கித்துல்: வளம் தரும் மரங்களை ஏன் காட்டில் வைத்திருக்கிறீர்கள்? | தினகரன் வாரமஞ்சரி

கித்துல்: வளம் தரும் மரங்களை ஏன் காட்டில் வைத்திருக்கிறீர்கள்?

மலைநாட்டில் அதுவும் தோட்டப்புறங்களில் ஏராளமான கித்துல் மரங்கள் தானாகவே முளைத்து வளர்ந்து வருகின்றன. பறவைகள், விலங்குகளின் எச்சங்கள் மூலமாக இதன் வித்துக்கள் பரப்பப்பட்டு கித்துல் காடுகள் உருவாகின்றன. தோட்டப்பகுதிகளில் எமது முன்னோர் கித்துல் மரத்தை பால் தரும் பசு என்பர்.  

பால்தரும் பசுவைப்போல கித்துல் மரம் பலன்களை அள்ளித்தரும் என்பது இதன் பொருள்.  

கித்துல் மரம் மூலமாக பல்வேறுவிதமான நன்மைகளை தோட்ட சமூகம் பெற்று வந்துள்ளது. கித்துல் பாணி, கித்துல் கருப்பட்டி, கித்துல் மா உட்பட மரம் பயன்களை தந்துகொண்டே இருக்கும். ஓய்ந்த பின் வீட்டுக்கூரைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றது.  

கித்துல் மரத்தில் இருந்து பெறப்படும் பதனீர் எனப்படும் கித்துல் பாலை குடிப்பது உடல் சூட்டைத் தணிக்கும்.  

இப்பதநீரை பல மணித்தியாலங்கள் வைத்திருந்து குடிப்பதும் உண்டு. சில மணித்தியாலங்கள் பதனீரை வைக்கும்போது இது புளித்து இனிப்பு சுவை குறைந்து போதை தரும் பானமாக மாறும். கித்துள் கள் ஒரு ஆரோக்கியமான மென் போதைப் பானம் என்பது பிரியர்களின் அபிப்பிராயம்.  

ஒரு காலகட்டத்தில் இந்த கித்துல் போதைப் பானம் மலைநாட்டில் மிகப்பிரசித்தி பெற்று விளங்கியது. கித்துல் மரத்து பதனீரில் இருந்து கள் தயாரிப்பதை அரசு முற்றாக தடை செய்துள்ளது.  

கித்துல் மரத்தின் பாலை கருப்பட்டி மற்றும் பாணி தயாரிப்பாகக்காக கூட எடுக்க முடியாதவாறு பொலிஸ் மற்றும் மது ஒழிப்பு பிரிவினர் கெடுபிடி செய்து வருகின்றனர்.  

நாளொன்றுக்கு சராசரியாக மரம் ஒன்றில் பத்து போத்தல் பதனீரை பெறமுடியும். பதனீர் ஒரு போத்தல் 300 ருபாவாகும். கித்துல் கருப்பட்டி ஒரு கிலோ 800 ரூபாவாகும். கித்துல் பாணி ஒரு போத்தல் 900 ரூபா வரையில் விலைபோகின்றது.  

தோட்டப்பகுதியில் பரவலாக உள்ள இந்த கித்துல் மரங்களின் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இது உபரி வருமானமாக அமையும்.  

கித்துல் மரத்தில் பூக்குமானால் பசு கன்று ஈன்றதற்கு சமன் என்று சொல்வார்கள். ஒரு பூ ஒரு வருட காலத்திற்கு மேலாக பயன்தரும். கித்துல் மரம் ஏறமுடியாவர்கள். மரம் ஏறி பால் எடுக்க முடியாதவர்கள் தமது மரங்களை குத்தகை அடிப்படையில் கொடுத்து, வரும் வருமானத்தில் அரைப் பகுதியை குத்தகைகாரர்களுக்கு கொடுக்கும் வழமையிருந்தது.  

கித்துல் மரங்கள் ஒருவரது தோட்டத்தில் நிற்குமானால் அவரை செல்வந்தராகக் கருதும் காலம் ஒன்றிருந்தது. இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. மாறிமாறி வந்ந அரசும் கித்துல் உற்பத்தியை உக்குவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

இத்தனை வருமானம் தரும், பல் பயன்பாட்டு மரமான கித்துல், பெருந்தோட்டங்களில் வீணே காடுகளாகக் கிடக்கின்றன.

கம்பனிகள் இம்மரங்களைப் பயன்படுத்துவதில்லை. தொழிலாளர்களிடம் கொடுத்து பயன்படுத்தி உபரி வருமானம் பெறும்படியும் சொல்வதில்லை. இந்த ஆயிரக்கணக்கான மரங்களை பயன்படுத்தினால் பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார வளம் அதிகரிக்கும். கம்பனிகளும் குத்தகை வருமானம் பெறலாம். கித்துல் உற்பத்திகள் பெருகும். ஏற்றுமதி வாய்ப்புகளும் உருவாகும். சீனியை விட கித்துல் ஆரோக்கியமானது. எமக்கு என்ன புரியவில்லை என்றால், ஏன் ஒரு வருமானம் தரும் வளத்தை காட்டில் வெறும் பயன்படாத மரங்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்! 

நவராஜா   

Comments