தமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு

கடந்த செவ்வாயன்று (14/01/2020)    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களின் தலைவர்களுடன் அலரிமாளிகையில் நடத்திய கலந்துரையாடலில் அவரிடம் கேட்கப்பட்ட    கேள்விகளும் பதில்களும்...

நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண இன்றைய புதிய அரசாங்கத்தினால் எத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது?

 எமது உள்நாட்டு பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டுமே தவிர சில தமிழ்த் தலைவர்கள் கூறுவது போன்று இந்தியாவிடம் அல்லது வேறு எந்த நாடுகளிடமும் சென்று இவ்விடயத்தை கூறி நல்லதொரு தீர்வினை ஒருபோதும் காண முடியாது என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது. இனப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாகவே இருக்கின்றது. எமது பிரச்சினைக்கு நாமேதான் தீர்வு காண வேண்டும். வேறு எவராலும் எமது பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியாது.  

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது.  

எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். உள்நாட்டிலேயே பிரச்சினைக்கு தீர்வினை தேடவேண்டும் என்று தாங்கள் அடிக்கடி கூறுவதன் அர்த்தம் என்ன?

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை இந்தியாவே பெற்றுத்தர வேண்டும். இந்தியாவையே தமிழ் மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் தமிழ் ஊடகங்களில் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. நேற்றைய தினம் கூட இத்தகைய செய்தி வந்ததாக எனக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதுமட்டுமல்ல இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைக்குமாறு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் தமிழ் தலைமைகளால் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதனால் தான் கூறுகிறேன் எவர் வந்தும் எமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தீர்வு எம்மிடம் உள்ளது, அந்தத் தீர்வு குறித்து நாங்களே பேசித் தீர்த்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். இதனையே நான் அடிக்கடி கூறுகின்றேன்.  

எனவே இவ்விடயத்தில் வெற்றி இலக்கை அடைய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக தமிழ் தலைமைகள் ஒருமித்து இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கினால் மிகக்குறுகிய காலத்தில் இதனை நாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்.   

தமிழ் ஊடகங்களின் தலைவர்களை அழைத்து அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவதன் நோக்கம் என்ன?

அரசாங்கத்தின் இந்த இலக்கை அடைய, அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களது அடிப்படை, வாழ்வாதார, பொருளாதார, இனப் பிரச்சினை ஆகியவற்றுக்கான தீர்வினை காண தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு தமது பங்களிப்பை நல்க வேண்டும் எனும் கோரிக்கையை விடுக்கவே நான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தேன்.  

தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தாது இருதரப்பும் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் பணியாற்றும் வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாந்தரமாக இணைந்து செயற்படுவதற்கு  தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.  கடந்த 30வருட காலமாக இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருந்து வருகின்ற இடைவெளியை இல்லாமல் செய்து எதிர்கால நலன் கருதிய நல்லதொரு மாற்றுச் சிந்தனையை உருவாக்க தமிழ் ஊடகங்கள் தம்மை தயார்ப்படுத்தி பணியாற்ற முன்வர வேண்டும். 

இந்த நோக்கத்திற்காகவே தமிழ் ஊடகங்களின் தலைவர்களை சந்திக்க எண்ணம் கொண்டேன். நிச்சயம் சமூக நலன் கருதி தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.  

கடந்த காலங்களில் அரசாங்கத்தையும் தமிழ் மக்களையும் மோதவிடும் அல்லது பிரித்தாளும் செயற்பாடுகளில் தமிழ் ஊடகங்கள் ஈடுபட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

கடந்த காலங்களில் குறிப்பாக யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடும்போக்கு கொண்டு விமர்சனம் செய்து வந்த நிலைமையே காணப்பட்டது. எனவே  வடக்கு -கிழக்கு மக்களையும் அரசாங்கத்தையும் மோதவிடும் செயற்பாடுகளில் தமிழ் ஊடகங்கள் ஈடுபட்டன அல்லது பிரித்தாளும் செயற்பாடுகளில் ஈடுபட்டன என்று கூறினால் அதில் தவறு இருப்பதாக நான் கருத மாட்டேன். எனவே தமிழ் ஊடகங்கள் இனியும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பதே எனது வேண்டுகோளாக உள்ளது. இதனையே நான் யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து தமிழ் ஊடகங்களிடம் வினயமாக கேட்டு வருகின்றேன். ஆனால் அது நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே இனிவரும் காலத்திலாவது தமிழ் ஊடகங்கள் இதனை நல்ல முறையில் செய்யும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.  

தமிழ் ஊடகங்கள் தம்மை சிறிதளவு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க அல்லது இல்லாதொழிக்க முன்வரவேண்டும். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.  

இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக வடபகுதி மீனவர்களால் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?  

உண்மைதான், இதுதொடர்பான செய்திகளை நாம் அன்றாடம் ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இந்த விடயம் குறித்து தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். இம்மாத இறுதியில் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட தரப்புடன் ஒரு மிக முக்கியமான பேச்சுவார்த்தையை கொழும்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்த உள்ளார். இந்திய மீனவர் பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படாதிருப்பதானது துரதிஷ்டவசமானது.  

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் மூன்று நாட்களுக்கு மேல் இலங்கையின் கடற்பரப்பில் தங்கியிருந்து எமது வளங்களை அழித்து சூறையாடி வருகின்றன. இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.  

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?  

உண்மை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து கடந்த காலங்களில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன எனினும் இதற்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. இதற்கு பிரதான காரணமாக கைதிகளில் பலர் பாரிய குற்றங்களைப் புரிந்தவர்களாக காணப்படுவதாக கூறப்படுகிறது.  

 இதுதொடர்பாக நீதி அமைச்சிடம் முழுமையான விரிவான அறிக்கை ஒன்றினை கோரியுள்ளோம். அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வருவோம் .தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் மீது பாரதூரமான மனிதப் படுகொலை உட்பட்ட குற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் அதனை ஆராய்வோம். அத்துடன் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவும் நடைபெறாது தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தவும் அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.  

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது, இசைக்கப் படக்கூடாது, சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

யார் அவ்வாறு கூறினார்கள், இதுதொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியாது. உண்மையில் ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய கீதமே இருக்கின்றது. ஆனால் பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் அது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது. இந்தியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தேசிய கீதம் ஒரு மொழியிலேயே இசைக்கப்படுகிறது. நாட்டில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது, அல்லது பாடப் படமாட்டாது என்று எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த அரசாங்கத்தின் சார்பில் கூறவில்லை.  

இல்லை, அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலரே ஊடக மாநாடுகளில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்ற கருத்தை அவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். உண்மையில் அதன் பின்னணி என்ன?

அரசியல் நோக்கத்திற்காக சிலர் பிரச்சினைகளை உருவாக்க அவ்வப்போது இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் அதாவது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தேசியகீதம் எந்த மொழியிலும் இசைக்கப் படலாம் அதற்கு எந்தவித தடையும் கிடையாது.

வடக்கில் அல்லது கிழக்கில் அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு  தமிழ் பாடசாலையில் அல்லது அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றுக்கு நான் சென்றால் கூட அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதற்கு நான் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றோம். அங்கு இசைப்பது எமது நாட்டு தேசிய கீதம். ஒரே கருத்துடைய ஆனால் மொழி வேறுபாடு கொண்ட அதே இசையில் அமைந்த ஒரு கீதமாக அது இருக்கின்றது. எனவே இந்த தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட வில்லை சிங்களத்தில் மட்டும் இசைக்கப்படுகின்றது என்ற செய்திகளை பரப்பி கருத்து மோதல், இன மோதல்களை உருவாக்க வேண்டாம்.  அரசியல் நோக்கத்திற்காக சிலர் இத்தகைய கருத்துக்களை பரப்பி விடுகிறார்கள்.  

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில், சுதந்திர தின விழாக்களில் தேசியகீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வந்துள்ளது. இதற்கு வரலாற்று ரீதியான சான்றுகள் உள்ளன. எனவே இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

நான் அதுகுறித்து உண்மையில் அறிந்திருக்கவில்லை. எனவே இவ்விடயம் குறித்து நிச்சயம் ஆராய்ந்து பார்க்கிறேன். தொடர்ந்தும் நாங்கள் இந்த தேசியகீதத்தை வைத்துக்கொண்டு விமர்சனங்களை முன் வைப்போமேயானால் இனங்களுக்கிடையே மொழிகளுக்கிடையே மேலும் பிரிவு அதிகரிக்குமே தவிர இதுக்கு ஒரு முடிவு ஏற்படாது.

எனவே இதை ஊடக பிரதிநிதிகளான நீங்கள் பெரிதுபடுத்த இடமளிக்க வேண்டாம். சகல விடயங்களும் ஊடகங்களில் வரும் போது மட்டுமே அது மிகைப்படுத்தப் பட்டு மக்கள் முன் பெரும் கருத்து பரிமாறப்படுகின்றது.  

எனவே இதனை பெரிது படுத்தாது நாட்டிலுள்ள ஒரு தேசிய கீதத்திற்கு பல மொழிகளில் பாடப்படும் போது மரியாதை செலுத்துபவர்களாக நாட்டுப்பற்று உள்ளவர்களாக நாங்கள் எங்களை மாற்றியமைப்போம் .  

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகள் எவ்வாறு அமைந்துள்ளது?

கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் மட்டுமில்லாது மலையக பகுதிகளிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தமது வாக்குகளை எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு அளித்திருந்தனர் இருந்த போதிலும் வடக்கு கிழக்கில் எமது அபிவிருத்தியை எவ்விதத்திலும் நாம் குறைவடையச் செய்ததில்லை. வடக்கிற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்து அப்பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் டக்லஸ் தேவானந்தாவுக்கு தேசிய ரீதியில் பணியாற்றக்கூடிய தேசிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மலையக மக்களுக்கு சேவையாற்ற கூடிய வகையில் அமைச்சர் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. எனவே யார் வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் முழு நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் சேவை குறைவில்லாது தொடரும். ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களை நாம் கைவிடமாட்டோம். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.  

இன்றைய அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்மார் எவரும் இல்லாதது குறித்து அம்மக்களிடையே  ஒரு குறையாக அது கூறப்படுகிறது. இது குறித்து தங்களின் கருத்து என்ன?

உண்மைதான், வெற்றி பெற்ற எமது கட்சியில் எந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் இருக்கவில்லை. அப்படி இருக்க முஸ்லிம் அமைச்சரை நாம் எப்படி நியமிக்க முடியும். எனவே முஸ்லிம் மக்கள் நடைபெற உள்ள பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களில் சிந்தித்து செயற்பட வேண்டும். முஸ்லிம் பிரதிநிதிகளை அனுப்பி அந்த நிலையை சரிசெய்ய அவர்கள் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வெறுமனே அரசாங்கத்தை குறை கூறுவதனால் எந்தவிதமான பலனும் இல்லை. இது அவர்களாகவே தேடிக்கொண்ட ஒரு விடயம்.  

இருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்தானே, அவர்களில் ஒருவரை  அமைச்சராக நியமித்திருக்கலாமே?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை சார்ந்த முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடிவு செய்து பெயரை அனுப்புமாறு நாம் கேட்டோம். ஆனால் அவர்கள் எவரது பெயரையும் எமக்கு அனுப்பவில்லை. ஆனாலும் பைசர் முஸ்தபாவுக்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்க கோரினோம். அவர் மறுத்துவிட்டார். அதனால் எதிர் வருகின்ற தேர்தலில் முஸ்லிம் மக்கள் அதனை சரிசெய்யவேண்டும்.  

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

உண்மையில் எமது அரசாங்கம் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது. அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால் பல தசாப்த காலமாக தமிழ் மக்களை அவர்களது அரசியல் தலைவர்கள் தான் ஏமாற்றி வருகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் நாம் அவர்களைப் போன்று தமிழ் மக்களை ஏமாற்ற தயாராக இல்லை. அதனால் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்ட வரைவுகள் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்.  

ஜெனிவாவின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து அரசாங்கம் ஏதாவது முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதா?

ஆம், இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இந்த அமர்வில் நாம் எமது நட்பு நாடுகளுடன் இணைந்து இந்த விவகாரம் குறித்து ஒரு தீர்க்கமான ஆலோசனையை முன்வைப்போம். அத்துடன் இந்த விடயத்திற்கு ஒரு தீர்வு காணப்படும் அல்லது முடிவு கட்டப்படும் என்று கூறலாம். அதனால் எமக்கு இது ஒரு சவாலாக அமையாது என்ற நம்பிக்கை உள்ளது.    

சுரேஷ்

Comments