தை பிறந்தால்... | தினகரன் வாரமஞ்சரி

தை பிறந்தால்...

வருவாய்! வருவாய்! வருவாயம்மா! திருவே உருவாய் வருவாயம்மா!  

இருளை நீக்கிட வருவாயம்மா! உந்தன் அருளைப் பொழிந்திடு தாயே அம்மா!  

காயத்திரி கோயிலின் ஒலிபெருக்கி இனிமையும் கருத்தும் செறிந்த பாடலை அந்தக் காலைவேளையில் ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. அது உலக இயக்கத்தின் அடி நாதமாய் இருக்கும் காயத்ரி மாதாவை நினைக்கவும் வணங்கவும் என்னைத் தூண்டிற்று.  

என்னையறியாமல் என் இரு கரங்களும் மாதாவை நினைந்து ”கரம் கூப்பி வணங்கிற்று”. எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எமது குருநாதர் முருகேசு சுவாமியும் , அவர் காட்டித் தந்த காயத்ரி மாதாவும்தான்.  

காலை வேளை தைமாதத்தைய கடும் குளிர், என்னால் படுக்கையைவிட்டு எழும்ப முடியவில்லை. ” தையும், மாசியும், வையகத்துறங்கு” என்று கூறியிருப்பதில் தப்பில்லைதான்.  

அம்மாவின் கட்டில் வெறுமையாய் இருந்தது. அம்மா அறுபது வயதை தாண்டியும் என்ன உஷாராக இருக்கிறா! இரண்டு மூன்று நாட்களாக அம்மாவுக்கு கடும் வேலை, தைப்பொங்கலுக்காக பலகாரங்கள் தீன்பண்டங்கள் செய்வது, வேலைக்காரர்களுக்கு, தைப்பொங்கலுக்காக நெல், அரிசி கொடுப்பது என்று ஏகப்பட்ட விடயங்கள். வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை மேற்பார்வை செய்வது பெரிய வேலை. அம்மாவுக்கு அது கைவந்த கலை.  

அம்மாவைப்பற்றி என் மனத்தில் எப்போதும் உயர்ந்த எண்ணம்தான். அம்மாவும் அப்பாவும் நல்ல குடும்பப் பொருத்தம். அப்பா நல்ல வடிவு, அம்மாவும் அழகுதான் என்றாலும், அப்பா மாதிரியில்லை.  

அப்பா, நல்ல பிரயாசி, எதையும் நன்றாக யோசித்தே செய்வார். அண்ணாவையும் என்னையும் நன்றாக வளர்த்தெடுத்திருக்கிறார். அதேபோல்தான் அவரது இரு சகோதரிகளையும். ஒரு தம்பியையும் பேணி பாதுகாத்து திருமணம் முடித்து வைத்திருக்கிறார். இரண்டு வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெரிய மாமிக்கு இப்போதும் அப்பா சற்று உரத்துப் பேசினால் பயமாம் என்று அவவாக என்னிடம் எப்பவோ கூறியது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.  

அப்பாவைப் போலத்தான் குகன் அத்தானும் நல்ல வடிவு. எல்லா நல்ல குணங்களும் அவரோடு சேர்ந்து இருக்குது. அவர் துபாயில எக்கவுண்டன், துபாயில இருந்து தைப்பொங்கலுக்கு வந்திருக்கிறார். போனவருசம்தான் எனக்கு குகன் அத்தான் என்று பெரியோர்கள் முடிவு கட்டினவங்க.  

ஆனால், அப்பா நேற்று நடந்து கொண்ட விதம் ஒரு பயத்தை எனக்கு உண்டாக்கிற்று. என்னதான் இருந்தாலும் இவ்வளவு துாரம் வளர்த்து படிப்பித்து என்னை ரீச்சர் ஆக்கிய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மிச்சமாக என்னால் நடக்க முடியாது. அது உறுதி, எனது நலன் பாதிக்கப்பட்டால்கூட நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். அப்பா, இந்தக்குடும்பத்தின் உயர்வுக்காய் இரவு பகலாக பாடுபட்டு உழைத்தவர். எங்களுக்கு முன்பாக எழுந்து வயல்களைப் பார்க்க போய்விடுவார். நாங்கள் தூங்கிய பிறகுதான் வீட்டுக்கு வருவார். அப்பா நல்ல தெய்வ பக்தி, புலால் உணவு உண்பதில்லை. மது பாவிப்பதில்லை, இப்படியான ஒரு பணக்கார மனிதனை எனக்கு அப்பாவாக தந்ததற்கு என் குருநாதருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போதைய உலகில் அப்பாவைப்போல ஒருவரை கண்டுபிடிப்பது கஸ்ரமான காரியம்.  

எல்லாம் இருந்தும் அப்பா என்னிடம் நேற்று கூறிய வார்த்தை ஓர் அச்ச உணர்வையும், மனப் பீதியையும் உண்டாக்கிவிட்டது. ஆனாலும், அப்பாவின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒவ்வொரு விசயம் இல்லாமல்விடாது.  

அதுதானே என்னவென்று தெரியவில்லை!,  

எனக்கு குகன் அத்தான்தான் மாப்பிள்ளை என்று முடிவாகிவிட்டது. அவருக்கெனத் தைப்பொங்கலுக்காக சேட்டொன்றை அவரின் எதிர்கால மனைவி வாங்கிக் கொடுப்பதில் என்ன தவறு?  

அப்பா, ஏன் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்?  

இப்போதைக்கு இதெல்லாம்??? என்று தொடங்கியவர் முடிக்கவில்லை. நேற்று நான் கடைக்குப்போய் சேட் வாங்கி அத்தானுக்குக் கொடுக்கப் போவதாக அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டேன். அதற்குப் பிறகுதான் கடைக்குப் போய் வாங்கிவந்தன்.  

காரில் இருந்து இறங்கும் ேபாதே அப்பா என்னைக் கவனித்து விட்டார். அவர் முற்றத்தில் இருந்த ஈசி செயாரில் அழகாக உட்கார்ந்திருந்தார். எனது கையில் உடுப்பு பேக்குகள் பிஸ்கற் பெட்டிகள் எனக் கை நிறையச் சாமான்கள்.  

என்ன மகள் கடைக்குப் போனதா? என்று கேட்டுவிட்டு, பக்கத்தில் கிடந்த கதிரையில் இருக்குமாறு கையால் சைகை காட்டினார். அப்பாவோடு இப்படி இருந்து கதைப்பது மிகமிகக் குறைவு. இப்படி ஏதாவது விசேஷ நாட்களில்தான் அது கட்டாயம் நடக்கும். வீட்டில் நிற்பதற்கே அப்பாவுக்கு நேரமில்லை, எப்படி கதைப்பது?  

சரி, அமர்ந்துவிட்டேன், அப்பாதான் கதையைத் தொடங்கினார், அம்மாவுக்கு என்ன வாங்கினீங்க, அம்மாவுக்கு இந்தியன் வொயில் சாறி, அப்பாவுக்கு அரவிந் வேட்டி, அண்ணாவுக்கு வடிவான சேட்.  

அவன் வரல்லையே?  

அப்பா, அண்ணன் வராவிட்டாலும் நான் அண்ணனுக்கு வாங்கத்தானே வேணும், எனக்கு வேற அண்ணன் இல்லையே! இப்படி கதைத்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும் இன்னொரு கதிரையில் வந்து இருந்துவிட்டா.  

அப்பாவுக்கு, வேட்டியைக் காட்டும்போது, அம்மா சொன்னா, வடிவான பச்சைக்கரை, வடிவாக இருக்குது.  

ம்ம். இப்ப என்னத்துக்கு எனக்கு வடிவு, என்ர பிள்ளைகள் வடிவாய் இருப்பதே எங்க இரண்டு பேருக்கும் வடிவு. அண்ணாவுக்கும், உனக்கும் கெதியாய் நான் போவதற்கு முன்னால கலியாணத்தை முடித்து வைக்க வேணும், என்ர சொத்துக்களை இரண்டு பேருக்கும் எழுதிவைக்க வேணும். எங்க ரெண்டு பேருக்கும் நல்ல சோறும், கறியும் நீங்க ரெண்டு பேரும் தருவீங்கதானே! என்ன மகள்? என்று என் முகத்தைப்பார்த்தார்.  

என்னப்பா இது இப்படியெல்லாம் கதைக்கிறீங்க, அப்பா நீங்கள் இன்னும் பலகாலம் இருக்க வேணுமப்பா, இப்படியெல்லாம் என்னும்போதே அப்பா கையைக்காட்டி பேசவேண்டாம் என்று மறித்து விட்டு,   அவரே தொடர்ந்தார், மகள், ஒவ்வொரு மனிதனும், குடும்பமும், பரிணாமம் அடைய வேண்டும். அந்த பரிணாமத்தில் ஒரு பகுதிதான் நான் கூறியது. நீங்களோ நானோ திட்டமிடலாம், அதை செயலாக்குவது இறைவனின் கையில் இருக்கிறது. நான் கூறியவைகள் வெறும் வார்த்தையல்ல;நிஜம்.  

நீங்கள் ஒரு பட்டதாரி ஆசிரியை. எத்தனையோ பிள்ளைகளினூடாக வாழ்க்கையின் துன்பங்களையும், சோதனைகளையும் படித்திருப்பீர்கள், உணர்ந்திருப்பீர்கள்.  

அப்பாவின் வார்த்தைகள் எனக்கு ஏதோ அசரீரி மாதிரிக் கேட்டது. நான் அழுதுவிட்டேன்.  

அப்பாவின் காலைக் கட்டிப்பிடித்து அழுதேன், அப்பா நீங்கள் நுாறு வயதுக்குக் கிடக்க வேணும். அப்பாவும், அம்மாவும் இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது. அவ்வளவு உணர்வுகளுக்குள் சங்கமமாகிவிட்டேன்.  

சரி.. சரி, இப்ப என்னத்துக்கு அழுகிறாய் ? என்று அப்பா என்னைத்தூக்கி அம்மாவின் மடியில் வைத்தார். அப்பா என்னைத் தூக்கியதால் என் மனம் ஆறுதலடைந்தது.  

நான் அம்மாவின் கழுத்தில் என்கையைப் போட்டுக் கொண்டு அவவின் மார்பில முகத்தைப் புதைத்து விசும்பிக் கொண்டிருந்தேன்.  

சரி,சரி, பட்டதாரி ஆசி ரியை, அம்மாவின் மடிக்குள் இருந்து.. இது அப்பாவின் வார்த்தை.  

எழும்புங்க மகள், யாராவது பார்த்தால்? இது அம்மாவின் குரல்.  

நான் எழும்பி என்ர கதிரையில் இருந்தேன்.  சரி, அடுத்தது யாருடையது,?   இது குகன் அத்தானுக்கு, சேட்,  

திறந்து காட்டுங்க மகள் பாப்பம், ம், நல்ல வடிவாக இருக்கு. இப்போதே வாங்கத் தொடங்கியாயிற்றா, அவரும் மயூரிக்கு வாங்கியிருப்பாரே.  

ஒம்., என்னைிட்ட என்ன வாங்க என்று கேட்டவர், சல்வார் என்று கலரையும் சொன்னேன் என்றேன். அவர் நாளைக்கு வரும்போது கொண்டுவருவார்.  

அம்மா இடைமறித்து மயூரி என்னிட்ட கேட்டுத்தான் வாங்கினவள். அதுகள் சந்தோஷமாக இருக்கிற காலத்தில சந்தோஷமாகத்தானே இருக்க வேணும்.  

அப்பா, இப்போ என்ர கையை எடுத்து முத்தமிட்டார், சரி மகள், அதில் ஒரு பிளையும் இல்ல, குகனுக்கு ஒரு தங்கச்சி காஞ்சனா இருக்கிறா. அவளுக்கென கட்டிய வீடு இன்னும் முடியல்ல, காலபோக வேளாண்மைச் செய்கை அவர்களுக்குச் சரியான நட்டம். காஞ்சனாவின் கல்யாணத்திற்குப் பிறகுதான் உன்ர கல்யாணம் அதற்குப் பிறகுதான் என்ர மூத்த மகன்ர கல்யாணம். இதைத்தான் நான் என் குருநாதரிடம் கேட்டு வாறன் அவர் என்னை ஒரு போதும் கைவிடமாட்டார். இது ஒரு பேராசையில்லை.  

அம்மா தொடங்கினா. அது சரி, இது எப்ப முடியிற காரியம், மூத்த மச்சாளும் பெரிதாக வீட்டைத் தொடங்கிவிட்டா, எஞ்சினியர் மாப்பிள்ளையும் பார்த்திட்டாங்க, அதற்கும் சீதனம் வேணும். பிள்ளையிட கல்யாணம் தை பிறந்தும் நடக்காது போல.  

சரி சரி பார்ப்பம், இப்ப என்ன அவசரம், மயூரிக்கு என்ன, வயதிருக்குத்தானே கலியாணத்திற்கு! இது அப்பாட கதை.  

அம்மா தொடங்கினா,  

சரி காலாகாலத்தில கல்யாணத்தைச் செய்து வைக்க வேணும். மயூரி பிள்ளையை நான் துாக்கிற்று கோயிலுக்குப் போக வேணும் என்று ஆசைப்படுறன்.  

மகள் எத்தனையோபேர், உன்னை மருமகளாக்க ஆசைப்படுறாங்க, அஃது உன்ர அழகு, நல்ல குடும்பம், உத்தியோகம், நம்மட சொத்து என்று பல காரணங்கள். ஆனாலும் நான் குகனை விரும்பியது அவன் என்ர உருத்து, நான் துாக்கி வளர்த்த பிள்ளை. அவன்ர ஒழுக்கம், வடிவு, உத்தியோகம், அந்தஸ்து என்று பல காரணங்கள்  

இவையெல்லாவற்றையும்விட,  நாங்கள் திருமணம் பேசுவதற்கு முதலே நீங்கள் இருவரும் கதைக்கத் தொடங்கிவிட்டீங்க. இது எங்களுக்கும் தெரியும். அவங்கட வீட்டுக்கும் தெரியும். அவர்கள் வீட்டை முடிப்பதற்கும் சீதனம் கொடுப்பதற்கும் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்ர தங்கச்சி பிடிவாதக்காரி. ஆதலால் நான் வேறொரு முடிவு எடுக்க யோசிக்கிறன்.  

எனக்கு என்ன நடந்ததேன்றே தெரியல்ல. அப்பாட காலில் விழுந்து காலைப்பிடி த்து அழுதேன். அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. அம்மா சொல்லித்தான் தெரியும் கொஞ்சம் மயக்கமாய் இருந்தனாம்.  

பிறகு நானே என்னை சுதாகரித்துக் கொண்டு எழும்பி கதிரையில் இருந்தன்.  

சரியான நேரத்தில மனக்கிடக்கை அவிழ்த்து விட வேண்டும், அது பிந்தினால் முடிவுகள் பிழையாகிவிடும் என்று நாங்கள் பல்கலைக்கழக காலத்தில் பேசிய நாடக வசனம் என் ஞாபகத்திற்கு வந்தது.  

ஏதோ உடம்பிலுள்ள எல்லாச் சக்திகளையும் வரவழைத்து அப்பாவோடு பேச முடிவெடுத்தேன்.  

அப்பா! இது எனது துணிவோடு கூடிய குரல்.  

ம் சொல்லு மகள்! அப்பாவின் அந்தக் கனிவான மகள் என்ற வார்த்தையில் என் உற்சாகம் அரைவாசி பறந்துவிட்டது. என்ர இத்தனை வயதுக்கும் இப்போதுதான் அப்பாவை எதிர்த்துப் பேசுறன்.  

அப்பா, குகன் அத்தான்தான் என் கணவராக இருக்க முடியும். வேறு எவரையும் உங்கள் மகள் மயூரி கணவராக ஏற்றுக் கொள்ளவே மாட்டாள். மயூரி கணவனாகக் குகனை வரித்துக் கொண்டுவிட்டாள். அவளுயை மனத்தில் வேறு யாரும் குடியேற முடியாது.  

அப்பா, திருமணம் வெறும் சடங்கு மாத்திரமே. மனமே திருமணத்தைத் தீர்மானிக்கிறது. சும்மா இருந்த என்து மனத்திற்குள் குகன் அத்தானைப் புகுத்தியது நீங்களும், அம்மாவும்தான்.  

அப்பா, நான் உங்களின் மகள்,  

சரியான முடிவைப் பொருத்தமான நேரத்தில் எடுக்கும் ஒரு பழக்கத்தை நீங்களே எனக்குக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். மரணத்தின் முடிவுக்கு நான் செல்லமாட்டேன், மயூரி அப்படியான கோழையில்லை. குகன் இன்றி எனக்கேது வாழ்வு. அவரை நான் நட்டாற்றில் கைவிட மாட்டேன்.  

அப்பா, நான் உங்களுக்கு எதிரானவளில்லை ஆனால், எனது மனத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே இவ்வளவும் பேசிவிட்டேன். பேசித்தான் ஆக வேண்டும்; பேசாவிட்டால், நீங்கள் வேறு வேறு முடிவுகளுக்குள் போகக் கூடும்.  

அப்பா உங்களுக்கெதிரான கருத்தை கூறியதற்காக நான் கொஞ்சமும் வருத்தப்படவில்லை. ஒன்றுமட்டும் உறுதி. நான் உங்களைவிட்டு ஓடிப் போகமாட்டேன். அந்தக் களங்கம் ஒரு போதும் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் வரவே வராது. நாளைக்கு குகன் வருவார் அவரோடு கதையுங்கள். நான் அவரோடு கதைப்பேன் தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள். கதைத்து முடித்துத் தலையை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவும்  

அப்பாவும் அழுது கொண்டிருந்தார்கள். அப்பாவின் கண் நன்றாக சிவந்திருந்தது. அஃது அப்பாவின் முடிவு தவறென்பதற்கு அடையாளம் என நான் நினைத்துக் கொண்டேன்.  

மயூரி, மகள்! 

இஃது அப்பாவின் சத்தம், இப்போதுதான் என் சிந்தனையோட்டம் நின்றது. நேற்றைய சம்பவங்கள் அது வரைக்கும் என்னை ஆக்கிரமித்திருந்தது.  

இப்போதான் எல்லாம் ஞாபகம் வந்தது. அவசரம் அவசரமாக உடுப்பை சரிசெய்துகோண்டு வெளியே வந்தேன்.  

அப்பா கதவருகில் நின்று என் தலையைத் தடவினார். அது பெரிய ஆறுதலைத் தந்தது.  

சரி,சரி போய் வேலைகளைக் கவனியுங்க. குகன் 9.00மணிக்கு வாறதாக டெலிபோன் பண்ணியிருந்தார். குகனுக்கு மத்தியானம் இங்கதான் சாப்பாடு. அம்மாட்ட மிளகு ரசம் வைக்கச் சொல்லுங்க, குகனுக்கு அது விருப்பம்.  

அப்பாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு குருநாதருக்கு நன்றியையும் தெரிவித்தேன்.  

அப்பா, அப்பாதான்!. என்று நினைத்துக்கொண்டு எனது வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன்.  

மயூரி, வாங்க மகள், இதெல்லாம் ஒழுங்கு பண்ணுங்க, கபட்ல இருக்கிற புது ”றே” யை எடுத்துவாங்க, முதல்ல நல்லா வெளிக்கிடுங்க, இது அம்மாவின் குரல்.  

கந்தசாமி, இரண்டு செவ்விளநீர் வெட்டி, வழுக்கலோட கிளாஸ்ல ஊத்தி பிறிச்ல வையுங்க, இது அப்பாட குரல்.  

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது, சிவந்த உடம்பு, நல்ல கறுத்த சுருள் தலைமயிர், ஒரு சின்னத்தாடி, கறுப்பு லோங்ஸ், நீலக்கலர் ரீ சேட், அத்தான்தான். காரின் முன்கதவை சாத்திவிட்டு ஹோலுக்குள் வாறார்.  

வாங்க மகன், அம்மாவும் அங்கு வந்திற்றா, முதல்வேலை அம்மாட, அப்பாட கால்ல விழுந்து வணங்கிற்றார், அது மட்டுமில்ல என்னையும் வணங்கச் சொல்லி நானும் வணங்கிற்றன்.  

மகள், தம்பிக்கு எல்லாம் எடுத்துக் கொடு, சாப்பிடட்டும். இது அப்பா.  

குடிக்கிறதுக்கு என்ன வேணும் எண்டு கேட்டுச் சொல்லு. இது அம்மா  

என்ன வேணும் குடிக்கிறதுக்கு, சொல்லுங்க, இளனி வேணுமா? தயிர் வேணுமா? அல்லது சூடா ஏதாவது.  

மயூரி எனக்கு இளனி தாங்களன்,   

அப்பா அதையெல்லாம் ஒழுங்குபண்ணச் சொல்லி றெடியாயிருக்குது.  

கொஞ்ச நேரம் துபாய்க் கதை; பிறகு காஞ்சனாவின் கலியாணக் கதை.  

இதற்குப்பிறகு அப்பா என்னை அங்கிருந்து வலுக் கட்டாயமாக அனுப்பிவிட்டார், அதன் பிற்பாடு மாமாவும் மருமகனும் கதை.  

அதன்பிற்பாடு, சாப்பாடு. நானும், அத்தானும் அடுத்தடுத்து கதிரையில் இருந்தோம். அப்பா மேசையின் அடுத்த பக்கத்தில் இருந்தார். அத்தான் நிறைய சாப்பிட்டார். தயிரும் சீனிப்பலகாரமும் என்றால், அவருக்குச் சரியான விருப்பம். என்னுடைய பங்கையும் அவருக்கு எடுத்து வைத்தேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதைப்பார்க்க சரியான சிரிப்பு.  

முடிவில ஹோலுக்கு வந்தம். அப்பா சொன்ன முதல் வேலை நாளையன்றைக்கு குகன்ர கொமர்ஷியல் வேங்க் எக்கவுண்ட்டுக்கு 10மில்லியனை என்ர எக்கவுண்டல இருந்து ட்ராண்ஸ்பர் பண்ணிவிடுங்க மகள். இது யாருக்குமே தெரியக் கூடாது.  

இந்த இணக்கப் பேச்சுக்காகத்தான் அப்பா என்னை அங்கே இருக்க விடவில்லை. இப்போதுதான் அஃது எனக்கு விளங்கிற்று.  

சரி மகன், கலியாணத்தை, காஞ்சனாட கலியாணத்திற்குப் பிறகு வைப்பம். இந்தத் தைப்பொங்கலோட எல்லாவற்றிற்கும் வழி பிறந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் என் குருநாதர் துணை. அவர் என்னை கைவிடமாட்டார்.  

அம்மா, நான் அத்தானோட மூத்த மாமின்ர வீட்ட போயிற்று வரட்டா?  

சரி,சரி!  

கார் புறப்படுகிறது. அப்பாவும், அம்மாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், குகன் றைவிங் சீற்ல; நான் முன் சீற்ல!

எஸ். எஸ். தவபாலன்

Comments