பிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

பிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா?

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு முன்னரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பாக பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

கடந்த சில வருடங்களுக்கு முன் சொப்பிங் பை பாவனையை முற்றாக ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அழிக்க முடியாத சொப்பிங் அல்லது பொலித்தினுக்கு பதிலாக அழியக்கூடிய வகை பொலித்தீன் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டது.

எனினும் மிக சொற்ப காலமே அது நீடித்தது. மீண்டும் அந்த பாவனை கொஞ்சம் கொஞ்சமாக அருகிப் போய் மீண்டும் பழைய சொப்பிங் அல்லது பொலித்தீன் புழக்கத்துக்கு வந்துள்ளது.

புதிய சொப்பிங் அல்லது பொலித்தீனை சந்தைப்படுத்த முடியாமல் போனமைக்கு காரணம் அதன் உற்பத்தி செலவு அதிகரிப்பேயாகும்.

குறிப்பாக அன்றாடம் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படும் லஞ்ச் சீற் முன்பிருந்ததை விட பல மடங்கு விலை அதிகரிக்கப்பட்டே விற்கப்பட்டது. 50 சதம் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட சொப்பிங் பைகள் இரண்டு ரூபாவுக்கு அதிகமாக விற்கப்பட்டன.

அதுபோன்றே புதிய உற்பத்தியான பொலித்தீனில் தயாராகும் அனைத்து பொருட்களும். பல மடங்கு விலை அதிகரித்தன இதனால் அவற்றுக்கான விற்பனை வீழ்ச்சி கண்டது.

சிலர் லஞ்ச் சீற்றுக்குப் பதிலாக வாழை இலைகள் மற்றும் லஞ்ச் ​ெபாக்ஸ்களை பயன்படுத்தினர். அந்த வழக்கமும் தொடரவில்லை.

அதேபோன்று பிளாஸ்டிக் பாவனை தொடர்பிலும் சில நியதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. என்றாலும் அன்றாட பாவனையில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கிலான பொருட்கள் மிக அதிகமாக உபயோகிக்கப்பட்டதால் அது சாத்தியப்படவில்லை. அதற்கு மற்றொரு காரணம் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருட்களை அறிமுகம் செய்யாமையே.

இந்த நிலையில் தற்போது அரசாங்கம் சூழல் மாசு மற்றும் பிளாஸ்டிக் பாவனையினால் மனித வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியும் பிரதமரும் சுற்றாடல் அதிகார சபைக்கும் சுற்றாடல் அமைச்சுக்கும் பணிப்புரை விடுத்துள்ளனர்.

அதற்கான செயற்திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகின்றன எந்தெந்த மட்டத்தில் அவை நாடு பூராவும் முன்னெடுக்கப்பட போகின்றன என்பது தொடர்பிலும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சூழல் மாசு, அதிலும் குறிப்பாக மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை சுற்றாடல் ராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி செயலமர்வில் ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர கலந்துகொண்டு மேற்படி செயற்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் நாட்டுக்கு மிக முக்கியமான மேற்படி தேசிய திட்டத்தை செயற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு அது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலைகள், 10000 அறநெறிப் பாடசாலைகள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப பாடசாலைகள் ஆகியவற்றிலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தொடர்பிலும் மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் தற்போது சித்திரம் வரையும் நடவடிக்கைகள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எவரது வற்புறுத்தலிலும் அவை இடம்பெறவில்லை. தமது பிரதேசங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அப்பகுதி மக்கள் தாமே முன்வந்து சித்திரம் வரைய ஆரம்பித்துள்ளனர்.

அதுபோன்றே பிளாஸ்டிக் பாவனை தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினால் அவர்களின் பங்களிப்பு இதில் மிக அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார்

இந்த செயலமர்வில் சுகாதாரத் துறை, சுற்றாடல் துறைசார்ந்த நிபுணர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சில துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

குறிப்பாக நாம் அன்றாடம் பாவிக்கின்ற பேனை, பல் துலக்கும் பிரஷ், குளிர்பானங்கள் அல்லது தேநீர் அருந்துவதற்காக உபயோகப்படும் பிளாஸ்டிக் கப் மற்றும் ஸ்ட்ரோக்கள் போன்றவை அன்றாடம் நமது உடலில் சேர்க்கும் நச்சுத்தன்மை தொடர்பிலும் அவர்கள் விளக்கமளித்தனர்.

அவர்கள் தெரிவித்த தகவலுக்கு இணங்க நாட்டில் அன்றாடம் 10 ஆயிரம் மெட்ரிக் தொன் குப்பைகள் சேர்கின்றன. அதில் 700 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் ஆகும் சுமார் 100 தொன் குப்பைகள் மட்டுமே மீள்சுழற்சி பண்ணப்படும் நிலையில் 5000 மெட்ரிக் தொன்னுக்கு மேற்பட்ட குப்பைகள் பூமியிலேயே இருக்கின்றன. இவற்றில் சுமார் 100 மெட்ரிக் தொன் குப்பைகள் கடலில் போடப்படுகின்றன என்பதும் அவர்கள் வழங்கிய அதிர்ச்சி தரும் தகவல்கள் ஆகும்.

நாட்டில் இயங்கும் பாரிய நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தாம் தப்பித்துக் கொள்வதற்காக தமது கழிவுகளை கடலிலோ அல்லது எங்காவது ஓரிடத்தில் கொண்டு போடுகின்றனர். அதற்கிணங்க நாடெங்கிலும் 150க்கும் மேற்பட்ட குப்பை மலைகள் குவிந்துள்ளன.

இது சுற்றாடலை மட்டுமன்றி பூமியில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் நீர் வாழ் உயிரினங்களையும் வனப்பகுதியையும் பாதிக்கின்றது. மனித சுவாசத்திற்கு இது கேடாக அமைந்து பல்வேறு நோய்களுக்குக் காரணமாகின்றது.

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இது தொடர்பில் சிந்தித்து செயல்பட்டால் இவ்வாறான பிரச்சினைக்கு முடிவு காண முடியும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சொப்பிங் பை தொடர்பான தடையும் சட்டங்களும் இன்னும் நடைமுறையிலேயே உள்ளன. அவற்றை பலப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என செயலமர்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சமரவீர தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் பாவனைக்கு பொருத்தமில்லாத தடைசெய்யப்பட்ட 55 தொன் சொப்பிங் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

இதுவரை காலமும் அதற்காக விதிக்கப்பட்டிருந்த தண்டப் பணத்தை ஒரு லட்சமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

துறை சார்ந்த நிபுணர்களான கலாநிதி ஜயசுந்தர, திருமதி செவ்வந்தி ஜெயக்கொடி,

உள்ளிட்ட பலரும் இந்த செயலமர்வில் கலந்து கொண்டு தெளிவு படுத்தினர்.

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற போர்வையில் மனித இனம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் பல அபரிமிதமான வளர்ச்சியையும் காணமுடியும். எனினும் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கும் அதன் பின்னணியில், அப்பொருளின் பயன்பாட்டுக்குப்பின் தீய விளைவை மனித இனம் தொடர்ந்தும் பூமிக்கு கொடுத்துக் கொண்டே வந்திருக்கின்றது.

அந்த வகையில் இன்று பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை எம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்று பேசுவதும் போராடுவதும் வெற்றியைத் தருகிறதா என்றால் அது கேள்விக்குறியே.

நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை பிளாஸ்டிக்கின் ஆதிக்கமே தலைதூக்கியுள்ளது. சொப்பிங் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது படுபாதகச் செயலாகும். பொதுமக்கள் பயன்படுத்தும் சொப்பிங் பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனைக் கையில் வாங்குவதற்கும் குப்பையில் எறிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே அது மனிதனுக்குப் பயன்படுகிறது. ஆனால் இந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும். இப் பை காலகாலத்திற்கும் அழியாமல் சுற்றுச்சூழலைப் பாழாக்கும். இது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பல தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. நாம் முடிந்தளவு துணிப்பைகளைப் பயன்படுத்துவதே இயற்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் நன்மையாகும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விட்டு வீதியில் எறியும்போது பெருமழை பெய்து அது ஆற்றில் கலக்கிறது.

ஆறுகள் அதை கடலில் சேர்ப்பதால் அதனை உட்கொண்டு வருடாந்தம் பல இலட்சம் திமிங்கலங்களும், கடல்வாழ் உயிரினங்களும் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மழைக்காலத்தில் வீதிகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு இது பிரதான காரணமாகிறது. நம் வாழ்க்கையையும் எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்திற் கொண்டு பிளாஸ்டிக் மற்றும் சொப்பிங் பைகளை (குப்பைளை) பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். நோயற்ற சமூகத்தையும் மாசற்ற சூலையும் உருவாக்க நம்மாலான பங்களிப்பைச் செய்வோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments