இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரம்: சில அவதானிப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரம்: சில அவதானிப்புகள்

இலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவதை அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. டிஜிட்டல் என்பதற்கு துடிமம், எண்முறை, எண் சமிக்​ைஞ என நல்ல தமிழ் பயன்தரு சொற்கள் இருந்த போதிலும் அதே ஆங்கிலச் சொல்லை அப்படியே எடுத்தாள்வது ஸ்ரீமான் பொதுஜனத்திற்கு இலகுவானது என்பதால் மொழிப்பெயர்வை விட்டு விடலாம். 

தென்னாசியாவிலேயே தகவல் தொழில்நுட்பத்துறையில் இலங்கையின் அடைவுகள் சிலாகிக்கத்தக்கன. குறிப்பாக அலைபேசிகளின் உட்புகுகை 3G, 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களின் அறிமுகம் மற்றும் பிரயோகம் என்பன ஏனைய நாடுகளை இலங்கையிலேயே முதன் முதலில் பெரியளவில் ஏற்பட்டது. சனத்தொகை குறைவாக இருந்த போதிலும் டிஜிட்டல் அறிவு இலங்கையின் சனத்தொகையில் கணிசமானோருக்கு இருக்கிறது. தொலைபேசி, இணைய பயன்பாடு பற்றிய அறிவு மூத்த தலைமுறையினர் மத்தியிலும் ஓரளவுக்கேனும் உள்ளது. அது மட்டுமன்றி தொலைதூர கிராமங்களில் உள்ளவர்களும் குறைந்தபட்சம் தொலைபேசியை உபயோகிப்பவர்களாக உள்ளனர். 

பலர் ஸ்மார்ட் போன்கள், கணினிகள், மடிகணினிகள் மற்றும் லப்டப்கள் போன்றவற்றின் ஊடாக சமூக வலைத்தளங்களில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும்  மிகப் பெரிய பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டமையை நாம் நன்கறிவோம். எதிர்வரும் காலங்களில் நேரடி பிரசாரங்களுக்கு இணையாக வலைத்தள பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுமென நம்பலாம். அது மட்டுமன்றி அவ்வப்போது எழும் சமூக, அரசியல், நிகழ்வுகளை துடிப்புடன் முன்கொண்டு செல்வதில் டிஜிட்டல் ஊடகங்கள் உடனடிப் பங்களிப்பு வழங்குவதைக் காணலாம். அதுமட்டுனறி உடனடி நிகழ்வுகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதும் இத்தகைய டிஜிட்டல் ஊடகங்கள் முனைப்பு காட்டுகின்றன. அதன் மூலம் சமூகத்தை இற்றைப்படுத்தப்பட்ட அறிவுள்ளவர்களாக மாற்றலாம். 

இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பப் பணிகளை ஒருங்கிணைக்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) இலங்கைப் பொருளாதாரத்தை டிஜிட்டல் முறைக்கு நிலைமாற்றம் செய்வதில் பின்வரும் துறைகளில் முன்னுரிமை கொடுத்துள்ளது. 

1. கைத்தொழில் அபிவிருத்தி 

2. டிஜிட்டல் உட்கட்டமைப்பு விருத்தி 

3. சட்டத்துறைக் கட்டமைப்பும் அபிவிருத்தியும்

4. அரசாங்கக் கொள்கை கட்டமைப்பும் அபிவிருத்தி 

5. டிஜிட்டல் அரசாங்கம் 

6. மனித வள இயலுமை அபிவிருத்தி 

7. பாதுகாப்புத்துறை 

8. பொதுமக்களை வலுவூட்டல் 

மேற்படி துறைகளில் டிஜிட்டல் மயமாக்கலை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தை வினைத்திறனுள்ள பொருளாதாரமாக மாற்றுவதுடன் மக்களை ஆற்றல் வாய்ந்த அபிவிருத்தி பங்காளராக மாற்றமுடியும் என நம்பப்படுகிறது. 

சுருக்கமாகச் சொன்னால் அரசாங்கத்துறை தன்னை டிஜிட்டல் மயமாக்கலுக்கு உட்படுத்தும் போது பொதுமக்களுக்கு வினைத்திறான அரச சேவையை வழங்க முடியும் என நம்புவதுடன் அவற்றினால் பயன் பெறுவோரும் தமது நேரத்தையும் வளங்களையும் வினைத்திறனான பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஜிட்டல் உட்கட்டுமானங்களை இணைய வழியாக இணைத்து அரசாங்கத்தை டிஜிட்டல் மயப்படுத்தலாம். ஏற்கனவே இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் போன்றன பொது மக்களுக்கு டிஜிட்டல் முறையிலமைந்த சேவைகளை வழங்கி வருவதை அவதானிக்கலாம். வாகன வரி, அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை போன்றன சில இடங்களில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளன. 

எதிர்காலத்தில் இலங்கை பிரஜையொருவர் பற்றிய சகல தரவுகளையும் டிஜிட்டல் முறைப்படி நிரைப்படுத்தி சேமித்து வைப்பதன் மூலம் அவர் தொடர்பான அனைத்து விடயங்களையும் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகள் உள்ளடங்கலாக தகவல்களை சேமித்து இலகுவதாகவும் திறனாகவும் அரச சேவைகளை பெற்றுக்கொடுக்கலாம்.

தற்போது நேரடிப் பணப்பரிமாற்றத்திற்கு மாற்றீடாக, காசோலைகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து வங்கிப் பரிமாற்றங்கள் வாயிலாக டிஜிட்டல் மயப்படுத்தும் செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமன்றி பணத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக அப்ளிகேஷன்களை (Apps) பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல் செய்ய ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அலைபேசிகள் ஊடாக செலுத்தும் முறைகள் இலங்கையில் பிரபலமடைந்து வருவதை காண முடிகிறது. இந்தியாவிலும் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறைகளைப் பின்பற்ற மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை நினைவிருக்கலாம். 

உலகளாவிய ரீதியில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பணத்தை பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்ட போதிலும் அவற்றின் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக அவற்றில் உட்புகுகை எதிர்பார்த்தளவு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தவில்லை. தற்போது உலகப் பொருளாததாரத்தின் பின்னடைவு நிலைமை காரணமாக இவற்றின் விரிவாக்கம் பாதிக்கப்பட்டுள்ளமை இரகசியமல்ல. 

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கம் பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சுகாதாரத் துறையில் நோய்களை இனங்காணல், நோய்த்தடுப்பு, குணமாக்கல் துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் சாதனைகளைச் செய்துள்ளது.  இதன் மூலம் நோயாளிக்குரிய சேவையினை துரித கதியிலும் சரியாகவும் செய்வதன் மூலம் உயிர்களை காப்பாற்ற முடிகிறது. இலங்கையில் இத்தகைய தொழில்நுட்பங்களின் பிரயோகம் சுகாதாரத் துறையில் குறைவாக இருக்கின்ற போதிலும் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பரிசோதனைக்கூட அறிக்கைகளை உடனடியாக இணையம் ஊடாக பெற்றுக்கொடுக்கும் நடைமுறை நேர விரயத்தையும் பண விரயத்தையும் குறைக்கிறது. 

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப பிரயோகம் பயிரழிவு நோய்த்தாக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தவும் உதவும் கைத்தொழிலின்   பல்வேறு மட்டங்களில் உள்ளோர் தமக்கிடையில் முன்னோக்கிய மற்றும் பின்னோக்கிய தொடர்புகை பயன்பாட்டையும் உற்பத்தி பெருக்கத்தையும் ஏற்படுத்தலாம். அத்தோடு கடல்கடந்த சந்தைகளை நாடவும் போட்டி போடவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவும். 

டிஜிட்டல் அறிவு ஒரு நாட்டின் குடிமகனுக்கு எந்தளவுக்கு அவசியமோ அதே அறிவு மனிதனை மழுங்கடித்து விடவும் கூடும்.

குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையை எந்தளவு வசியம் செய்திருக்கிறது என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குடும்பத்தில் இருந்து தொடங்கினால் ஒவ்வொரு அங்கத்தவர்களும் தமது அலைபேசியிலோ, கணினியிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ மூழ்கிக் கிடக்கவே நேரம் சரியாக உள்ளது. சாப்பாட்டு மேசைகளிலும் கையில் அலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருப்போரை அவதானித்திருப்பீர்கள்.  

ஆகவே நல்லதொரு தொழில்நுட்பம் குடும்ப உறவுகளில் உரையாடல்களில் கணிசமான பாதிப்பை ஏற்கெனவே செய்துவிட்டிருக்கிறது. ஓடியாடி விளையாடுவதிலும்,  நண்பர்களைக்காண பயணம் செய்வதிலும்  இருக்கும் ஆர்வம் குறைந்து டிஜிட்டல் உலகில் சஞ்சரிக்கும் இளைய தலைமுறை எதனை சாதிக்கப்போகிறது என்ற வினாவும் எழுகிறது.

அத்தோடு டிஜிட்டல் உலகில் எது சரி, எது பிழை என தீர்மானிக்க முடியாத நிலையும் உள்ளது. மறுபுறம் அரசாங்கங்கள் தமது குடிமக்களின் பிரத்தியேக தகவல்களை பெற்றுக்கொள்ளும்போது தனிமனித சுதந்திரத்திற்கு உள்ள அவகாசம் குறைந்துபோகிறது.

பெறப்படும் தகவல்கள் தவறான நபர்களுக்கு செல்லும் அபாயத்தை இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது. மிகப் பாதுகாப்பான இணையத் தளங்களிலும் சைபர் தாக்குதல் நடத்தி தகவல்களை திருடும் நபர்கள் ஏராளம் உள்ளனர்.  

அத்தோடு சில முரட்டு அரசாங்கங்கள் (Rogue Government) தமது அரசியல் பழிவாங்கல்களுக்காக பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அதனை எவராலும் தடுத்துவிட முடியாது. இலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதை வரவேற்காமலிருக்க முடியாது. வினைத்திறனான ஒரு நாட்டை கட்டியெழுப்ப அது கட்டாயம் தேவை.

ஆனால் அதேவேளை அதில் எழக்கூடிய இடர்கள் மற்றும் அபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். அல்லாது விட்டால் குரங்கின் கையில் கிடைத்த வாளைப் போன்றதொரு நிலை ஏற்படலாம்.      

Comments