ஸார் மன்னனை ஒத்திருக்கும் புட்டினின் அரசியல் அதிரடிகள் | தினகரன் வாரமஞ்சரி

ஸார் மன்னனை ஒத்திருக்கும் புட்டினின் அரசியல் அதிரடிகள்

ரஷ்யாவின் அரசியலில் புதிய திருப்பங்கள் நிறைந்த காலப்பகுதியாக அண்மைய வாரங்கள் அமைந்துள்ளன. 1989 களுக்கு பின்பு மிக மோசமான நிலைக்கு சென்ற ரஷ்யா தலைமையிலான முன்னாள் சோவியத் நாடு மீண்டும் ரஷ்யாவின் நகர்வினால் மேல் எழுந்துள்ளது. பொதுவாகவே இருதய நிலம் என்று அழைக்கப்பட்ட காலம் முதல் ஏதோ ஒரு வகையில் அதற்கு முன்பும் பின்பும் ரஷ்யா முக்கியத்துவம் பெற்று வருகிறதை அவதானிக்க முடிகிறது. அத்தகைய வெற்றி வாய்ப்புக்கு அந்த நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்ற விளாடிமிர் புட்டின் தான் காரணம் என வாதிப்பவர்கள் உண்டு. மிகையில் கொர்ப்பச்சேவின்  ஆட்சிக்கு பின்பு அமெரிக்காவால் ஆட்சியில் அமர்த்திய பொறிஸ் யெல்ஸ்டின் மிக மோசமான அரசியலை ரஷ்யாவுக்குள் மட்டுமன்றி வெளியேயும் ஏற்படுத்தினார். அதிலிருந்து மீள புட்டினே காரணமாக அமைந்திருந்தார் என்பது கடந்த இரு தசாப்தங்களாக ரஷ்யாவுக்குள்ளும் வெளியேயும் நிகழ்ந்த சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. இக்கட்டுரையும் ரஷ்ய அரசியலில் புட்டின் ஏற்படுத்திவரும் மாற்றங்களது போக்கினை தேடுவதாக அமையவுள்ளது. 

ரஷ்ய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவியில் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே தொடர்ந்து அமர முடியும். அதற்காகவே ஜனாதிபதி புட்டின் இரு தடவை ஜனாதிபதியாக இருந்துவிட்டு மீள ஒரு தடவை பிரதமராக பதவி வகித்து மீண்டும் இரு தடவை ஜனாதிபதியாக இருந்தவர். மீளவும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கு முயல்வது போன்றே அவரது நடவடிக்கைகள் காணப்படுகின்றன. புட்டின் அண்மையில் வெளியிடும் கருத்துக்களும் நகர்வுகளும் அவரது அரசியல் இருப்பினை மேலும் நீடிப்பதற்கான உறுதிப்படுத்தல் ஒன்றாகவே தெரிகிறது. அவற்றை தெளிவாக நோக்குவதன் மூலம் அதனை நிறுவ முடியும். 

ஒன்று புதிய பிரதமராக மிக்கைல் மிஷ்டின் ஜனாதிபதி புட்டினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக பதவி வகித்த டிமிட்ரி மெத்வதேவ் கடந்த 15.01.2020 பதவி விலகியுள்ளார். 2012 முதல் பதவி வகித்த மெத்தேவ் திடீரென பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை புட்டின் நியமித்தமை அவரது அதிரடி அரசியலாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரம் மெத்தேவ் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இரண்டாவது புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுமாறு பராளுமன்றத்தை பணித்துள்ளார். பாராளுமன்றம் புட்டினின் நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளதுடன் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இத்தகைய புதிய அரசாங்கத்தை அமைக்கும் முதல் கட்ட வேலையாகவே புதிய பிரதமரை புட்டின் நியமித்துள்ளார்.  

மூன்று புட்டின் புதிய அரசியலமைப்பு ஒன்றினை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உருவாக்கி வருவதாக கட்சி வட்டாரங்கள் மட்டுமன்றி பொதுமக்களது அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்தகைய அரசியலமைப்பு பலமானதும் அதிக அதிகாரம் உடையதுமான ஜனாதிபதி பதவியை நோக்கியதாக அமையும் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டுவருகிறது. இதனால் அமையவுள்ள அரசியலமைப்பானது சர்வாதிகார ஜனாதிபதியை உருவாக்குவதாக அமைய வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

நான்கு, மீளவும் புட்டின் பிரதமராக நியமனம் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதே மிக்கைலை பிரதமராக்கியதன்  நோக்கம் என்ற கருத்து புட்டின் கட்சி வட்டாரங்களுக்குள் காணப்படுகிறது. மீண்டும் ஒரு தடவை பிரதமராக அமர்ந்து விட்டு மீண்டும் இரு தடவை ஜனாதிபதியாக அமருவதற்கான நகர்வுகளை புட்டின் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இதனை பத்திகையாளர் முன் நிராகரித்த புட்டின் ஆயுள்கால தலைவராக தாம் அமர்வதனை முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.  

ஐந்து, புட்டின் ஆட்சிக்கு வந்த பின்பு ரஷ்யாவுக்குள்ளும் வெளியேயும் பலமான சவால்மிக்க அரசு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் பலமான பொருளாதார சூழலை புட்டின் வளர்த்துள்ளார். அதே நேரம் சர்வதேச மட்டத்தில் அமெரிக்காவுக்கும் அதன் அணிக்கும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசுகளுக்கு ரஷ்யா தலைமை தாங்குவதுடன் வடகொரியா, ஈரான், சிரியாவுக்குள் அமெரிக்காவின் இலக்கினை தோற்கடித்துள்ள நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இது சர்வதேச தளத்தில் பலமான எதிர்ப்பு அரசியலை உருவாக்கியதால் சிறிய சாதாரண நாடுகள் அதிக நன்மையைப் பெற்றுக் கொண்டன. அத்தகைய சூழல் ஏற்படத் தவறியிருக்குமாக இருந்தால் அமெரிக்காவின் காலடியில் உலகத்தின் வீழ்ச்சி சாத்தியமாகியிருக்கும். குறைந்தது மேற்காசியாவினதும் இஸ்லாமியர்களது இருப்பும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும்.  

எனவே புட்டினது நகர்வு சர்வாதிகார அரசியலை ஏற்படுத்த விளைந்தாலும் அடிப்படையில் உள்நாட்டிலும் சர்வதேச அரசியலிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி சீனாவின் எழுச்சிக்கு பின்னால் ரஷ்யாவின் அணுகுமுறைகள பிரதான காரணமாகக்  கொள்ளப்படுகிறது. ஆனாலும் புட்டின் மீதான விமர்சனங்ளும் நெருக்கடிகளும் தொடர்ச்சியானதாகவே அமையும். பிரன்சுப் பத்திரிகையாளன் குறிப்பிட்டது போல் 2020 புட்டின் மீதான படுகொலைக்கான முயற்சி தவிர்க்க முடியாதது என்பது போல் புட்டினது நகர்வு ஜார் மன்னனை நினைவு கொள்வதாக அமைந்து விட வாய்ப்புள்ளது. அது புட்டின் காலத்தில் சாத்தியமாகாது விட்டாலும் இன்னோர் தலைமையினால் அத்தகைய நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments