சி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது | தினகரன் வாரமஞ்சரி

சி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர வேறு கட்சி கிடையாது.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தாங்கள் ஒரு  கூட்டமாக இருக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தமில்லை என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். அவர்  தினகரன் வாரமஞ்சரிக்கு  வழங்கிய நேர்காணல்...

கேள்வி - புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற சமகால நிலைமையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தரப்புக்கள் எவ்வாறு கையாள வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்? 

பதில்; - புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு முக்கியமானதொரு விடயத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதாவது, கடந்த ஐனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது சிங்கள பௌத்தர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர்.  

ஆகையினால், அதில் பெரிய முக்கியமான விடயமொன்று அடங்கியிருக்கிறது.  

ஆனபடியினால் தான் அவர் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து பல தடவைகள் எங்களுடைய விடயங்களைச் அவருக்கு சொல்லி வந்திருக்கிறோம். அதாவது, அவருக்கு சிங்கள பௌத்த மக்கள் வாக்களித்திருந்தாலும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் தங்களுடைய பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் தான் தெரிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.  

ஆகையினாலே இந்த நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சினை சரியான முறையில் அணுகப்பட வேண்டுமாக இருந்தால் ஐனாதிபதி முதலிலே தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். இதை நாங்கள் அவருக்குச் சொல்லியிருக்கின்றோம்.  

தற்போது மிக முக்கியமான பாராளுமன்றத் தேர்தலொன்று வர இருக்கிறது. அந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ் மக்களுடைய பலம் சரியான விதத்திலே பதிவு செய்யப்பட வேண்டும். எங்களுடைய பலத்தை நாங்கள் தொடர்ந்து காண்பித்தால் தான் நாங்கள் எதிலும் முன்னேற முடியும். ஆகையினால் தான் எங்களைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலிலே மக்களுடைய ஆணையை மீண்டும் நாங்கள் பெற்றுக் கொள்வது சம்மந்தமாக எங்களுடைய நகர்வுகளை செய்து கொண்டிருக்கிறோம்.  

கேள்வி – தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஐனாதிபதியுடன் பேசுவதற்கும் தீர்விற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளித்துச் செயற்படவும் தயாரென நீங்கள் அறிவித்திருக்கின்ற நிலையில் அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? 

பதில்; - சாத்தியம் இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற எங்களுடன் ஐனாதிபதி பேச வேண்டும். அவ்வாறான சந்திப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சந்திப்பொன்றுக்கு நாங்கள் கேட்டும் இருக்கிறோம்.  

அதற்கு அவரும் நிச்சயமாக நாங்கள் பேச வேண்டும் என்றும் அதற்கான ஒழுங்குகளைச் செய்கிறோம் என்று சொல்லியிருக்கின்றார்.  

கேள்வி - கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் இருக்கின்ற நிலையில் அந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்? 

பதில்; - கூட்டமைப்பிற்குள் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சமூகமாகத் தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகிறோம். தேர்தல் சம்மந்தமாக கூட சுமுகமான தீர்வுகள் ஏற்பட்டுள்ளன. எதிலும் எந்தவித பிரச்சினைம் இருக்கவில்லை.  

இதில் முதலாவது விசயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. கடந்த இரண்டு மூன்று கூட்டங்களில் எல்லாவற்றையும் சமூகமாக பேசி இணங்கியிருக்கிறோம். மேலும் எவருமே கூட்டமைப்பில் இருந்து விலகுவாதாகச் சொன்னதும் கிடையாது.  

ஆகவே கூட்டமைப்பு ஒழுங்காக எந்தவித குழப்பமும் இல்லாமல் தேர்தலை எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறது. தேர்தலில் இதற்கு முன்னர் மக்களிடத்தே எங்களுக்கு கிடைத்த ஆணையை விட சிறப்பான ஆணையை பெறுவோம் என்ற ரீதியில் நாங்கள் செயற்படுகிறோம். 

கேள்வி – ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு அதற்கான அழைப்பை நீங்கள் விடுத்துள்ள போதிலும் அதனை நிராகரிக்கின்ற போக்கு காணப்படுகின்றதால் ஒற்றுமைக்கான அடுத்த கட்ட முயற்சிகள் ஏதும் எடுக்கப்படுகிறதா? 

பதில்; - ஒற்றுமைக்கான அழைப்பை அல்லது ஒற்றுமையை விரும்பாமால் ஏன் நிராகரிக்கப்படுகிறதென்றால் அதனை நிராகரிப்பவர்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும். நான் அவர்களிடத்தே விடுத்த அழைப்பிற்கு பிரதானமான காரணம் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றாக பலமாக நிற்க வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியான ஒற்றுமைய இருக்க வேண்டுமென்று தான். 

உண்மையில் ஒற்றுமையொன்று ஏற்பட வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்குள் பிரதானமான இருக்கின்ற கட்சியோடு மற்றவர்கள் சேர்வது தான் சாத்தியமானது.  

கேள்வி – தமிழ் அரசியல் பரப்பில் கூட்டமைப்பிற்கு மாற்று அணி என்ற வகையில் புதிய அணிகள் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்; - அதைப் பற்றி நான் ஏதும் பார்க்கவேயில்லை. மாற்று அணி எங்களுக்கு தேவையில்லை. அது வரக் கூடாது. அதுவும் விஷேசமாக முன்னாள் முதலமைச்சர் தலைமையில் வந்தால் அது படு பாதகமானது ஆனாலும், அது அவரின் வேலையாக இருக்கலாம். அவர் உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும். ஆனால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள் தான். கூட்டமைப்பிற்கு அது தாக்கத்தைச் செலுத்தாது. ஆனால், மக்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும். 

மேலும் மாற்று அணி உருவாக்குவதாக இருந்தால் அது தமிழ் மக்களின் ஒற்றுமையை மிக மோசமாக பிளவுபடுத்துகின்ற ஒரு நோக்கு. அந்த மாற்று அணி எதுவாக இருந்தாலும் முற்று முழுதாக கூட்டமைப்பை தோற்கப் பண்ணி அவர்கள் தனியாக ஒருபலமான சக்தியாக வருவார்கள் என்று அவர்கள் கூட எதிர்பார்க்க மாட்டார்கள். ஆகையினாலே ஒரு மாற்று அணியை உருவாக்குகிற செயலை இந்த நேரத்திலே செய்வது தமிழ் மக்களுக்கு எதிராக செய்யப்படுகிற மாபெரும் சதி.  

கேள்வி - கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற தரப்பிற்குள் முன்வைத்து வருகின்றனர். அதிலும் உங்கள் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலைமையில் அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றீர்கள்? 

பதில்; - ஒவ்வொரு விமர்சனமும் எல்லாக் குற்றச்சாட்டக்களுக்கும் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நாங்கள் ஒரு இலக்கை நோக்கிப் போகிறோம். அவ்வாறு போகிற போது வழியில் குலைக்கிற எல்லா நாய்க்கும் கல்லை எடுத்து எறிந்து கொண்டிருந்தால் நாங்கள் அந்த இலக்கிற்கு போய்ச் சேர மாட்டோம்.  

ஆனபடியால் அந்த விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கத்தில் இருக்கும். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் நாங்கள் செயற்படுவதற்கு தயார். அவ்வாறு தான் செயற்பட்டுக் கொண்டும் வருகின்றோம்.  

கேள்வி – கூட்டமைப்பின் தலை மைப் பதவியை நீங்கள் எடுக்கப் போவதாக வெளிவந்த செய்திகளில் உண்மை இருக்கிறதா? அவ்வாறான தலைமை மாற்றம் மேற்கொள்வதற்கான நகர்வுகள் நடக்கின்றனவா? 

பதில்; - அந்தச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா தான். அவர் தான் இன்றைக்கும் தலைவராக இருக்கின்றார். அவர் தலைவர் பொறுப்பில் இருந்து தான் இறங்குவதாகவோ அல்லது அந்தத் தலைமைப் பொறுப்பில் இனி நீடிக்கப் போறதில்லை என்றோ எந்தவிதமான அறிவித்தலும் வரவில்லை.  

ஆகையினால் இந்த தலைமை மாற்றம் என்கின்ற செய்தி வேண்டுமென்றே விசமத்தனமாகப் பரப்பப்படுகின்ற ஒரு பிரசாரம்.  

சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் அமைப்பிற்கு யார் தலைவராக இருக்க வேண்டுமென்று நாங்கள் யாரும் எந்தக் காலத்திலும் கருத்துச் சொல்வது கிடையாது. அதே போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தலைவர் யாராக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு காலமும் சொல்வதில்லை.  

ஏனெனில் அது அவர்களுடைய கட்சி விவகாரம். ஆகையினாலே கூட்டமைப்பிற்குள் இல்லாதவர்கள் கூட்டமைப்பின் தலைவராக யார் வர வேண்டும் யார் வரக் கூடாது என்று சொல்வதெல்லாம் வேடிக்கையான விசயங்கள். அது அவர்களோடு எந்தவிதத்திலுமே சம்மந்தமில்லாத விசயங்களாகத் தான் இருக்கின்றன. 

கேள்வி – கூட்டமைப்பின் தலை வர் சம்மந்தன், தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உண்மை யில் அவர்கள் போட்டியிடுகின்றனரா? இல்லையா? 

பதில்; - நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை அவர்கள் இரண்டு பேரும் தான் எடுக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேரும் தலைவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றார்.    ஆனால், மாவை சேனாதிராசா அப்படியாகச் சொல்லவில்லை. ஆகையினாலே சேனாதிராசா போட்டியிடுவாரென்றே நான் எதிர்பார்க்கிறேன். எனினும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற தீர்மானத்தை அவர்கள் உரிய நேரத்தில் எடுப்பார்கள். 

கேள்வி – பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் கூட்டமைப்பு களமிறங்குமா? அவ்வாறு களமிறங்குவது சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? களமிறங்கினால் தனித்தா அல்லது கூட்டுச் சேர்ந்தா களமிறங்குவீர்கள்? 

பதில் ; - இந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதைப்பற்றி இன்னமும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை.  

கேள்வி – கிழக்கில் கூட்டமைப்பை தவிர மற்றக் கட்சிகள் எல்லாம் ஓரணியில் வர வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறதே? 

பதில் ; - கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர வேறு கட்சி கிடையாது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தாங்கள் ஒரு கூட்டமாக இருக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அவை  கட்சிகளே இல்லை. தனிநபர்கள் தாங்கள் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  

கேள்வி – ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் எதிர்ப்பதாக சொல்கிற நிலைமையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? 

பதில் ;- அரசாங்கம் நாட்டு மக்களுக்குச் சொல்வது ஒன்று ஆனால் ஜெனீவாவில் என்ன செய்வார்கள் என்பது எங்களுக்கு உண்மையாகவே தெரியாது. அந்தக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கின்ற போது தான் அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கும் தெரியவரும். ஆகவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.  

எஸ்.நிதர்ஷன்- ( பருத்தித்துறை விசேட நிருபர்)

Comments