ஈராக்கை விட்டு அமெரிக்கா வெளியேறுவது சாத்தியமானதா? | தினகரன் வாரமஞ்சரி

ஈராக்கை விட்டு அமெரிக்கா வெளியேறுவது சாத்தியமானதா?

ஈரான் அணுவாயுதத்தை நோக்கி பயணிகிறது என்ற செய்தி அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை உறுதி செய்யும் விதத்தில் அந்த நாட்டின் தலைமைகள் செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. இது ஒருவகையில் ஈரானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாகவே தென்படுகிறது. அதனை ஈரான் சரிவரப் பிரயோகிக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அதே நேரம் பத்து நாட்களில் ஆறு அணுக்குண்டுகளை தயாரிக்கும் வலிமையுடன் ஈரான் இருப்பதாக தெரியவருகிறது. தற்போது ஈரான் நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹகானி ஈரானின் அணுப் பரிசோதனைத் திட்டத்தில் எந்த வரம்புகளும் கிடையாது என தெரிவித்துள்ளார். அதே நேரம் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் ஜேர்மனி பிரான்ஸ் என்பன கூட்டாக ஈரான் அணுவாயுதம் தொடர்பில் வரைபுகள் எதனையும் கடைப்பிடிக்காது செயல்படுவதாக எச்சரித்துள்ளது. இவை அனைத்தும் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்க முனைகிறது என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கட்டுரை சுலைமானியின் படுகொலைக்குப் பின்பான அமெரிக்கா மேற்காசியாவில் எதிர்கொள்ளும் நெருக்கடியை பரிசீலிப்பதாகச அமைந்துள்ளது.

முதலாவது ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என ஈராக் பாராளுமன்றம் வாக்கொடுப்பு மூலம் தெரிவித்துள்ளது. அதற்கான காரணத்தை தெரிவிக்கும் போது ஈராக் மீதான ஏவுகணைத் தாக்குதலையும் சுலைமானி உட்பட இராணுவத் தளபதியை கொலை செய்தததையும் குறிப்பிடுகிறது. அது மட்டுமன்றி தொடர்ச்சியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் மற்றும் இனம் தெரியாத தாக்குலைக் குறிப்பிட்டு வெளியேற்றத்தை கோருகிறது. மேலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஈராக்கின் இறையாண்மையை அமெரிக்கா மீறுவதாக எச்சரித்துள்ளது. மேற்காசியாவில் ஐயாயிரம் படைகளுக்கு மேல் வைத்துள்ள அமெரிக்காவுக்கு அதிக நெருக்கடியாக ஈராக்கின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இரண்டாவது அமெரிக்கா ஈராக்கின் கோரிக்கைக்கு செவிசாய்க்க தவறுகின்றது என்ற செய்தியுடன் பிரமண்டமான பேரணியை நடாத்த மக்களை ஒன்றிணையுமாறு அந்நாட்டுத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சதாம் ஹசைனின் படுகொலைக்குப் பின்னர் அந்த நாட்டை ஆட்சி செலுத்திய அமெரிக்காவுக்கு பெரும் அரசியல் தற்கொலையாக சுலைமானியின் படுகொலை அமைந்துள்ளது. இதற்கு வலுக் கொடுக்கும் விதத்தில் முழு இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஈரானிய தலைவர் ஹசன் அழைப்பு விடுத்துள்ளார். ஒருவகையில் அவரது பேச்சானது இஸ்லாமியத் தேசியவாதத்தை மீள மேலெளச் செய்வதற்கான நகர்வாகவே தென்படுகிறது. அதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தென்படுகிறதாக உணரமுடியும். காரணம் அமெரிக்காவின் செல்வாக்கு மேற்காசியாவில் சரிந்துள்ளதை இன்னும் அளவிட முடியாதுள்ளது. நாடுகளும் அவற்றில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவமும் அதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் ஈராக்கிலிருந்து அமெரிக்கா பின்வாங்குமாக இருந்தால் அதன் தந்திரோபாய பிரதேசத்தை இழக்கும் நிலை ஏற்படும். அது ஈரான் சிரிய பகுதியிலுள்ள அரண்களை இழப்பதுடன் சவுதியரேபியாவின் பாதுகாப்பினையும் பாதிப்பதாக அமையும்.

மூன்றாவது அமெரிக்காவின் அணியிலிருந்த ஏனைய நட்பு நாடுகளின் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதாக செய்திகள் கடந்த வாரமே வெளியாகின. அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் குவைத் மற்றும் சவுதியரேபியாவுக்குள் மேலும் பல நாடுகளது படைகள் நகர்வதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்காவது துருக்கியில் அமெரிக்கா மறைத்து வைத்திருந்த அணுவாயுதங்களை மீள பெறுவதற்கு அமெரிக்கா முயல்வதாகவும் துருக்கியுடனான உறவில் ஏற்பட்ட கசப்பே காரணம் எனவும் தெரியவருகிறது. இதனை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கில் நேட்டோ நாடு என்ற வகையில் துருக்கியில் அமெரிக்கா மறைத்து வைத்ததாகவும், அது தற்போது அமெரிக்காவுக்கே ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐந்தாவது ஈரான் மீதான தாக்குலை தவிர்க்கும் விதத்தில் அமெரிக்காவில் 60 மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கர்கள் வெவ்வேறு நகரங்களில் ஒன்று கூடி பொருளாதார தடையும் வேண்டாம் போரும் வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வண்ணம் செயல்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவின் மேற்காசியக் கொள்கையை மாற்ற வேண்டிய நிலையில் ட்ரம்ப் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறே ஈராக் மீது யூனியர் புஷ் நிர்வாகம் தாக்குதலை மேற்கொண்டபோது பல மில்லியன் மக்கள் அமெரிக்காவில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் அப்போது அமெரிக்க நிர்வாகம் செவிசாய்க்காது இருந்தது போல் தற்போது இருக்க முடியுமா என்பது கவனத்திற்கு உரிய விடயமாகும்.

ஆறாவது அமெரிக்க காங்கிரஸ் ட்ரம்ப் இன் தன்னிச்சையான போர் நடவடிக்கைக்கான அதிகாரத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் தீர்மானம் ஒன்றினை அண்மையில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரம் செனற் சபையில் ட்ரம்ப்க்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

எனவே அமெரிக்காவுக்கும் அதே நேரம் ட்ரம்ப்க்கும் ஒரே நேரத்தில் நெருக்கடியை மேற்காசிய அரசியல் கொண்டுவந்துள்ளது. இதனால் மேற்காசியாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா இழக்கும் நிலை ஏற்பட்டால் அதனால் ஏனைய பகுதி-களில் நிலை கொண்டிருக்க முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக சிரியாவை ஏற்கனவே இழந்துள்ள அமெரிக்கா ஈராக்கையும் துருக்கியையும் இழக்கும் நிலை ஏற்படுமாக இருந்தால் அப்பகுதியில் நிலை கொள்வதில் பாதுகாப்பற்ற நிலையே ஏற்படும்.

இதற்கு மேலதிகமாக ஈரான் அணுவாயுதத்தை பரிசோதிக்கும் வலிமையை தனதாக்கி வருகிறது. இது விரைவில் மேற்காசிய அரசியலில் அதிர்ச்சியான முடிவுகளை ஏற்படுத்தும் என்று மேற்கு ஊடகங்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

எனவே அமெரிக்கா மேற்காசிய அரசியலில் மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்பதை மட்டுமே அது உணர்த்துவதாகத் தெரிகிறது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Comments