மலையகப் பல்கலைக்கழகம்: பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மலையகப் பல்கலைக்கழகம்: பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டும்

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நெடுநாளைய கோரிக்கை. சில நேரங்களில் இது சாத்தியப்படாத சங்கதி என்னும் கருத்தியலும் உலாவரவே செய்தது. 

முன்னைய அரசாங்கம் சில முனைப்புகளைச் செய்வதாக தகவல்கள் வந்தன. இறுதியில் ஒரு தொழில்நுட்ப கல்லூரியாவது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவுமே ஆகவில்லை. புதிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுமென அண்மையில் தெரிவித்திருந்தார். 

இ.தொ.காவும் இது சம்பந்தமான சில நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரிக்க பி.பி. தேவராஜ் தலைமையில்  குழு ஒன்றை நியமித்துள்ளார் இ.தொ.கா தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்.

1820இல் பெருந்தோட்டப் பகுதிகளில் கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1832களில் கோல்புறூக் அறிமுகப்படுத்திய கல்வி முறைமை பெருந்தோட்டப் பிள்ளைகளை புறக்கணிப்பதாகவே காணப்பட்டது. இப்படி ஆங்கிலேயே ஆட்சி கல்வி அபிவிருத்திப் பற்றிய கரிசனையின்றியே    செயற்பட்டு வந்தது. 

நாடு 1948இல் சுதந்திரம் அடைந்தது. காலனித்துவ கல்விக் கொள்கை மாற்றம் கண்டது. சுதேசிய கல்விக் கொள்கை ஏற்றம் கண்டது. சுதேசிய கல்விக் கொள்கை ஒன்று உருவாக்கம் பெற்றது. ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கான கல்வி இதனுடன் இணைக்கப்படவில்லை. தோட்டப் பாடசாலைகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு தனியாகவே கையாளப்பட்டது. இதனை தோட்ட நிர்வாகங்களே பரிபாலனம் செய்தன.

1981இல் 350தோட்டப் பாடசாலைகள் அரசால் சுவீகரிக்கப்பட்டன. அப்படி சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 845ஆகும். 2002களில் பாடசாலைகளின் எண்ணிக்கை 945ஆக காணப்பட்டது. இவற்றுள் 563பாசாலைகள் சுவீடன் அரசின் நிதி உதவியுடன் அபிவிருத்திக் கண்டன. இலவச கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதன் அனுகூலங்களை முழுமையாக அநுபவிக்க முடியாத நிலைமையே இன்றும் மலையகத்தில் நிலவுகின்றது. பிற சமூக மாணவர்கள் இலவச கல்வியின் பயன்பாட்டை பெற ஆரம்பித்து சுமார் 40வருடங்களின் பின்னரே மலையக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியதுதான் கொடுமை.  

தற்போது அனைத்து பெருந்தோட்டப் பாடசாலைகளும் அரசு பொறுப்பின் கீழேயே வருகின்றது. இதனைக் கண்காணிப்பதற்கென பெருந்தோட்டப் பாடசாலை பிரிவு ஒன்று தனியே இயங்குகின்றது. இருந்தும் தேசிய ரீதியாக வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படும்போது விகிதாசார முறையில் வளப்பங்கீடு நடைபெறுவது இல்லை என்பது பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் குற்றச்சாட்டு. இதனால் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு பாதகமே விளைகின்றது. 

ஒரு கல்வி வலயத்தில் தமிழ்மொழி மூலமான 75சதவீத பாடசாலைகளும் சிங்கள மொழி மூலமான 25சதவீமான பாடசாலைகளும் இயங்கும் பட்சத்தில் வளப் பகிர்வின்போது 25சாதவீத சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் வரும் பாடசாலைகளுக்கே இந்நிலைமை என்கிறார் அவர்.  

இதேவேளை அங்குமிங்குமாக சில பெருந்தோட்டப் பாடசாலைகளை மூடும் முயற்சியும் எடுக்கப்படுவதாக முன்னைய ஆட்சியின்போது தகவல் வெளியாகி இருந்தன. இன்று அதிகமான பெருந்தோட்டப் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை நிலவுகின்றது. பெளதீக ரீதியான வள அதிகரிப்பில் பாரபட்சம் நிலவுவதையே இது சுட்டுகின்றது. 

1947இல் பெருந்தோட்டக் கல்வி மேம்பாட்டுக்கான சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதனடிப்படையில் தொழிலாளரது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு ஒரு தரமான கட்டடம், தலைமை ஆசிரியருக்கான விடுதி, பாடசாலை தோட்டம், விளையாட்டு மைதான தேவைகளுக்காக ஒரு ஏக்கருக்கும் குறையாத காணியும் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதனை தோட்டத் துரைமார் சங்கம் புறக்கணித்துவிட்டது. 

இந்த ஏற்பாடுகள் பொருத்தமற்றவை. தகைமையற்றவை. நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்று கூறி நிராகரிப்புச் செய்தது. இதே போன்றதொரு இடைத்தடை நிலைமையே இன்றைய நாளிலும் மலையக கல்வி அபிவிருத்தி சந்தித்துக் கொண்டிருப்பதுதான் சாபக்கேடு. முன்னைய அரசாங்கம் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு பசுமை பூமி உரிமம் திட்டத்தின் கீழ் 2ஏக்கர் காணி வழங்கும் ஏற்பாடு ஒன்றை செய்திருந்தது. ஆனால் அது முழுமைப் பெறாமலே போனது. 

உண்மையில் மலையக கல்வி அபிவிருத்திக்கு முட்டுக் கட்டையாக காணப்படும் ஓர் அம்சமே பெருந்தோட்டக் கட்டமைப்பு முறைமை. தோட்டப் பிள்ளைகள் கல்வியில் உயர்வடைவது தமது காலனித்துவ போக்குக்கு ஆபத்தானதாக அமையலாம் என்னும் அச்சம் அன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு இருந்திருக்கலாம். சிந்திக்கத் தெரியாத தலைமுறையே இச்சக்திகளுக்குத் தேவையாக இருந்திருக்க வேண்டும். எனவேதான் தோட்டக் கட்டமைப்பின் பொறுப்புக்கு உட்படாத வேறு பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படலாயின. இவ்வாறான பாடசாலைகளை கிறிஸ்தவ மிஷனரிகளே நடாத்தி வந்தன. 

ஆரம்பத்தில் இம்மிஷனரிகளின் எதிர்பார்ப்பு மதத்தை பரப்புவதாகவே காணப்பட்டது. இக்காலப் பகுதியில் இந்து மதம் சார்ந்த நிறுவனங்கள், எச்சமயமும் சாராத தனியார் அமைப்புகள் பாடசாலைகளைத் திறக்கலாயின. எனினும் இதனால் கூட மலையக சமூகம் கல்வியில் நன்மையேதும் அடைய முடியவில்லை. ஆனால் பிற்பட்டக் காலத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட சில பாடசாலைகள் மலையக கல்வி அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றன.  

எது எப்படியாயினும் சவால்களுக்கு மத்தியில் மலையக கல்வி மேம்பாட்டுக்கான அறிகுறி உதயமாகவே செய்துள்ளது. மலையகப் பட்டதாரிகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 20வருடங்களில் மலையக சமூகம் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டளவில் இது குறைவானதாக காணப்பட்டாலும் இந்த வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. 

எண்ணிக்கை அடிப்படையில் வருடம் ஒன்றுக்கு 8ஆயிரம் மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெற இடமுண்டு. ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 500மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். உண்மையிலேயே இது கவலைக்குரிய விடயம், கவனத்துக்குரிய காரியம். 

ஆரம்பக் கல்வி நிலையில் காணப்படும் உத்வேகம் இடைநிலைக்கல்வி உயர்தரக் கல்வியில் ஏற்படும் பட்சத்திலேயே இந்நிலை மாற்றம் பெறும். இதனிடையே மலையகத்தில் இருந்து பொறியியலாளர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், தொழில் அதிபர்கள், நிர்வாகத் துறையினர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என்று கெளரவத்துக்குரிய ஒரு முன்னேற்றம் காணப்படுவதை மறுக்க முடியாது. 

மலையகத்தில் தனியான ஒரு பல்கலைக்கழகம் அமைக்குமளவுக்கு உயர்தரம் கற்று தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இருக்கின்றதா என்றும் சிலர் வாதிடவே செய்கின்றனர். ஆனால் இது ஒரு சமூகத்துக்கான அத்தியாவசிய தேவை என்பதை மறுக்கமுடியாது. மலையகத்தில் ஓர் பல்கலைக் கழகம் அமைக்கப்படுவது ஆரோக்கியமான சமாாச்சாரம் தான். ஆனால் அது எந்தளவுக்கு மலையக மாணவர்களை உள்வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படும் என்பது குறித்த ஐயம் எழாமல் இல்லை. 

பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கான விகிதாசாரம் சிங்கள மாணவர் 25சதவீதம், தமிழ் மாணவர் 75சதவீம் என்பது வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட விடயமாகும். ஆனால் பிந்திய தகவல்படி 2016 - 2017களில் உயர்தரத்துக்கு தோற்றிய மாணவர்களில் உள்வாங்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை 560ஆகும். ஆனால் இற்றைவரை 400மாணவர்கள் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. இது ஏன் என்று புத்திஜீவிகள் கேள்வி எழுப்புகிறார்கள். மாணவர் உள்ளீர்ப்பில் குளறுபடிகள் இடம் பெறுகிறதா என்ற ஐயம் மாணவர் மத்தியில் எழுந்துள்ளது. 

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுமிடத்து இவ்வாறான தவிர்ப்புகள் உள்ளீர்ப்புகளில் இடம் பெறக்கூடாது. அதேபோது மலையகத்தில் பல்கலைக் கழகம் ஒன்று நிறுவப்படுமாயின் அதற்குப் பொருத்தமான இடம் நுவரெலியா மாவட்டமே என்பது தான் ஓட்டுமொத்த மலையக மக்களின் நிலைப்பாடு.

பன். பாலா 

Comments