யாழ். பல்கலைக்கழகம் கௌரவித்த முதுபெரும் எழுத்தாளர் முல்லைமணி வே.சுப்பிரமணியம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். பல்கலைக்கழகம் கௌரவித்த முதுபெரும் எழுத்தாளர் முல்லைமணி வே.சுப்பிரமணியம்

வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் என்னும் இயற் பெயரும் முல்லை மணி என்னும் இலக்கியப் பெயரும் கொண்ட இவர் வன்னி மண் ஈழத்துத் தமிழிலக்கியத்துக்களித்துள்ள ஒரு அருங்கொடை.  

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் 03.05.1933ல் பிறந்தவர் இவர். தந்தையார் வேலுப்பிள்ளை. தாயார் பொன்னம்மா. முல்லைத்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு விவசாயக் குடும்பம் அது.  

முள்ளியவளை சைவ பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய முல்லை மணி திருநெல்வேலி பண்டித கலாசாலையில் கல்வியைத் தொடர்ந்து தமிழ் மூலம் எஸ்.எஸ்.சி. சித்தியடைந்தார். (1948) அதன் பிறகு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இணைந்து ஆங்கில மூலத்திலும் எஸ்.எஸ்.சியில் சித்தியடைந்தார். (1952)  

‘எனது பிறந்த ஊரான முள்ளியவளை கலை வளம் மிக்கது. அண்ணாவிமார்களும் நாடக ஆசிரியர்களும் வாழ்ந்த மண் இது. வாழுகின்ற மண் இது. நாட்டுக் கூத்துக்களும் அண்ணாவிமரபு நாடகங்களும் டிராமா எனப்படும் நவீன மேடை நாடகங்களும், இசைக் கச்சேரிகளும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்’ என்று பூரிப்புடன் குறிப்பிடுகின்றார் முல்லை மணி.  

அந்தக் தலைவளம் மிக்க மண் இவரையும் தூண்டிக்கொண்டே இருந்தது. திருநெல்வேலி பண்டித கலாசாலை மற்றும் சாவகச்சேரி இந்துக்கல்லூரி போன்ற பள்ளிக் கல்விக்காலம் இவரது எழுத்தார்வத்தை தோற்றுவித்த காலம்! பழந்தமிழ் இலக்கியம் நவீன இலக்கியம் என பழந்தமிழ் இலக்கியம் நவீன இலக்கியம் என பல்வகை வாசிப்பு விரிவுக்கான வாய்ப்புக்கள் கிடைத்த காலம்! பத்திரிகை சஞ்சிகைகளுக்கு கவிதை என்றும் கதை என்றும் கட்டுரை என்றும் எழுதிப்பார்க்க ஆரம்பித்தகாலம்.  

ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன் போன்றவை இவருடைய சிறுசிறு கட்டுரைகளை வெளியிட்டு வந்துள்ளன.  

எனது கிராமம் என்னும் இவரது முதல் சின்னஞ்சிறிய கட்டுரை ஈழகேசரியில் வெளிவந்திருக்கிறது. அதே கட்டுரை இந்துக் கல்லூரியின் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் முள்ளியாவளை என்னும் பெயரில் பிரசுரமாகியிருக்கிறது.  

50களிலிருந்தே ஈழகேசரி. வீரகேரிபோன்ற பத்திரிகைகளுக்கு நான் எத்தனையோ கதைகள் அனுப்பிப்பார்த்தேன் ஒன்று கூடப் பிரசுரமாகவில்லை என்று அவரே ஒரு கட்டுரையில் குறிக்கின்றார்.  

பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் வவுனியா மகாவித்தியாலயத்தில் முதன் முதலாகப் பதவியேற்று ஆசிரியரானார். ஒரே மாதத்தில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு மாற்றலாகி 16நீண்ட வருடகாலம் அங்கு ஆசிரியப் பணியாற்றினார். தனது கல்விப் பணியுடன் கல்வித்த​ைகமைகளையும் உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபாட்டுடன் உழைத்தார். லண்டன் பல்கலைக்கழகம் நடாத்தும் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்றார். இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.  

விரிவுரையாளர். பாடசாலை அதிபர், பிரதேசக் கல்விப் பணிப்பாளர் என உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்.  

முள்ளியவனை வித்தியானந்தா கல்லூரி ஆசிரியப் பதவிக்காலமே இவருடைய கலை இலக்கிய செயற்பாட்டை விருத்தியடையச் செய்த காலமுமாகியது.  

பாடசாலை மாணவர்களுக்கான நாடகங்களை எழுதி, மாணவர்களை நடிக்க வைத்துப் பழக்கி தயாரித்து மேடை ஏற்றியவர் இவர். பாடசாலைக்கு வெளியேயும் இயல் இசை நாடகக் கலா மன்றங்கள் அமைத்து நாடகங்கள் தயாரித்தவர். வளர்மதி மன்றம், பாரதி இலக்கிய மன்றம், சமூக ஆய்வு மன்றம் போன்ற அனைத்துடனும் இணைந்து செயற்பட்டவர்.  

1960களில் பண்டாரவன்னியன் என்னும் நாடகத்தை எழுதத் தொடங்கினார். வன்னிப் பிரதேசம் அதன் வரலாறு, வாழ்வியல், பூர்வீகம் என்று அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் மேலிடதேடலும் எழுத்துமாய் பண்டார வன்னியன் நாடகம் உருவாகத்தொடங்கியது.  

இலங்கைக் கலைக்கழகப் போட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த நாடகமே முல்லை மணிக்கு ஏகோபித்த புகழையும் கலை இலக்கிய அந்தஸ்ததையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்தது.  

1968ல் பண்டாரவன்னியன் நாடகம் ஒரு நூலாக வெளியிடப்பட்டது. 1972ல் வீரகேசரி பண்டாரவன்னியனை மறுபிரசுரம் செய்தது. முல்லைத்தீவு பாரதி இலக்கிய மன்றம் முல்லை மணிக்கு ‘கலைஞர் திலகம்’ பட்ட மளித்துக் கௌரவித்தது.  

‘இதன் பிறகே ஈழத்துப் பத்திரிகை உலகம் என்னை ஒரு எழுத்தாளனாக ஏற்கத் தொடங்கியது. கவனிக்கத்தொடங்கியது என்று குறித்துள்ளார் முல்லை மணி.  

இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள்; ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்; ஐந்து நாவல்கள்; கட்டுரைத் தொகுதிகள், பக்திப் பாமாலைகள் என நிறையவே எழுத்துப் பணியாற்றியவர் முல்லை மணி்.  

இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாடக நூல்; கட்டுரைத் தொகுதிகள்; நாவல்கள் பக்திபாமாலைகள் என்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருக்கின்றார்.  

யாழ் பல்கலைக்கழகம் 2005ல் கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.  

இலங்கை அரசின் அதி உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னாவிருது 2015ல் இவருக்குக் கிடைத்திருக்கிறது.  

நீண்ட நாள் சுகவீனத்தின் பின் 13.12.2016ல் முல்லை மணி வே. சுப்பிரமணயிம் அமரர் ஆனார்.    

தெளிவத்தை ஜோசப்

Comments