தலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை | தினகரன் வாரமஞ்சரி

தலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை

தமிழ்மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கரங்களை பலப்படுத்துவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பனும். இதனை உணர்ந்தவர்களாக தமிழர்கள் செயற்படனும். மஹிந்த ராஜபக்ச காலத்தில் அனுபவித்த அபிவிருத்தியை மீண்டும் முழுமையாக அனுபவிக்க திறமைசாலியானவர்களை வடகிழக்கில் இருந்து இம்முறை அனுப்புங்கள். மூன்றில் இரண்டு பெருபான்மைக்கு மேல் 125 ஆசனங்களுடன் ஆட்சியமைக்க தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்படனும். இல்லாவிட்டால் இன்னும் 5 வருடங்கள் தமிழ் மக்களின் இலக்குகள் பின்னகர்த்தப்படும். பின்னோக்கி செல்லும் அரசியலுக்கு சைகை காட்டாமல் முன்னோக்கி சென்று தமிழ் மக்களின் இலக்குகளை முன்னேற்றுவதற்கு வழிவகுக்கனும். புதிய ஆட்சியில் தமிழர் பிரதேசங்களும், தமிழர்களின் மனங்களிலும் ஏங்கிக்கொண்டிருக்கும் எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் நிறைவுடன் கிடைத்து தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதற்காக நான் அயராது உழைத்து வருகின்றேன் என  

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்தார். அதன் முழுமையான விபரம் பின்வருமாறு.  

கேள்வி:- அண்மைக்காலமாக நீங்க தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மிகுந்த நம்பிக்கையும்,விசுவாசம் வைத்து தங்களின் உரையாடல்கள், பேச்சுக்கள் இடம்பெறுகின்றது. இதுபற்றி நீங்க வாசகர்களுக்கும், மக்களுக்கும் என்ன சொல்லப்போகின்றீர்கள்?  

பதில்:- உண்மையாகவே தமிழ் மக்களின் உரிமைக்காகவும், இந்த நாட்டில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக்காகவும், இன்னல்களுக்கும் குரல்கொடுத்து போராட்டத்தில் குதித்தவர் தலைவர் பிரபாகரன் தான். எமது தேசிய தலைவர் தமிழ் மக்கள் மீது விசுவாசம் மிக்கவர். அவர் தமிழ் மக்களுக்காக வினைத்திறனுடன் செயற்பட்டு போராடியவர். ஆனால் தமிழ்தேசியம், சமஷ்டி பெற்றுத்தருவோம் என மக்களை வெற்றுக்கோஷமிட்டும், பசப்பு வார்த்தைகளை பேசியும், தமிழ் மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் தமிழ்த் தேசிய தலைவர்   சம்பந்தனோ, அல்லது மாவையோ உண்மையான தலைவர்கள் அல்ல.  

என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது. அது எங்களுடைய தேசிய தலைவர். அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால், இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. என்னை துரோகி என்று அவரின் வாயால் சொல்லவும் மாட்டார், சொல்லியிருக்கவும் மாட்டார். சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. எனக்கும் தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சினை என்று. இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர். தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே அது ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது. அங்கு இருந்துதான் நான் வந்தேன் இல்லையெனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது.  

கேள்வி:- தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இன்று பலர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?  

பதில்:- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் சேகரிக்கும் கட்சியாக மட்டும்தான் உள்ளது. ஆனால் அக்கட்சி தமிழ் மக்களை வாழவைக்கும் கட்சியல்ல. இன்று பார்த்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பல வருடங்களாக தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளார்கள். கண்டது ஒன்றுமல்ல. வாக்களித்த மக்கள் 71 வருடங்களாக அபிவிருத்தி அபிலாஷைகள், வாழ்வாதாரம், தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் தாழ்ந்து கொண்டு செல்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் உயர்ச்சியடைந்து, சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்துகொண்டு செல்கின்றார்கள். இனியும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பி ஏமாறக்கூடாது. 71 வருடங்களாக இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருவோம் என்று தமிழ் மக்களையும், புலம்பெயர் உறவுகளையும் ஏமாற்றியதைத் தவிர உருப்படியான வேலைகளை தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்துகொடுக்கவில்லை. இவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை இதுவரையும் பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கோ அல்லது நாட்டில் உள்ள பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தேசியம் பேசுவதற்கு ஒருத்தருக்கும் உரிமையில்லை. மட்டு, அம்பாறையில் இருக்கும் தமிழ் தேசியத் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உரிமையில்லை. அவர்களுக்கு யுத்த களம் பற்றி தெரியுமா? யுத்தகாலத்தில் கொழும்பிலும், திருகோணமலையிலும் ஒழித்து திரிந்தவர்கள் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள். யுத்த களத்திற்கு தனது பிள்ளையை வழியனுப்பி வைத்த வேதனை இவர்களுக்கு தெரியுமா? இல்லாவிடின் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் வேதனை தெரியுமா? இன்று மேதாவிகள் போல் தேசியம் பேசுகிறார்கள். அம்பாறையில் இருகின்ற அரசியல்வாதிகள் கஞ்சிகுடியாறு காட்டில் உள்ள மரங்களில் அரைவாசியை அழித்துவிட்டார்கள்.அந்த மரங்களை உருவாக்குவதற்கு தலைவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளை ஈடுபடுத்தினார்.  

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் ஹரீஸ் எம்.பி இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர் அப்போது எவ்வாறு கல்முனை பிரச்சினையை தீர்க்கப்போகிறார்கள். இவர்கள் எம்மக்களை ஏமாற்றி வருகின்றனர். எமது போராட்ட களம் மௌனித்த பின்னர் கூட்டமைப்பினரும் திசைமாறிவிட்டனர்.  

கிழக்கு மாகாணத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 6000 கோடி மில்லியன் நிதி முடக்கப்பட்டது. அதேபோன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தடை விதிக்கப்பட்டது. கல்முனையை சகல வசதிகளுடன், அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதை முஸ்லிம் அரசியல்வாதிகளின் கதையை கேட்டு ரணிலும், மைத்திரியும் கல்முனையை தரமுயர்த்துவதை தடைசெய்தார்கள். இவ்விடயமாக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்ததுமில்லை. தட்டிக்கேட்டதும் இல்லை. தட்டிக்கேட்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயம். சம்பந்தனும், ரவூப் ஹக்கீமும் இணைந்து இணக்க அரசியல் செய்தவர்கள். ஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ரவூப் ஹக்கீம் இணங்கவில்லை. இவ்விடயமாக சம்பந்தனை ரவூப் ஹக்கீம் ஏமாற்றிவிட்டார். இதனை தமிழர்கள் கற்றுக்கொண்ட ஒரு பாடமாக வைத்து முனைப்புடன் செயற்படவேண்டும்.  

கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் பிரதேசமாகும்.கிழக்கை தனியோரு சமூகமாக வாழ்வதற்கு திட்டம் தீட்டி காணி அதிகாரங்கள் உட்பட அனைத்து விடயங்களையும் கைப்பற்றுவதற்கு சில அரசியல்தலைமைகள் செயற்பட்டன. அதற்கு ரணிலும், மைத்திரியும் உடந்தையாக செயற்பட்டார்கள். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சகோதர சிங்கள மக்களுடன் கைகோர்த்து வாழவேண்டும். கடந்த யுத்தத்தினால் அதிகமான உயிர் இழப்புக்களை சந்தித்தவர்கள் தமிழர்களும், சிங்களவர்களும் தான். நாங்கள் இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கதையை கேட்டு செயற்பட்டால் கிழக்கின் இருப்பு, அதிகாரங்கள், நிருவாகங்கள் பறிபோகும்.  

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கதையை கேட்டு தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். அன்னப் பறவையின் செட்டைக்குள் வழலைப் பாம்புகள்தான் ஒழிந்திருந்தது. தென்னிலங்கை சிங்கள மக்கள் விழிப்புடன் செயற்பட்டு கோட்டாபய ராஜபக்சவை வாக்களித்து ஜனாதிபதியாக உருவாக்கினார்கள். சகோதர சிங்கள மக்களின் வாக்குகளால்தான் தமிழர்கள் இன்று காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாணம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. கிழக்கை கைப்பற்ற யாராலும் முடியாது. கிழக்கின் மீது ஜனாதிபதியிடம் முழுமையான கவனம் இருக்கின்றது. வடகிழக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கதையை கேட்டு செயற்பட்டால் இருப்பை தொலைத்து இருக்கமுடியாமல் போகும். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கு தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை புறக்கணித்தார்கள். வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள், திணைக்களங்கள் தரமுயர்த்தப்படாமலும், வீதிகள், பாலங்கள் கட்டப்படாமலும் தமிழர் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத் தொடர்பற்ற முறையில் கல்வி வலயத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உருவாக்க முடியும் எனில் ஏன் அம்பாறை மாவட்டதில் சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயத்தை உருவாக்க முடியாது? இது இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகளின் தவறு. இந்த பிரதேசங்களை உள்ளடக்கிய கல்வி வலயம் உருவாக்கப் படுமானால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும். இன்று கருணா அம்மான் துரோகி என்கின்றனர். அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை அது டொக்டர் பட்டம் மாதிரிதான் எனக்கு இருக்கிறது. கடந்த கால போராட்டம் நீடித்திருந்தால் நாம் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம். தற்போது அனைவரையும் காப்பாற்றியவர் நான் தான் இல்லாவிடின் இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் யாரும் வந்திருக்க மாட்டார்கள்.  

அம்பாறையில் போராளி குழுவை கருணா அம்மான் உருவாக்குவதாக அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகின்றார்.

நாங்கள் அம்பாறையில் சேவை செய்வதால் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விசர் பிடித்த நாய் போன்று சீறி விழுகிறார்.  

தேசியம், உரிமை, சமஷ்டி என்பதெல்லாம் மனசுக்குள்தான் இருக்கவேணுமே தவிர செயற்பாட்டில் இருக்ககூடாது. எதிர்ப்பு, ஏமாற்று அரசியலுக்கு தமிழ் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களித்து தொடர்ச்சியாக நாங்கள் அரசியல், அபிவிருத்திகளை இழந்து ஏதிலிகளாகவும், ஏழைகளாகவும் இன்று வாழ்கின்றோம். இவ்வாறான நிலை தமிழர்களுக்கு இனியும் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும், திண்ணமும் ஆகும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு வாகரை, வாழைச்சேனை, மண்டூர், கொக்கட்டிச்சோலை, உன்னிச்சை, வவுணதீவு போன்ற பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை முற்று முழுதாக தீர்க்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு(6) இலட்சம் பேருக்கு குடிநீர் வசதிக்கான இணைப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையும் இரண்டு இலட்சம் பேருதான் குடிநீர் இணைப்பை பெற்று இருக்கின்றார்கள். கித்துள் உறுகாமம் குளம் இணைக்கப்படும் பட்சத்தில் திருகோணமலை வரைக்கும் நீர் வழங்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களை கட்டி விவசாயத்தை ஊக்குவித்தவன் நான் தான். இன்னும் பல குளங்களை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் புனரமைப்பேன். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கிய கட்சியாக உள்ளது. அதனை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு கதைத்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து அமைச்சுப்பதவியை எடுத்து அவர்களினுடாக பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும்.  

கேள்வி:- தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை திருப்திப்படுத்தவில்லை எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டுகின்றது. இதுபற்றி உங்கள் பதில் என்ன?  

பதில்:- தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதுமையை படைத்து வருகின்றார். நாட்டில் உள்ள மக்களின் நலன்சார்ந்து செயற்படுகின்றார். நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கிலும், வணக்கஸ் தலங்களை பாதுகாக்கும் நோக்கிலும், தேசிய பாதுகாப்பை முக்கியத்துவப்படுத்தி வினைத்திறன் மிக்க அரசசேவையை நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் வழங்கவேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுகின்றார். கடந்த அரசாங்கம் நாட்டில் உள்ள மக்களை பாதுகாப்பதில் தவறிழைத்திருந்தது. அந்தவகையில் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து பொதுமக்களை கவனமாக பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகின்றார். திடீர் என்று அரச அலுவலகங்களுக்கும். வைத்தியசாலைகள், விமான நிலையங்களுக்கும் சாதாரணமாகவும், எளிமையாகவும், சென்று வருகின்றார். ஏன்னென்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று. இதன் காரணமாக அரச அலுவலகங்கள் ஊழல் அற்ற அலுவலகமாகவும், சிறப்பான பணிகளை மக்களுக்கு செய்யனும்போல செயற்படுகின்றார்கள். நாட்டிலே புதுமையான கொள்கை திட்டமிடலுடன் நாட்டை முன்னேற்றும் பாதைக்கே வழிவகுக்கின்றார். குறிப்பாக மக்களை திருப்திப்படுத்தும் எண்ணத்தில் தீவிரமாகவுள்ளார். பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியின் இந்த நல்லெண்ணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார்கள். பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.  

இதனை உணர்ந்தவர்களாக தமிழர்கள் செயற்படவேண்டும். மஹிந்த ராஜபக்ச காலத்தில் அனுபவித்த அபிவிருத்தியை மீண்டும் முழுமையாக அனுபவிக்க திறமைசாலியானவர்களை வடகிழக்கில் இருந்து இம்முறை அனுப்புங்கள். மூன்றில் இரண்டு பெருபான்மைக்கு மேல் 125 ஆசனங்களுடன் ஆட்சியமைக்க தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும்.

இல்லாவிட்டால் இன்னும் 5 வருடங்கள் தமிழ் மக்களின் இலக்குகள் பின்னகர்த்தப்படும். பின்னோக்கி செல்லும் அரசியலுக்கு சைகை காட்டாமல் முன்னோக்கி சென்று தமிழ் மக்களின் இலக்குகளை முன்னேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்.   

க.விஜயரெத்தினம்- (வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Comments