வறுமையை ஒழித்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 12 பேர் கொண்ட செயலணி | தினகரன் வாரமஞ்சரி

வறுமையை ஒழித்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 12 பேர் கொண்ட செயலணி

வறுமையை ஒழித்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பீ. திவாரத்னவின் தலைமையிலான இச்செயலணி பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 

கடந்த காலங்களில் தேசிய பொருளாதாரத்தின் பலம் சர்வதேச மட்டத்தில் உரிய மதிப்பை பெறவில்லை. கிராமிய, தோட்ட மற்றும் நகர்ப் புறங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் திறன், இயலுமைகளைப்போன்றே பலவீனங்கள். சவால்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாததன் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிராசையாக போயிருப்பதை தற்போதைய அரசாங்கம் கண்டறிந்துள்ளது. 

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’, “சுபீட்சத்தின் நோக்கு” நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்கும்போது கிராமிய, குறைந்த வருமானம் பெறும் மக்களின் கஷ்டங்கள் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பானதும் சுபீட்சமானதுமான தேசத்திற்கான அபிவிருத்தி பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வதற்கு வறுமை முக்கியமான தடைக்காரணியாக உள்ளது. எனவே, மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமிய சமூகத்தை வலுவூட்டும் முறைமையின் தேவை உணரப்பட்டுள்ளது. “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் “பாதுகாப்பானதொரு நாடு” “சுபீட்சமானதொரு தேசம்” “உற்பத்தித்திறன் வாய்ந்த பிரஜை” “மகிழ்ச்சியான குடும்பம்” ஆகிய கருப்பொருட்களின் கீழ் ஒரே தொலைநோக்கில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் தெளிவான ஒன்றிணைந்து நிகழ்ச்சிதிட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகைமைகளை விரிவுபடுத்தி மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டமும் மக்களின் சுகாதார, ஆரோக்கியமான உணவு நுகர்வு, சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சுக்கள், மாவட்ட பிரதேச செயலாளர் அலுவலகங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரச பொறிமுறையின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கு புத்துயிரளித்து, கிராமிய தோட்ட குறைந்த வருமானம் பெறும் மக்களை தொழில் முயற்சியாளர்களாக தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் செயன்முறைக்கு நேரடியாக இணைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்குப் பொருத்தமான வகையில் நிதி நிறுவனங்களின் ஊடாக நிதி ஏற்பாடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை விரிவுபடுத்தி புதிய வழிகளை ஏற்படுத்துவது முக்கியமானதாகும்.  

உறுப்பினர்களின் ஆற்றல்கள், செயற்படுத்திறன் மற்றும் பற்றுறுதி என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

ஓய்வுபெற்ற அமைச்சு செயலாளர் வீ. சிவஞானசோதி, பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எச்.எம். டப்ளியூ ஆரியர்தன ஹேரத், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷிரந்த ஹின்கெந்த, யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எஸ். சிவகுமார், ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, விசேட வைத்தி நிபுணர் அனுருத்த பாதெனிய, விசேட வைத்தி நிபுணர் சஞ்ஜீவனி ஹப்புகொட, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல், சுமேத பெரேரா இலங்கை வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்களான கயாத்ரி குணருவன், டபிள்யூ கிரேசி மற்றும் சஞ்ஜீவ குணவர்தன நேச்சர் சீக்கிரட் நிறுவனத்தின் தலைவர் சமந்த குமாரசிங்க ஆகியோர் செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.  

Comments