முற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை | தினகரன் வாரமஞ்சரி

முற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை

இலங்கை ஒரு விவசாய நாடாகும், விவசாயப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுதான் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதுடன், இலங்கை  மக்களும் நெல்லரிசிச் சோற்றையே பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு நாட்டில் பெரும்பாலான இடங்களில் வேளாண்மை செய்து நெல்லுற்பத்தியை விவசாயிகள் பெருக்கி வருகின்ற போதிலும், இயற்கையாலும், நோய்த் தாக்கங்களாலும், வருடாந்தம் பாதிப்புக்கள் வரத்தான் செய்கின்றன. இவ்வருடம் பெரும்போக நெற் செய்கையை மேற்கொண்டுள்ள  விவசாயிகள் பல  இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இவ்வருடம் பெரும்போக நெற் செய்கை அண்மையில் ஏற்பட்ட அடைமழை வெள்ளத்தினால் முற்றாக அழிவடைந்துள்ளதாக களுதாவளை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதே களுதாவளைக் கிராமமாகும். இக்கிராமத்தில் மட்டக்களப்பு வாவி அமைந்துள்ள பகுதியில் நெற்செய்கைக்குரிய காணியும், கடற்கரை ஓரமாக மேட்டுநிலப் பயிற் நெய்கைக்குரிய காணியும் அமைந்துள்ளன. இவ்வாறே களுதாவளைக் கிராமம் பன்நெடுங்காலமாகவிருந்து விவசாயத்திற்குப் பெயர்போன கிராமமாக திகழ்ந்து வருகின்றது. 

இருந்த போதிலும், அக்கிராம மக்கள் இவ்வருடம் மேற்கொண்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கை வெள்ளத்தினால் முற்றாக அழிவடைந்து விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். 

நான் சுமார் 45வருடங்களுக்கு மேலாக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன், இவ்வருடம் 8ஏக்கர் வேளாண்மை செய்துள்ளேன். அவை அனைத்தும் இம்முறை 3தடவைகள் வந்த மழை வெள்ளத்தினால் பாதிப்புற்று அழிந்துவிட்டன. இதற்கு அரசாங்கம்தான் உதவிக்கரம் நீட்டவேண்டும். இதிலிருந்த நாங்கள் என்ன செய்வதென்று அறியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு வருடாந்தம் எமக்கு அழிவுகள் வருகின்றன, ஆனால் எமக்கு எதுவித நஷ்டஈடுகளும் கிடைக்கவில்லை. எனத் தெரிவிக்கின்றார் குஞ்சித்தம்பி கந்தப்பன். 

வாழ்வாதாரப் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றுக்கு நூறுவீதம் இழப்பீடுகள் வழங்காவிட்டாலும், ஐம்பது வீத இழப்பீடுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உந்து சக்தியளிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாகும். 

நான் இவ்வருடம் 2ஏக்கர் வேளாண்மைச் செய்துள்ளேன். அந்த 2ஏக்கர் நெல்வயலும், 3தடவைகள் ஆற்று வெள்ளம் வந்து முற்றாக அழிவடைந்துவிட்டன. இந்நிலைமை வருடாந்தம் மழைக் காலத்தில் ஏற்படத்தான் செய்கின்றன. இதற்கு எமது நெல் வயல் அமைந்துள்ள எல்லையில் உள்ள சிரமதானக் கட்டு, உப்புத்தண்ணிக்கட்டு ஆகிய இருண்டு கட்டுக்களையும், சுமார் 4அடி உயரத்திற்கு உயர்த்திக் கட்டினால் ஆற்று வெள்ளம் வயல் நிலத்தினுள் ஏறாமல் பாதுகாத்து, பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கலாம். இதனை அடுத்த போகம் செய்வதற்கு முன்னர் அரசாங்கம் செய்துதந்தால் விவசாயிகளாகிய எமக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனால் விவசாயிகள் வருடாந்தம் ஏற்படும் பெரும் நஷ்டத்திலிருந்து மீண்டு கொள்வார்கள். இவ்வருடம் ஆறு பெருக்கெடுத்து உப்பு நீரும் சேர்ந்து வேளாண்மைச் செய்கையினுள் பரவியதனால் அனைத்து வேளாண்மை வயல்களும் அடியோடு அழுகிப்போய்விட்டன எனத் தெரிவிக்கின்றார் இராசலிங்கம் இராஜரெட்ணம். 

களுதாவளைக் கிராமத்தின் வோளாண்மைச் செய்கைக்கு பல சவால்கள் இருந்து வருவதுதான் அப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. அதாவது அவர்களின் வயற் கண்டத்தில் இரு பிரதான அணைக்கட்டுக்கள் உள்ளன. அதனை அவர்கள் ஒன்றை உப்புத்தண்ணிக் கட்டு என்றும் மற்றயதை சிரமதானக் கட்டு  எனவும் அழைக்கின்றார்கள், இவ்விரு கட்டுக்களினதும் உயரம், பதிவாக உள்ளதனால் மழை வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவி வருடந்தோறும் பெருக்கெடுத்து இவ்விரு கட்டுக்களையும் தாவி வேளாண்மைச் செய்கையினுள் ஆற்றிலுள்ள உவர்நீரும் கலந்து உட்புகுவதனால், வேளாண்மைச் செய்கை வருடாந்தம் இவ்வாறே அழிவடைந்துதான் செல்கின்றது. எனவே அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கும் உப்புத்தண்ணிக் கட்டு, மற்றும் சிரமதானக் கட்டு ஆகிய இரு கட்டுக்களையும் சுமார் 4அடி உயரத்திற்காவது உயர்த்தி தரவேண்டும் என்பதுவே அவர்களது கோரிக்கையாகவுள்ளது. 

தற்போது களுதாவளை வயற்கண்டத்தில் 186ஏக்கர் பெரும்போக வேளாண்மை செய்துள்ளோம். கடந்த வரட்சியான காலப்பகுதியில் எமது ஆற்றில் உவர் நீரும் வந்துள்ளது. தற்போது அதிக மழை வெள்ளத்தினால் ஆற்றில் கலந்திருந்த உவர் நீரும் கலந்து ஆற்று நீர் எமது வயற் கண்டத்தில் பரவியுள்ளது. இதனால் அடியோடு 186ஏக்கர் வேளாண்மைச் செய்கையும், சேதமடைந்துள்ளன. எமது வயற் கண்டத்தின் எல்லையிலுள்ள உவர் நீர் கட்டு, சிரமதானக் கட்டு ஆகிய இரு கட்டுக்களும் உயரமாக அமைந்திருந்தால் ஆற்று நீர் எமது வயலினுள் உட்புகாமலிருந்திருக்கும், இந்த இரு கட்டுக்களும் சேதமடைந்து கிடக்கின்றன. இக்கட்டுக்களைப் புனரமைத்து, அதிலுள்ள தரிசுகளையும் புனரமைத்துத் தருமாறு நான் 18வருட காலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்து வருகின்றேன. ஆனால் அது இன்றுவரை கைகூடாத நிலைதான் இருந்து வருகின்றது. 

இரண்டு தடவைகள் தொடர்ந்து வெள்ளம் வந்தது.  அழிவடைந்த வேளாண்மையில் ஒரு சில தப்பிப்பிழைத்தன.  மூன்றாவது தடவையும், வெள்ளம் வந்து மிகுதியாக எஞ்சியிருந்த அனைத்து பயிரினங்களையும், அழித்துவிட்டுச் சென்றுவிட்டது. இதனால் எமது விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக அழிவடைந்துள்ளது. இதனோடிணைந்து மிளகாய், வெற்றிலை, கத்தரி, உள்ளிட்ட மேட்டு நிலப் பயிர்களைப் பயிரிட்டபோதும்,  அந்த மேட்டுநிலப் பயிற்செய்கையும், இந்த வெள்ளத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளன. ஒட்டு மொத்தத்தில் களுதாவளை விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக இம்முறை மேற்கொண்டிருந்த அனைத்து பயிரினங்களும், முற்றாக அழிவடைந்துள்ளன. 

வருடாந்தம் இவ்வாறுதான் ஏற்படுவதுதான். ஆனால் இவ்வருடம் மிகவும் பலத்த பாதிப்பாக மாறிவிட்டது. வருடாந்தம் நூற்றிற்கு 50வீதம் அறுவடை எடுப்பது வழங்கம், ஆனால் இவ்வருடம் ஒரு வீதமாவது நாங்கள் ஆறுவடை செய்ய முடியாதுள்ளது. அடுத்த போகம் வேளாண்மைச் செய்கையை மேற்கொள்வதற்கு எமக்கு ஒரு வழியுமில்லை, பலர் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்கள், அவற்றை எவ்வாறு மீட்பது எனத் தெரியாதுள்ளனர். நான் இவ்வருடம் 12ஏக்கர் வேளாண்மை செய்தேன், அதில் கால் ஏக்கர் நெல்லை வெட்டி எடுக்க முடியாது, ஒரு மூடை விதைநெல்லின் விலை 3500ரூபா, உழவு, பசளை, என ஏராளமான செலவுகள் குறைந்தது ஒரு ஏக்கர் வயல் செய்வதற்கு 35000 ரூபா செலவாகியுள்ளது.  அரசாங்கம் எமக்கு இவற்றுக்கு தகுந்த நஷ்ட ஈட்டைத் தந்துதவ வேண்டும். 

அரசாங்கம் நாங்கள் ஒரு ஏக்கருக்குச் செய்த செலவில் அரைவாசி வீதத்திற்காவது எமக்கு நஷ்டஈட்டைத் தந்தால் நாம் ஓரளவேனும் தேறிக்கொள்வோம், களுதாவளை விவசாயிகள் மிகவும் முன்னுதாரணமானவர்கள், முயற்சியுடைவர்கள், என்ன செய்துவது அவர்களுக்கு இம்முறை இவ்வாறு அழிவு வந்துவிட்டது, இதற்கு அரசாங்கம் நிச்சயமாக கைகொடுக்க வேண்டும். 

இவற்றினைவிட மட்டக்களப்பு மவாட்டத்திலுள்ள அனைத்து அரச அதிகாரிகளும் மட்டக்களப்பு கச்சேரியில் மாதாந்தம், ஒன்றுகூடி கதைக்கின்றார்கள் (மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்) அவ்வாறான கூட்டங்களுக்கு ஒவ்வொரு விவசாய அமைப்புக்களிலிருந்தும், தலா இரண்டு விவசாயிகள் வீதம் கலந்து கொள்ளச் செய்தால் அதில் எமது கருத்துக்களையும் நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். நான் 12வயதிலிருந்து வேளாண்மைச் செய்து வருகின்றேன். 42வருட அனுபவம் இருக்கின்றது. விவசாயத்துறையில் அபிவிருத்தி காண்பதற்கு எம்மைப்போன்றோரின் கருத்துக்களையும் அரசாங்க அதிகாரிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் கீழ் மட்டத்திலிருந்துதான் கருத்துக்கள் மேலதிகாரிகள் வரைக்கும் போகவேண்டும். அப்போதுதான் நாங்கள் அபிவிருத்தியை நோக்கிச் செல்லாம். மேலதிகாரிகளுக்கு எமது வயலைப் பற்றித் தெரியாது, நாங்கள், சொல்வதையும் அவர்கள் கேட்கின்றார்கள் இல்லை. 

எனவே எமக்கு தகுந்த நஷ்ட ஈடு தரவேண்டும் எமது வயற் கண்டத்தில் மொத்தம் 360ஏக்கர், இதில் நாங்கள் இரண்டு போகங்கள் வேளாண்மை செய்வோம், தற்போது நாங்கள், அவ்வாறு செய்ய முடியாமல்தான் 186ஏக்கர் செய்துள்ளோம், என களுதாவளை வயற்கண்டத்தின் வட்டவிதானை தங்கராசா சற்குணம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் பெய்த பலத்த  மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த களுதாவளைப் பகுதி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களின் நெல் வயல்கள் முற்றாகச் சேதடைந்துள்ளதாக விவாயிகள் கவலை தெரிவித்து வருகின்ற நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு அரசாங்கம் துரித கதியில் நிவாரணங்களை வழங்கினால்தான் அதனை வைத்துக் கொண்டு தாம் எதிர்வருகின்ற சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இது இவ்வாறு இருக்க அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களக்களப்பு மாவட்டத்தில் சேதமைந்துள்ள நெற்செய்கை தொடர்பான விபரங்களைத் திரட்டி வருகின்றோம். இதுவரையில் 15000 விவசாயிகள் தமது விபரங்களை வழங்கியுள்ளார்கள், தற்போது வெல்லாவெளி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் நாம் நேரடியாகச் சென்று வேளாண்மைச் செய்கையின் பாதிப்புக்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றோம், அவை முடிவுற்றதும், களுதாவளைக்கும் நாம் நேரில் சென்று பாதிப்பின் தன்மை தொடர்பில் அறியவுள்ளோம், இவற்றினைவிட மாவட்டத்திலுள்ள அனைத்து கமநல கேந்திர நிலையங்களுடாக பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் திரட்பட்டு வருகின்றன" என கமத்தொழில மற்றும் கமநல காப்பறுத்திச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார். 

கமத்தொழில் மற்றும் கமநல காப்பறுதிச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரனின் கருத்துக்கள் வெறுங்கையுடன் நிற்கும் விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலைக் கொடுப்பதாக இருந்தாலும், அவை நடைமுறைக்கு எப்போது வருகின்றனவோ அப்போதுதான் அந்த விவசாயிகளின் வாழ்விலும் ஒளியேற்றப்படும்  என்பதும் அவர்களது எதிர்பார்ப்பாகும்.   

வ.சக்திவேல்

Comments