தபால்மூலம் வாக்களிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆணைக்குழு முடிவு | தினகரன் வாரமஞ்சரி

தபால்மூலம் வாக்களிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆணைக்குழு முடிவு

தபால்மூலம் வாக்களிக்கும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன், விரைவில் உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் ஹேரத் தெரிவித்தார்.  

தேர்தல் காலங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட பலர் தமது தேர்தல் கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றும் வகையிலேயே தபால்மூலம் வாக்களிக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுபவர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட சில தனியார்துறை ஊழியர்களுக்குத் தமது தேர்தல் கடமைகளை நிறைவேற்ற முடியாத சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த காலத்தில் இதனைப் பரவலாக அவதானிக்க முடிந்ததுடன், பலர் தமக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.  

இந்நிலையிலேயே இச்சட்டத்தை திருத்துவதற்கான கலந்துரையாடல்கள் அண்மைய நாட்களாக நடைபெற்றுவந்தன. அதனடிப்படையில் இவர்கள் தமது தேர்தல் கடமையை முறையாக நிறைவேற்றுவதற்காக தேர்தலுக்கு ஒரு வாரகாலத்துக்கு முன்னர் விசேட வாக்களிப்பு நிலையங்களை நாடாளாவிய ரீதியில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார். 

எம்.ஏ.எம். நிலாம்   

Comments