விடாமுயற்சியால் ஹொலிவுட் தரத்துக்கு மாறிய அருண்விஜய் | தினகரன் வாரமஞ்சரி

விடாமுயற்சியால் ஹொலிவுட் தரத்துக்கு மாறிய அருண்விஜய்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்று வந்தவர்கள் எல்லாம் அவர்கள் எவரும் நினைத்த அளவு சினிமாவில் நிலைக்க முடியவில்லை. அதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம். ஆனால் தோல்வியில் இருந்து மீண்டு வந்தவர்கள் பட்டியல் மிக குறைவே. 

அந்தவகையில் தளபதி விஜய் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யும் மக்களுக்கு பிடித்த நாயகனாக மாறி வருகிறார். அவரது நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் வித்தியாசமான கதையமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி அமைந்து வருகிறது. 

நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த அருண்விஜய்க்கு தொடர் வெற்றிப் படங்கள் அமைவது அவருடைய வளர்ச்சிக்கு அவர் போடும் விதையாக மாறி வருகிறது.  

சமீபத்தில் வெளிவந்த தடம் படம் அருண் விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கிய பங்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இதில் இதுவரை சினிமாவே எடுக்காத கஜகஸ்தான் போன்ற இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தி படக்குழு மிரட்டி வருகின்றனர். 

படத்தில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் அனைத்தும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பட்டையை கிளப்புகிறது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் அருண்விஜய் உறைந்த பனியில் மிரட்டலாக நின்று கொண்டிருக்கிறார். 

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும் அருண் விஜய் உடன் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அக்சராஹாசன் போன்றோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஹாலிவுட் தரத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.     

Comments