ARM.ஜிப்ரி: பேராளுமையின் பெருவெற்றிடம் | தினகரன் வாரமஞ்சரி

ARM.ஜிப்ரி: பேராளுமையின் பெருவெற்றிடம்

வானொலி என்பது ஒரு குறித்த வயதினருக்கானது மாத்திரமல்ல அனைவரும் அதனைக் கேட்க வேண்டும் குறிப்பாக சிறார்களை வானொலி ஈர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயற்பட்டவர் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி. அதனை சாதித்தும் காட்டியவர் அவர். 

'வானொலி நிகழ்ச்சி என்பது பெற்றோர்கள் கேட்டு அதனூடாக பிள்ளைகளையும் கேட்க வைக்க வேண்டும் 'என்பார். அதனை சரிபடச்செய்து வானொலி நிகழ்ச்சிகளில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். இதற்கு சான்றாக அவர் செய்த பல அறிவுசார் நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக அறிவுக்களஞ்சியம், அறிவுச்சுரங்கம், ஹலோ உங்கள் விருப்பம், சொல்லுங்கள் வெல்லுங்கள், நீங்களும் வெல்லலாம் என பல பிரபலமான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம் 

 1959.05.01.மர்ஹும் அப்துல் றஹ்மான், ஹாஜியானி சுபைதா உம்மாவுக்கு சிரேஷ்ட புதல்வராக கல்முனையில் பிறந்தார். ARM.ஜிப்ரி. சிறுவயதிலேயே நற்பண்புகள் மிக்கவர். அதனையே வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்து தான் பிறந்த கல்முனை மண்ணுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். அவர் ஒரு மிகச்சிறந்த கல்விமானாக மிகச்சிறந்த அறிவிப்பாளராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 

தனது ஆரம்பக்கல்வியை கல்முனை சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் தனது உயர்தரக்கல்வியை கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியிலும் பெற்றார். தாம் கற்கும் காலங்களில் முதல்தர மாணவராக ஆசிரியர்களின் மனங்கவர் மாணவனாக திகழ்ந்தார். பள்ளிப்பருவத்திலேயே கலைத் துறை, சமூக சேவைகளில் ஈடுபாடுள்ளவர். பின்பு தம் உயர்கல்வியினை கண்டி, குண்டசாலையில் விவசாயத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றதோடு பயிற்றப்பட்ட கல்வி விஞ்ஞான ஆசிரியரராக நியமனம் பெற்றார். அதுமட்டுமல்லாது கலைமாணி(B.Ed),கல்வி முதுமாணி(M.Ed)விஷட கல்வி மாணி(Spc in Edu)என பல்வேறு பட்டங்களைப்பெற்றாலும் எதனையும் தனது தலையில் சூட்டிக் கொள்ளாத மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த பெருந்தகை ARM.ஜிப்ரி. கல்வித்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவர். 

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, தொட்டவத்தை பஹ்றியா கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றி அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர்மக்கள் மத்தியில் தனது நன் மதிப்பை வென்றவர்.  

இலங்கையில் நாலா பாகங்களுக்கும் சென்று பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி போதித்தார். அனைவராலும் ஜிப்ரி Sir என மரியாதையோடு அழைக்கப்பட்டார். 

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்குகளை நடத்தியதன் மூலம் 25,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற உதவினார். 

அறிவிப்புத்துறையிலும் நட்சத்திரமாக ஜொலித்தவர். 1986ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக தெரிவாகி புகழின் உச்சிக்குச் சென்றவர். தனக்கு வானொலியில் முதன் முதலில் பயிற்சி தந்தவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் சனூஸ் முகம்மட் பெரோஸ் என்று கூறுவார். இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.  உலக பிரசித்தி பெற்ற அறிவிப்பாளர் B.Hஅப்துல் ஹமீதும் இவருடன் அளவுகடந்த அன்பு வைத்துள்ளார். ஜிப்ரியின், நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்க விழுமியங்கள் தன்னை எப்போதும் கவர்ந்துள்ளதாக அவர் எப்போதும் கூறுவார். இவ்வாறு அனைவரது மனங்களிலும் நீங்காத இடம்பிடித்தவர் மர்ஹும் A.R.M.ஜிப்ரி.  

 2007ம் ஆண்டு தொடக்கம் A.R.M ஜிப்ரியோடு இணைந்து இந்தியாவிலிருந்தும் புனித மக்காவிலிருந்தும் ஜித்தாவிலிருந்தும் இலங்கை வானொலியில் நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகளை பல முறை செய்திருக்கிறோம். 

அதுமட்டுமன்றி இந்தியாவில் எம்நாட்டுக்கலைஞர்கள், பாடகர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் 'தூதுரைத்த மாமலரே','மறை தந்த மாமலரே' எனும் இஸ்லாமிய கீத இறுவெட்டுக்களை வெளியிட்டு இலங்கை கவிஞர் , பிறை fmஅறிவிப்பாளர் யூனுஸ் K றஹ்மான் மற்றும் மன்னாரைச் சேர்ந்த அதிபர் யாசீன் ஆகியோரது பாடல்வரிகளை இந்தியா பாடகர் M.A.உஸ்மானின் குரலில் பாடவைத்து மகிழ்ச்சியடைந்தார்.  

இதுபோன்று பிறை fm கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூமுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை செய்தார். 

இலங்கை ரூபவாஹினி செய்தி வாசிப்பு, கிரிக்கெட் நேர்முக வர்ணனை, விளம்பர அறிவிப்பு என புகழ்பெற்று விளங்கிய அவர் நேயர் மத்தியில் தனியிடம் பிடித்தார். இவரை சிறப்பிக்கும் முகமாக கடந்த 2017ம் ஆண்டு ஜோர்தான் நாட்டுக்கான தூதுவர் அப்துல் லாபிரின் அழைப்பின் பேரில் பன்னிரண்டு ஊடகவியலாளர்களுள் ஒருவராக அழைக்கப்பட்டார். அது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கொளரவமாகும். 

அறிவிப்புத்துறை, ஊடகத்துறை, கலைத்துறை சார்ந்த அனைவருடனும் இனிமையாக மட்டுமே பழகியவர் ARM.ஜிப்ரி.. 

தனது குடும்பத்தையும் நண்பர்களையும் அளவு கடந்து நேசித்தவர். அவரது மனைவி ஆமினாஜிப்ரி ஒரு விஞ்ஞான பட்டதாரி ஆசிரியை, மின்ஹாஜ், மின்ஆம் என இரண்டு மகன்கள், ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அமீருல் நஜீம்,அமீருல் ஜெஸீல்,அமீருல் அன்சார், A.R.M.நௌபீல்(பிறைfm அறிவிப்பாளர்) A.R.M.நியாஸ்,ஜெஸ்மின் நஜீமா(ஆசிரியை), உம்மு சதூரியா நஜிமுடீன்(ஆசிரியை), ருஸானா ஹாரிஸ் என்பன அவர்களது பெயர்கள். 

சுமார் முப்பத்து ஐந்து வருடகாலமாக பாணந்துறை ஹேனமுல்லையில் வசித்து அனைவர் மத்தியிலும் நன்மதிப்புப் பெற்று கீர்த்தி பெற்று விளங்கியவர்.2020.01.20.இல் இறைவனடி சேர்ந்தாலும் மர்ஹும் A.R.M.ஜிப்ரி எம்மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ! 

அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானா  

Comments