அவுஸ்திரேலியாவை குறிவைக்கும் சர்வதேசம் | தினகரன் வாரமஞ்சரி

அவுஸ்திரேலியாவை குறிவைக்கும் சர்வதேசம்

அஸ்திரேலியாவில் வரலாறு காணாத வகையில் வரட்சி ஏற்பட்டுள்ளதால் அந்நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதகாலம் நீடித்த காட்டுத் தீயால் சுமார் 8 இலட்சம் மில்லியன் ஹெக்டெயர் வரையான காடுகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 1.2 மில்லியன் வரையான உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. 

இந்த வரட்சியினால் மக்களுக்கு தண்ணீர்; பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அதிகமாக வாழும் உயிரினங்களில் ஒன்றான ஒட்டகங்கள் தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10000ம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்லுவதற்கு அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்ததுடன், இதுவரை 5000ம் ஒட்டகங்கள் சுட்டு கொல்லப்பட்டும் உள்ளன. 

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு வரலாறுகாணாத வெப்பநிலை பதிவானதோடு, கடுமையான தண்ணீர் பஞ்சமும் நிலவியது. இதே நிலைதான் தற்போதும் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே 10,000ம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அவுஸ்திரேலியா தீர்மானித்தது. 

தெற்கு ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 10 இலட்சத்திற்கும் அதிகமான ஒட்டகங்கள் வாழ்ந்து வருகின்றன. உலக அளவில் இங்குதான் அதிக எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகின்றன. வரட்சி காரணமாக ஒட்டகங்கள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவுகளைத் தேடி ஊருக்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்துள்ளன. பாதைகளிலும்; ஒட்டகங்கள் சுற்றித்திரிவதால் வாகன சாரதிகள் முதல் பொது மக்களும் பல சிரமங்களுக்கு ஆளாவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. 

ஊருக்குள் வரும் ஒட்டகங்கள் தண்ணீர் குடிப்பதால், மக்களுக்கு மேலும் தண்ணீர் பிரச்சினை அதிகரித்துள்ளன. இதனையடுத்து முதற்கட்டமாக 10,000 ஒட்டகங்களை ஹெலிகொப்டர் மூலம் வீரர்களை அனுப்பி சுட்டுக்கொல்ல அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானமொன்றை கடந்தவாரம் எடுத்தது. இதற்கு அவுஸ்திரேலியாவின் விலங்குகள் நல ஆர்வலர்களும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானத்தில் உறுதியாகவுள்ளது. 

ஏற்கெனவே காட்டுத்தீயால் பல கோடி வனவிலங்குகள் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டகங்களைக் கொல்வது தவறு என்றும் ஓர் உயிர் வாழ்வதற்காக மற்றுமொரு உயிரை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தை உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர். 

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். ஒட்டகங்கள் ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பாலைவன நிலங்களை தாயகமாகக் கொண்டவையாகும். இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. 

ஒட்டகங்களும் மனிதர்களும் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கியிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆதிகாலம் முதல் நவீன காலம்வரை ஒட்டகங்கள் மூலம் பாலைவனப் பிரதேசம் முதல் பல இடங்களில் பயணங்களையும் மனிவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இன்றளவும் ஒட்டங்கள் மூலமாக பயணங்களும், பொருட்கள் பரிமாற்றமும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்த நவீன உலகில் பாலைவனத்தில் ஒட்டகத்தை தாண்டி வேறு போக்குவரத்தை எண்ண முடியாதளவு மனிதனின் போக்குவரத்துக்கு அவை உதவியளிக்கின்றன. அத்துடன், அவற்றின் பால் மற்றும் இறைச்சியையும் மனிதர்கள் பெற்றுக்கொள்கின்றனர். 

ஒட்டகம் நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைவனப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு இருகிறது. ஆனால், மீண்டும் நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 லீட்டர்வரை நீர் அருந்தவல்லவையாகும். 

அஸ்திரேலியா உலகின் ஏனைய நாடுகளில் இல்லாத பல வனவிலங்குகளின் தாயகமாகும். கங்காருக்களின் நாடு அல்லது தாயகம் என்றே ஆரம்பகாலத்தில் அவுஸ்திரேலியாவை அழைத்திருந்தனர். இன்று அந்த பெயர் அவுஸ்திரேலியாவுக்கு உள்ளது. அதற்கு அப்பால் உலகின் மிகப்பெரிய ஒட்டகங்களின் தாயகமும் அவுஸ்ரேலியாதான். 

19ஆம் நூற்றாண்டில் அரேபியா, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து போக்குவரத்து மற்றும் கனரக வேலைகளுக்காக ஒட்டகங்கள் அஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. 1840இல் “ஹாரி” என்ற முதல் ஒட்டகம் அஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. அவுஸ்ரேலியாவில் 19ஆம் நூற்றாண்டில் ஒட்டகங்கள் மூலம் பல தொழில்கள் கட்டியெழுப்பப்பட்டதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் பொருட்களை பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒட்டங்கங்கள் இனி தேவையில்லையெனக்கருதி பல ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் அவுஸ்ரேலியான் தெற்கு மற்றும் மத்திய காட்டுப்பிரதேசங்களில் விடப்பட்டன. 

என்றாலும், பிற்காலத்தில் ஒட்டங்களின் தொகை அதிகரித்தமையால் அவுஸ்ரேலியா பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தெற்கு அவுஸ்ரேலியாவில் மாத்திரம் கிட்டத்தட்ட 10 இலட்;சம் ஒட்டகங்கள் வாழ்வதால் ஒட்டகங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல முயற்சிகளை; எடுத்துள்ளது. குறிப்பாக 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒட்டகங்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால், தற்போது அவுஸ்ரேலியா முகங்கொடுத்துள்ள கடுமையான வரட்சியின் காரணமாக ஒட்டங்களை சுட்டுக்கொல்ல முடிவெடுத்துள்ளது. இதன் ஆரம்பகட்டமாகவே 10000 ஒட்டகங்களை சுட்டுக்கொல்லும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வரட்சியான சூழலுடன் ஒட்டகங்கள் குளங்களில் காணப்படும் தண்ணீரை ஒருநாளுக்குள் குடித்து தீர்த்துவிடுவதாகவும் காட்டுத் தீ பரவுவதற்கு ஒட்டங்கங்களும் காரணமென சில ஆய்வுகள் கூறுகின்றன. 

கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டு ஆரம்பம் முதல் தொடர்ந்து அவுஸ்திரேலியா பாரிய வரட்சிக்கு முகங்கொடுத்து வருகிறது. இன்றளவும் வரட்சி தொடர்வதுடன், கடந்த சில நாட்களாக ஓரளவு மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வரட்சிக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் பிற்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சுமார் ஒன்றரை மாதங்கள்வரை நீடித்ததால் பாரிய விளைவுகளை அவுஸ்திரேலியா சந்தித்தது. காடுகள் அழிந்து நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் ஒட்டகங்களும் மக்களுக்கான தண்ணீரை பருகி விடுவதால் மனிதன் வாழ முடியாத சூழல் அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுவிடும் என்பதாலேயே ஒட்டங்கங்கள் கொல்லப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. 

தற்போது ஒட்டகங்களை சுட்டுவீழ்த்த கைதேர்ந்த துப்பாக்கி வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஹெலிக்கொப்டர்கள் மற்றும் வாகனங்களில் சென்று இந்த துப்பாக்கி வீரர்கள் இதுவரை 5000ம் ஒட்டங்களை சுட்டுக்கொன்றுள்ளனர். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எழுந்துள்ள கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பணியை அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.   2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் சுமார் 14 மில்லியன் ஒட்டகங்கள் உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது. இவற்றில் 90 சதவீதமானவை அராபிய நாடுகளிலேயே வாழ்கின்றன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.   

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments