இரண்டு பயணிகள் ஒரு விளக்கு | தினகரன் வாரமஞ்சரி

இரண்டு பயணிகள் ஒரு விளக்கு

இரண்டு பேர் இரவு வேளையில் காட்டு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். ஒருவரிடம் விளக்கு இருந்தது. இன்னொருவரிடம் இல்லை. ஆனால் அவர்கள் ஒரே பாதையில் சென்றுகொண்டிருந்ததால் அவர்களின் பாதை வெளிச்சமாகவே இருந்தது. தனக்கென்று விளக்கு இல்லாத பயணியும் அதனால் சந்தோஷமாகவே இருந்தான். அவனுக்கு விளக்கு பற்றிய சிந்தனைகூட எழவில்லை.  

இருவரும் பிரதான வீதியை சென்றடைந்ததும் பிரிய வேண்டியிருந்தது. விளக்கை வைத்திருந்தவன் விடைபெற்றுச் செல்லவே அங்கு திடீரென இருள் சூழ்ந்தது. அப்போதுதான் விளக்கில்லாத அந்த மனிதனை கவலை சூழ்ந்தது. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.  

'ஒரு விளக்கை என்னால் ஏற்பாடு செய்துகொள்ள முடியாமல் போனது எதனால்? ஒரு விளக்கை எப்படிப் பற்ற வைக்க வேண்டுமென்றுகூட தெரியாமல் போய்விட்டதே? மிகச் சிறிய விளக்காக இருந்தாலும் என்னுடையதாக அது இருந்திருக்கும். ஆனால் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருப்பதாக நான் நினைத்தேன். வந்த வழி வெளிச்சமாகத் தானே இருந்தது. ஆனால் இப்போது?'  

இப்படித்தான் பல முறை நடக்கிறது. அகத்தில் விளக்கொளிவரும் ஒருவரை நீங்கள் பார்க்கும்போது உடனடியாக ஒரு கதவு திறக்கலாம். உங்கள் பாதையெங்கும் சுடரேற்றப்படும். அப்படி நடக்குமென்று ஒரு நிமிடத்திற்கு முன்னர் கூட நம்பியிருக்க மாட்டீர்கள். ஆனால், அது உங்களுடைய விளக்கு அல்ல. அதனால் அந்த விளக்கின் வெளிச்சம் உங்களது நினைவாக அது பறிபோகும்போது உங்களை அந்த நினைவு துன்புறுத்தத் தொடங்கும்.  

மீண்டும் மீண்டும் அந்த ஒளி சுடர்ந்த பாதைக்குத் திரும்பச் செல்வதைப் பற்றிய எண்ணம் உங்களைத் துரத்தும். ஆனால் திரும்பச் செல்லும் பாதை இல்லவே இல்லை. திரும்பச் செல்வதற்கான தேவையும் இல்லை. நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும். உங்களது சொந்த வெளிச்சத்தை நீங்கள்தான் தேடிக் கண்டறிய வேண்டும்.  

சோ. வினோஜ்குமார்,  
தொழில்நுட்ப பீடம்,  
யாழ். பல்கலைக்கழகம்,  
கிளிநொச்சி.  

Comments