும் ஒரு காரணம்.

கே : உங்களிடம் உள்ள சிறப்பு, நீங்கள் இன்றைக்கும் ஐ.தே.க.வில் இருப்பதுதான். உங்கள் கட்சி விசுவாசம், உழைப்பு என்பவற்றுக்கு ஏற்ப கட்சி உங்களை கவனித்த மாதிரித் தெரியவில்லையே?

பதில்:- கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளேன். கடந்த 1988ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 30வருடங்களாக நுவரெலியா மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதி முதல்வராகவும் மாநகர சபை உறுப்பினராகவும் இருந்துள்ளேன். ஐக்கிய தேசிய கட்சி எனக்கு நுவரெலியா மாநகர சபையில் போட்டியிட ஒருமுறை சந்தர்ப்பம் வழங்காததால் சுயேச்சையாக போட்டியிட்டும் வெற்றி பெற்றேன். ஆனாலும் தற்பொழுது உறுப்பினராக இல்லாததால் ஐக்கிய தேசியகட்சி எந்தவிதத்திலும் என்னை கவனிப்பதில்லை. இதில் எனக்கு மனவருத்தமே.

கே : இந் நகரில் உங்களுக்கென ஒரு செல்வாக்கு உள்ளது. ஆனால் நீங்கள் இன்றைக்கு மாநகர சபை உறுப்பினர் கூட இல்லையே! உண்மையில் என்னதான் நடந்தது?

பதில்:- நடந்து முடிந்த நுவரெலியா மாநகர சபை தேர்தல் வட்டார ரீதியாக நடைபெற்றது. அந்த தேர்தலில் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் உள்ள 9வட்டாரத்திலும் எனக்கு போட்டியிட ஐ தே க சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஆனாலும் அந்த தேர்தலில் போனஸ் உறுப்பினர்களில் முதலாவது இடத்தை எனக்கு வழங்கியிருந்தார்கள். 09வட்டாரங்களிலும் ஐ.தே.க வெற்றி பெற்றதால் போனஸ் உறுப்பினர் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. வெற்றிபெற்ற கட்சிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படமாட்டாது என்ற விஷயம் அச்சமயத்தில் பலரும் அறிந்து வைத்திருக்கவில்லை. இதனால் எனக்கு மாநகர சபைக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஐ தே க என்னை வேறு விதத்தில் கவனித்திருக்கலாம். அதை அக்கட்சி செய்யவில்லை. நுவரெலியாவுக்கான கட்சிப் பிரதிநிதியான நவீன் திசாநாயக்க நினைத்திருந்தால் எனக்கு பொறுப்புகள் வழங்கி இருக்கலாம். ஏனெனில் நான் மூத்த கட்சி உறுப்பினர். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இனவாதத்துடன் தொடர்புபடுத்த விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் கட்சித் தலைமையில் தொடர்ச்சியாக குழப்ப நிலை. ஐ.தே.க.வில் என்னதான் நடக்கிறது? மூத்த உறுப்பினர் என்ற வகையில் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒற்றுமை இன்மையே ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்குக் காரணம். ஐ.தே.கவில் விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மையுடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா? உங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானித்து விட்டீர்களா.?

பதில்:- எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் உண்டு. எனது ஆதரவாளர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன்.

கே : அதிக மழை வீழ்ச்சி அல்லது வறட்சி இரண்டுமே மரக்கறி விவசாயத்தை பாதித்து தேசிய அளவில் விலை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பதில்:- இயற்கை செயல்பாடுகளை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது . ஆனாலும் பருவக்கால காலநிலைக்கேற்ப மரக்கறிகளை தெரிவு செய்து உற்பத்தி செய்ய வேண்டும். அதேவேளை அரசாங்கமும் விவசாய உற்பத்திக்கு ஆலோசணைகளையும் தரம்வாய்ந்த மரக்கறி விதைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மரக்கறி விவசாயிகளுக்கு காப்புறுதியோ நஷ்ட ஈடோ கிடையாது. அதை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசாங்கம் விலை உத்தரவாதம் வழங்க வேண்டும். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

கனடாவில் உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு அறுவடைக்கு முன்னரேயே விலை உத்தரவாதம் வழங்கப்பட்டு விடுகிறது.

அமோக விளைச்சல் நடந்த பின்னர் விலை குறையும் அல்லவா? எனினும் தான் சொன்ன விலைக்கே கிழங்குகளை வாங்கும் அரசு உபரியான கிழங்கு தொகையை அரசு கடலில் கொட்டிவிடும்! எனவே, மரக்கறி விவசாயத்தில் நாம் நிறைய முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது.

விளைவித்தோம், விற்றோம், வங்கியில் பணத்தைப் போட்டோம் என்று நாங்கள் தொடர்ந்தும் போய்க் கொண்டிருக்க முடியாது!

நுவரெலியா
சுப்பிரமணியம்

Comments