இலங்கைத் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் கம்பன் கழகம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைத் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் கம்பன் கழகம்

இருபதாம் நூற்றாண்டின் நிறைவு இரு தசாப்தங்களும், இருபத்தோராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தமும் இலங்கைத் தமிழர் வரலாற்றில் மிகவும் முக்கியமான மூன்று தசாப்தங்களாகும். ஈழத்தமிழினம் மொழியை முன்னிட்டு அரசியல், சமூக எழுச்சி பெற்ற காலப் பகுதி இதுவாகும். இக் காலத்தில், அரசியல் ரீதியாகத் தொடங்கிய, சாத்விகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக எழுச்சியடைந்து - பின் வீழ்ச்சியுற்றது. மொழியினதும், இனத்தினதும் இருப்புக்கான அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் போராட்ட நடவடிக்கைகள் சில நன்மைகளையும் பல தீமைகளையும் தந்து நிறைந்தன. எனவே, அதுவரைகாலம் தொடர்ந்து வந்த இலங்கைத் தமிழரது சமுதாய, பண்பாட்டு, மொழி, இலக்கிய வரலாறுகள் முன்னென்றும் இல்லாத அளவில் பாரிய மாறுதல்களைக் கண்டன.

ஆரம்பத்தில் மொழியின் அடிப்படையில் தொடங்கப்பெற்ற அரசியல் எழுச்சியே இதுவாயினும், 1980, - 2010காலப்பகுதியில், அரசியல் இருப்பு, இனஎழுச்சி, இனவிடுதலை என்பன முன்னிலைப்படுத்தப்பட்டதால், மொழி, இலக்கியம், கலை ஆகிய துறைகளிலான கடமைகளைச் சரிவர முன்னெடுக்க முடியாத நிலைமை உருவானது. மொழி, இலக்கிய, கலைப் பணிகளைக் கிரமமாக ஆற்றி வந்த சங்கங்கள், கூட்டங்கள் பெரும்பாலும் போரினால், புலப்பெயர்வினால் தடைப்பட்டுப்போயின. இதனால், ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஒரு பகுதி இலக்கியப் பண்பாட்டுக் கழகங்களாகப் பரிணமித்தன. எனினும், அவற்றால் மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றின் பல்பரிமாண முழுமைக்கும் பணியாற்ற முடியாத அளவுக்கு, அவற்றின் “விடுதலைப் போர்” முதன்மை அப்பணிகளின் இயங்கு தளத்தை எல்லைப்படுத்தியது.

இந்நிலையில், அனைத்து வழிகளிலுமான தமிழ்மொழி, இலக்கியம் கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு - யுத்தத்தின் அத்தனை கோர இடர்ப்பாடுகளின் மத்தியிலும் - இயங்கிவந்த ஒரு இலக்கிய கழகம் உண்டென்றால் - அது அகில இலங்கைக் கம்பன் கழகமே என்று கூறுவது மிகையாகாது.

அகில இலங்கைக் கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர்கள் சிலராலே உருவாக்கப்பட்டது. அவ்வகையில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அமைப்பாளராகவும், தி. திருநந்தகுமார் தலைவராகவும், க. குமாரதாசன் செயலராகவும், டாக்டர் கு. ஸ்ரீ. இரத்தினகுமார் பொருளராகவும் அமைந்தனர்.

கம்பவாரிதி இ. ஜெயராஜ்

கம்பராமாயணத்தில் பொதிந்திருந்த அறம் மற்றும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களை மக்களுக்கு கழகங்களின் மூலமாக வழங்கும் பணியை தமிழ்ச்சான்றோர் கம்பனடிப்பொடி சா. கணேசன் தொடக்கிவைத்தார். இவருடன் கம்பகலாநிதி இரா. இராதாகிருஸ்ணன் முதலிய அறிஞர் பலரும் இணைந்து இலக்கியப் பணியாற்றி ஊர்தோறும் மேடைகளில் தமிழ் விருந்தளித்தனர். இவர்களினால் கவரப்பட்ட கம்பவாரிதி இ. ஜெயராஜ் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சமூகத்திற்கு தக்க விதத்தில் கம்பனை அறிமுகம் செய்து வைத்தார். இவருடைய பணிகள் இத்துறையில் விதந்துரைக்கத்தக்கவை.

கம்ப இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுத்தலே தமிழ்ப்புலவர்களில் மிக முக்கியமான ஒருவரான கம்பனது பெயரால் அமைந்த இக்கழகத்தின் பிரதான நோக்கமாகும்.

எனினும், இக்கழகத்தின் பணி பரந்துபட்டது. இளம் தலைமுறையினருக்கு மரபிலக்கிய பயிற்சியும், ஆற்றலும் உருவாக்குதல், கிராமங்கள் தோறும் சென்று சொற்பொழிவுகள் மூலம் இலக்கியச் சுவையைப் பரப்புதல், இலக்கியம் சார்ந்த நூல்களை பதிப்பித்தல், இளைஞர்கள் மத்தியில் கவிதை, பேச்சு, மனனப் போட்டிகள் நடாத்தி அவர் தம் ஆற்றல்களை வெளிக்கொணர்தல், ஆண்டு தோறும் மிகப்பெரியளவிலான கம்பன் விழாவினை நடாத்தல், மரபுரீதியான இசை வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் இசைவிழா நடாத்துதல், நாடக, நாட்டியத் துறையின் வளர்ச்சிக்காக நாட்டிய வேள்வி நிகழ்ச்சிகளை நடாத்துதல், கம்பஇராமாயணத்தை மட்டுமல்லாது திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பிற இலக்கியங்களையும் குறித்த கருத்தரங்குகளை அல்லது பேருரைகளை நடாத்துதல், இலக்கியம் மற்றும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்விற்பனம், வித்தகம் முதலிய தொடர் நிகழ்ச்சிகளை நடாத்துதல் முதலியன அப்பணிகளுள் சிலவாகும்.

இலங்கைபூராகவும் உள்ள தமிழர் வாழும் பகுதிகளிலும் பிற நாடுகளிலும் கிளைகளை அமைத்து மேற்சொன்ன நோக்கங்களுக்காக இவ்வமைப்பு பாடுபட்டு வருகிறது. அவ்வகையில் கொழும்புக் கம்பன் கழகம் என்பது இக்கழகத்தால் 1994இல் நிறுவப்பட்ட ஒரு கிளைக்கழகமாகும். இக்கழகம் இவ்வாண்டு வெள்ளிவிழாக் காண்கின்றது. 1994ஆம் ஆண்டில் இக் கழகம் நிறுவப்பட்டபொழுது நீதியரசர் விக்னேஸ்வரன் பெருந்தலைவராகவும், மொறீசியஸ் நாட்டின் தூதுவர் தெ. ஈஸ்வரன் தலைவராகவும், பொ. பாலசுந்தரம் செயலாளராகவும், ச.ஆ. பாலேந்திரன் பொருளாளராகவும், நிர்வாகப் பொறுப்பேற்று கம்பன் இலக்கியப் பணியில் ஈடுபட்டு உழைத்தனர். இன்று பெருந்தலைவராக நீதியரசர் ஜெ. விஸ்வநாதனும், செயலாளராக ஸ்ரீதரசிங்கும் பணியாற்றுகின்றனர்.

இக்கிளைக் கழகமும் தாய்க்கழகமாகிய அகில இலங்கைக் கம்பன் கழகமும் ஈழத்தமிழர் வரலாற்றில், - குறிப்பாக பண்பாட்டு, இலக்கிய வரலாற்றில் - ஆற்றிய பணிகள் மிகவும் மகத்தானவை. நல்லூர் கோயில் வீதியில் கம்பன் கோட்டம் எனும் கட்டிடத்தையும் கம்பன் அரங்கத்தையும் அமைத்தமை, கொழும்பு வெள்ளவத்தையில் இராமகிருஷ்ண தோட்டத்தில் கம்பன் கோட்டம் அமைத்தமை, அதேயிடத்தில் ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி தத்துவத் திருக்கோயில் அமைத்தமை ஆகியமை கம்பன் கழகத்தின் பணிகளின் பிரமாண்டத்தை எடுத்துரைப்பன.

ஆண்டு தோறும் தக்க தமிழ் அறிஞர்களை கெளரவித்து விருதும் பணமுடிப்பும் வழங்கிக் கெளரவித்துவரும் கம்பன் கழகம், நமது இனத்திற்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டி சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து ஒரு இலடசம் ரூபா பணமுடிப்புடன் கூடிய “மகரயாழ்” விருதினை யாழ் விழாக்களில் வழங்கி வந்தது. கொழும்பு விழாக்களில் உலகளாவிய ரீதியில் கலை, இலக்கியத்துறையில் சாதனை நிகழ்த்திய பெரியோர்க்கென ஆண்டுதோறும் கம்பன் புகழ் விருதினை வழங்கி வருவதோடு, துறைசார்ந்த அறிஞர் அறுவர்க்கு சான்றோர் கெளரவங்களையும் வழங்கி வருகிறது. மேலும் ஆறுமுகநாவலர்' விருது, விபுலாந்தர் விருது உள்ளிட்ட அறக்கட்டளை விருதுகள் ஐந்தையும், தக்க ஆற்றலாளா்களுக்கு கம்பன் கழகம் வழங்கி வருகிறது.

கம்பன் கழகம் ஆற்றிவரும் சமுதாயப் பணிகளையும் மறத்தலாகாது. ஆதரவற்றோர்க்குத் துணைபுரியவும், ஆதரவற்ற மாணவரின் கல்வி வளர்ச்சிக்குத் துணை புரியவும் இவ்வமைப்பு தொடர்ந்து உதவிபுரிந்து வருகிறது. மேலும் போரின் நிறைவுக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு நிதியுதவி வழங்கியும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கியும் சமுதாயப் பணியாற்றிவரும் கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆதரவற்ற சிறுவர் மற்றும் முதியோர்களைப் பாராமரிக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தும் வருகிறது.

தமிழ் அன்பர்களினதும், ஆதரவாளர்களினதும் அன்பளிப்புகளைக்கொண்டு மட்டுமே இயங்கிவரும் இக்கழகம், எந்தவொரு நிகழ்ச்சியையும் ரிக்கற் விற்பனைக்காக நடாத்தவில்லை. உலகப் புகழ் பெற்ற பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டிய நிகழ்ச்சி ஆகட்டும், பம்பாய் ஜெயஸ்ரீயின் கர்நாடக இசைக் கச்சேரி ஆகட்டும் அந்நிகழ்ச்சிகளை, பொருளாதார வசதியற்ற ஈழத்து ரசிகர் எவரும் கண்டு களிக்கத்தக்க வகையில் இலவசமாகத் தந்த பெருமை கம்பன் கழகத்துக்கே உண்டு.

இராதாகிருஸ்ணன்

பல்கலைக்கழக நிறுவனஞ்சார் புலமை மரபு யாழ்ப்பாணத்தில் தொடங்கிய பின்பு ஏற்பட்ட கல்வியின் கருத்துநிலை மாற்றத்தில், மரபுப் பண்டிதர்கள் ஒதுக்கப்பட்டு, அறிவு மேடைகளை நவீன அறிஞர்கள் அலங்கரிக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் ஆளுமையும் புலமையும் மிக்க நவீன அறிஞர்களால் நிரப்பப்பட்ட கல்விச் சபைகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏமாற்றமளித்தன. உண்மையான புலமையை சாதாரண பொது மக்கள் நுகரமுடியாதபடி அறிவுவறுமை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சமுதாயத்தால் மறுக்கப்பட்டிருந்த தமிழ்ப் பேரறிஞர்களை மீளவும் மக்கள் மன்றங்களுக்கு அழைத்து வந்து அந்த வெற்றிடங்களை நிரப்பியமை கம்பன் கழகத்தின தலையாய அறிவுப் பணியாகும். இவ்வகையில் இலக்கண வித்தகர் இ. நமசிவாய தேசிகர், சித்தாந்தப் பண்டிதர் மு. கந்தையா, பண்டிதர் க. சச்சிதானந்தன் முதலிய அறிஞர் பலரதும் கல்வி ஆற்றலை மீளவும் ஈழத்தமிழ் உலகம் பெறத்தொடங்கியது. முற்போக்குக் கருத்துக்களின் வருகையின் பின்னர் ஏற்பட்ட மரபு-நவீன கருத்தியற் போராட்டமானது முட்டையடி விவகாரத்தில் சென்று முடிந்ததன் பின்னர், அச்சத்தினாலோ நாகரீகத்தினாலோ ஒதுங்கிக்கொண்ட மரபுத் தமிழ் அறிஞர்களின் புலமையை மீளவும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்ட விழாக்கள் கம்பன் விழாக்களே என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு மரபுத்தமிழுக்கு உரிய இடம் வழங்கிய கம்பன் கழகம், தமிழின் நவீன போக்குகளையும் புதிய படைப்பிலக்கியப் புலங்களையும் வளப்படுத்தியே வந்துள்ளது.

அவ்வகையில் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் கம்பன் கழகத்தின் பங்கு கணிசமானது. ஆண்டுதோறும் விழாக்களில் அமைக்கப்படும் கவியரங்கங்களில் பங்குபற்றிய நவீன கவிஞர் பலரும், சமகால அரசியல் சமூக விடயங்களைத் துணிந்து பாடலாயினர். கவிஞர்கள் இ. முருகையன், புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, வ.ஐ.ச. ஜெயபாலன், சோலைக்கிளி எனத் தொடரும் ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர்கள் பலரும் தங்கள் அரங்க ஆளுமையால் கம்பன் விழாக்களை மெருகேற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும் டொமினிக்ஜீவா, செங்கை ஆழியான், தெணியான் போன்ற படைப்பிலக்கியக் கருத்தாக்கள் கம்பன் கழகத்தால் கெளரவித்துப் போற்றப்பட்டமையும் நினைவிற் கொள்ளத்தக்கது.

பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் 

Comments