மண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்? | தினகரன் வாரமஞ்சரி

மண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்?

பத்து பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய பொருளாதார சொத்தாகும். எனினும் முன்னைய அரசாங்கம் அத்துறைமுகத்தை மூடிவிட்டது. இது கிழக்கு மாகாண மக்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும்.  

ஒலுவில் துறைமுகம் 2008ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கிழக்கின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திறந்துவைக்கப்பட்டது.  

46 மில்லியன் யூரோ செலவில் டென்மார்க்கின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (DANIDA) நிதி உதவியில் ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஒலுவில் துறைமுகத்தின் வர்த்தக பகுதி 330 மீற்றர் நீளமான இறங்கு துறையையும் எட்டு மீற்றர் ஆழத்தையும் கொண்டது. அதேநேரம் மீன்பிடி பகுதி 200 மீற்றர் இறங்கு துறையையும் மூன்று மீற்றர் ஆழத்தையும் கொண்டது அதேநேரம் இத்துறைமுகத்தின் விசேடமான அம்சம் அங்குள்ள மீன் பதனிடல் பிரிவு ஆகும். கிழக்கு மாகாண கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் இங்கு பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட முடியும். இதற்கு USP வரி விலக்கும் பெறப்பட முடியும். அவ்வாறான நிலையில் மீனவர்களுக்கான வருமானம் யூரோக்களிலும் கிடைக்கும்.  

இத்துடன் மேற்படி துறைமுகத்தில் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை குளிர் அறை வசதி, சேமிப்பு வசதிகள் ஆகியவற்றுடன் மீன்களை ஏலமிட்டு விற்பனை செய்யும் அறைகளும் உள்ளன.  

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் மீன்களுடன் 500 மீன்பிடி படகுகள் இங்கு தரித்திருக்க முடியும்.  

கிழக்கு மாகாணத்தின் பொருளாதார உட்கட்டமைப்பிற்கு பாரிய ஊக்குவிப்பாக விளங்கிய ஒலுவில் துறைமுகத்தின் மூலம் 20 ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைத்ததாக மீனவ சங்கங்களின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க கூறுகிறார். இத் துறைமுகத்தை மீண்டும் திறப்பதில் முன்னோடியாக செயற்படுபவர்களில் இவரும் ஒருவர்.  

ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் மீண்டும் திறக்கப்பட்டால் கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமல்ல; மொத்த நாட்டுக்குமே அது பயன்தரும்.  

பெருமளவு மீன் வளத்தைக் கொண்ட தீவாக இலங்கை உள்ளது. அத்துடன் இங்கு 50க்கு மேற்படி மீன்பிடித்துறைமுகங்கள் உள்ளன. இத்தகைய வளங்களும் வசதியும் இருந்தும் கூட நாம் கோடிக்கணக்கில் செலவு செய்து மீனை இறக்குமதி செய்து வருகிறோம். இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட மீன் அம்பாறை பிரதேசத்தில் விற்பனை செய்யப்படுவதை நானும் கண்டிருக்கிறேன். எனவே ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் திறந்தால் மீனைப் பொறுத்தவரை நாட்டின் தேவையை ஓரளவுக்கேனும் எம்மால் நிவர்த்தி செய்ய முடியும் என்று கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க கூறுகிறார்.  

மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஒரு காலத்தில் செயற்பட்டவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க. ஒலுவில் துறைமுகத்தின் மிகப்பெரிய சொத்து அதன் மீன் பதனிடல் பிரிவு என்கிறார் இவர் இது சுமார் 2 பில்லியன் ரூபாய் பெறுமதியானது. துறைமுகம் கடந்த சில காலமாக மூடப்பட்டுள்ளபோதும் இந்த மீன் பதனிடல் பிரிவு இன்றும் கூட நல்ல நிலையிலேயே உள்ளது.  

அதேநேரம் ஒலுவில் வர்த்தக துறைமுகம் மீன்பிடி படகுகள் மட்டுமன்றி அப்பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களும் தரித்து நிற்கும் வசதிகளை கொண்டது என்றவர் மேலும் கூறுகிறார்:  

கடலில் ஏற்பட்ட இயற்கை விளைவுகளின் காரணமாக துறைமுகத்தின் நுழைவாயிலில் மண் சேர்ந்து மணல் மேடாக உருவாகிறது. கடந்த வருடத்தின் ஆரம்பம் வரை இந்த மணல்மேடுகள் கிரமமாக அகற்றப்பட்டு வந்தன. அதன் பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபையின் சீரற்ற செயற்பாடுகளினால் மணல் மேடுகளின் அளவுகள் அதிகரித்தன.  

அவை முறையாக அகற்றப்படாததால் அந்த மணல் மேடுகள் துறைமுகத்தை முற்றாக மூடிவிட்டன. இதனால் 200க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் துறைமுகத்துக்குள் சிக்கிக்கொண்டன. உரிய நேரத்தில் அவை கடலுக்குள் செல்லமுடியாமல் போய்விட்டது. மேற்படி மணல் மேடுகளை அகற்றுமாறு துறைமுக அதிகார சபைக்கு பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதிலும். அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.   முன்னாள் மீன் பிடி அமைச்சரும் உயர்மட்ட துறைமுக அதிகாரசபை அதிகாரிகளும் துறைமுகத்துக்கு விஜயம் செய்த போதிலும் அவர்களால் துறைமுகத்தை இயங்கச் செய்ய முடியாது போய்விட்டது.  

இந்த மணல் மேடுகள் விவகாரத்துக்கு தீர்வொன்றை காணமுடியாது போனதையடுத்து மீன் பிடி அமைச்சர் ஒலுவில் துறைமுகம் ஒரு வெள்ளை யானை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.  

மணல் மேடுகள் காரணமாக மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீன் பிடி படகுகளை கடலுக்குள் எடுத்துச் செல்ல மீனவர்கள் மேலதிக படகுகள், லொறிகள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டது. துறைமுகத்தில் இருந்து படகுகளை கடலுக்கு எடுத்துச்செல்ல 60 ஆயிரம் ரூபா வரை செலவாகும் நிலையில் சுற்றுவட்டமாக லொறிகள் டிராக்டர்கள் மூலம் மீன் பிடி படகுககளை கடலுக்கு எடுத்துச் செல்ல 100 மில்லியன் ரூபா வரையில் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.  

இதேநேரம் ஒலுவில் துறைமுகத்துக்கு உல்லாசப் படகுகள் வந்துசெல்லும் வசதி இருப்பதால் அது சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்பட முடியும் என்று ஒலுவில் உல்லாசப் பயண விடுதியொன்றை நடத்திச்செல்லும் சந்திரா விக்கிரமசிங்க கூறுகிறார்.  

ஒலுவில் துறைமுகத்தின் நுழைவாயிலை அடைத்துள்ள மண் மேடுகளை அகற்ற தூர்வாரி (Dredger) பயன்படுத்தலாம் என்று துறைமுகத்தில் மண் மேடுகளை அகற்ற அது போன்ற தூர்வாரிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறான தூர்வாரியை ஒலுவிலில் நிரந்தரமாக வைத்து பயன்படுத்தினால் அதற்கான செலவினை வழங்குவதற்கு மீனவர் சமூகம் தயாராகவே இருக்கிறது என்று மீனவர் தரப்பு சொல்கிறது. அதே வேளை இங்கு ஒரு அலைக்கரையும் (break water ) தேவைப்படுகிறது.  

ஒலுவில் துறைமுகம் ஒரு வெள்ளை யானை அல்ல. அது உறங்கும் செல்வம் மாத்திரமே. அதனை மீண்டும் இயக்குவதன் மூலம் மீன் ஏற்றுமதியை தொடர்ச்சியாக மேற்கொள்ளலாம்.  

இதனை முறைப்படி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கிழக்கு மாகாண மீனவ சமூகம் கேட்டுக்கொள்கிறது. 

ராம்ஜி   

Comments