ஊழ் வினை | தினகரன் வாரமஞ்சரி

ஊழ் வினை

கோவணத்துல காசிருந்தா, கோழி கூப்பிட பாட்டு வருமாம்" அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி சொல்லும் ஒரு பழமொழி. இப்பொழுதும் கூட, தோட்டங்களில் சம்பளம் கொடுக்கப்படும் நாட்களிலும் மற்றும் பெருநாள் முற்பணம், மாத முற்பணம் கொடுபடும் நாட்களிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், சத்தமும் சந்தடியும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். சிலருக்குச் சட்டைப் பைகளில் பணநோட்டுக்களை வைத்தாலே போதும் அவர்களது பேச்சு நடையுடை பாவனைகள் எல்லாமே மாறிவிடும்.  

அன்றும் சம்பளம், கொடுத்த மறுநாள், மேட்டு லயத்தில் ஒரே சத்தமாக இருந்தது. எனது அடுத்தவீட்டு ராமையாவைக் கூப்பிட்டு “என்னப்பா மேட்டுலயத்துல ஒரே சத்தமாக இருக்கு, என்னா வெசயம்?” என்று கேட்டேன்.  

“அண்ணே, நம்ம சோமுவோட சத்தம்தானண்ணே பலமா கேக்குது, அவன் குடிச்சிட்டு வந்தான்னா தெரியாதா? ஏதாவது பிரச்சினை பண்ணி யாரோடயாவது வம்பிழுப்பான்தானே.” ராமையா எனக்கு விபரத்தோடு பதில் கூறி முடித்த சிறிது நேரத்தில் சோமுவோட அப்பா, முத்து பெரியவர் ஓடிவந்து எனது குசினி கதவைச் சட்டென திறந்துகொண்டு உள் நுழைந்து; கதவு மூலையில் ஒளிந்துகொண்டு, ‘யப்பா என் மவன் சோமுபய என்னைத் தேடிவந்து கேட்டான்னா, நான் இங்க இல்லன்னு சொல்லிடுப்பா” என்று வெல வெலத்த குரலில் கூறினார். எனக்குப் பெரியவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.  

“சரிங்க பெரியவரே அப்படியே இருங்க” என்று கூறிவிட்டு, நான் வெளியில் வந்தேன்.  

அப்பொழுது, பெரியவரின் கைத்தடியை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றபடி. “அண்ணே, எங்கப்பன் இந்தப்பக்கம் ஓடியாந்தாண்ணே, கண்டீங்களா? ஆவேசம் வந்தவன்போல் பதறியடி என்னிடம் கேட்டான் சோமு.  

“இங்க வரலப்பா” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் கீழ்ப்பக்கத்து லயங்களை நோக்கி வேகமாக ஓடினான் சோமு.  

முத்து பெரியவருக்கு இரண்டு மகன்மகள். மூத்தவன் ராமு நல்லவன். இளையவன் சோமுதான் தறுதலை. எப்படியோ இளவயதிலேயே தாயை இழந்த, ராமுவையும், சோமுவையும் முத்து பெரியவர்தான் வளர்த்தார்.  

இரண்டு பையன்களுமே பள்ளிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. முத்து பெரியவருக்கோ மூன்று பேருக்காக உழைப்பதிலேயே முழு நேரமும் செலவானது. மூத்தவன் ராமு பதினான்கு வயதிலேயே தோட்டத்தில் பெயர் பதிந்து வேலைக்குப் போய்விட்டான். சின்னவன் சோமு, கூட்டாளி பையன்களுடன் சேர்ந்து பக்கத்து டவுனுக்கு வேலைதேடி போனான். அங்கும் உருப்படியான தொழிலும் கிடைக்கவில்லை; ஊதியமும் கிடைக்கவில்லை. அதனால், வேலைக்குப் போன வேகத்திலேயே தோட்டத்துக்குத் திரும்பி வந்தான். ராமு, தனது நற்குணத்தால் தோட்டத்தில் யாரிடத்திலும் நல்ல பெயர் வாங்கினான். இது விபரமறிந்த, தோட்ட பெரிய டீமேக்கர் (தொழிற்சாலை உத்தியோகத்தர்) ஐயா பசுபதி, ராமுவைத் தொழிற்சாலையில், வேலைக்கு எடுத்துப் போட்டுக் கொண்டார்.  

நாளடைவில் பசுபதி ஐயாவின் நம்பிக்கைக்குரிய ஆளானான் ராமு. ராமுவின் வயதொத்த அவனோடு தொழிற்சாலையில் வேலை செய்த மீனாவை எளிமையான முறையில் திருமணமும் செய்து வைத்தார் பசுபதி டீமேக்கர் ஐயா. ராமுவினதும் மீனாவினதும் குடும்பத்தார் இருவருக்கும் மகா சந்தோஷம். ராமு, தனிக்குடித்தனம் போய் இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகி நிம்மதியாக இருக்கிறான்.  

சோமுவும் ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து; ஒரு குழந்தைக்குத் தகப்பனாகியும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, குடிப்பழக்கத்துக்கு ஆளாகி கெட்டுச் சீரழிந்தான். அதனால், குடும்பத்திலும் சதா சண்டை சச்சரவுகள்தான்.  

சோமுவின் மனைவியோ உத்தமி. தன் கணவனைத் திருத்தி ஒரு வழிக்குக் கொண்டுவர அவள் எடுத்த எல்லா முயற்சிகளும் வீணாகிப்போக, தனது ஒருவயது பெண் குழந்தையைத் தன் தாய்வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தவள், ஏற்கனவே எடுத்து மறைத்து வைத்திருந்த விஷ மருந்தைக் குடித்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.  

அதன்பிறகு முத்து பெரியவர்தான், அடுப்படி சமையல் வேலைகளையெல்லாம் கூடச் செய்து சோமுவுக்கு சமைத்துப்போட்டுக்கொண்டிருந்தார். அவரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை இந்தச் சோமு.  

பாவம் முத்து பெரியவர். சோமு பெரியவரைப் பற்றி, என்னிடம் விசாரித்துவிட்டு கீழ்பக்கமாக போன சிறிது நேரத்தில், வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தார் பெரியவர். அவரது முகத்தின் இடப்பக்க கன்னம் வீங்கி கன்னிப் போயிருந்தது. தலையைக் காட்டினார். கொட்டைப் பாக்களவில் மூன்று புடைப்புகள் இருந்தன.  

சட்டை போடாத அவர் உடம்பிலும், கைத்தடியால் அடித்திருந்த தடிப்புகள் தெரிந்தன. பெற்ற தகப்பனை இந்த அடி அடித்திருக்கிறானே படுபாவி என்று என் மனம் சோமுவைக் கருவியது. ‘என்னங்க பெரியவரே என்ன நடந்தது? ஏன் அவன் ஒங்கள அடிச்சான்?” நான் கேட்டதற்குப் பெரியவரால் பதில் சொல்ல முடியவில்லை, விம்மினார். அவரது விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. பிறகு “இல்லப்பா அவன் வாங்கியாந்த ‘பாண்ல ஒரு துண்ட நான் பசி தாங்க முடியாம வெட்டிச் சாப்பிட்டுட்டேன். அதுதான்பா குடிச்சிட்டு வந்ததும் என்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறான்” என்றார் தழு, தழுத்த குரலில். அதைக் கேட்ட எனக்கும் அழுகை வந்தது.  

‘சரிங்க பெரியவரே நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க’ என்று பெரியவரை அமரச் செய்து விட்டுக் கீழ்பக்கத்து லயங்களை நோக்கி ஓடிய சோமுவைப் பார்க்க நான் மெல்ல வீட்டு வாசலுக்கு வந்தேன். அப்பொழுதுதான் தொழிற்சாலை பக்கமிருந்து நான் இருந்த இடத்துக்கு வந்துசேர்ந்தான் என் நண்பன் நல்லநாதன்.  

“ஏம்பா, நல்லநாதா?” என்று நான் பேச்சை ஆரம்பிக்கும் முன்னேயே சற்று பதற்றத்துடன் நடந்தவைகளைக் கூறத் தொடங்கினான் நல்ல நாதன். “ஆமாப்பா, கீழ் லயத்துப்பக்கம் சோமு ஓடுனானில்ல, அப்போ பீலியடியில் கால் வழுக்கி பின்புறமாக விழுந்திருக்கிறான். பிடரிக்கு மேல் புறமாக தலையில் அடிபட்டுப் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்திருக்கிறான். பக்கத்து லயத்துல பார்த்துக் கொண்டிருந்த பொடியன்மாருங்கதான் தோட்ட லொறிக்குச் சொல்லி பெரியாஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்திருக்காங்க.” என்று நல்லநாதன் கூறியவற்றை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோதே, தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து பகல் சாப்பாட்டு வந்து கொண்டிருந்த உமா, அதெல்லாம் முடிஞ்சுபோச்சண்ணே! ஆஸ்பத்திரியில் இருந்து என் தம்பி இப்பத்தான் போன்ல சொன்னான்ணே! என்று சற்றுப் பலமாகவே கூறினாள்.  

அடடா, இந்த சின்ன வயதிலேயே, சோமுவுக்கு இப்படி ஒரு முடிவா” என்று சிந்தித்த படிநான் பெரியவரைக் காண வீட்டுக்குள் நுழையுமுன்பே, ‘கோவெனக் குளறிப் பலமாக அழுதுவிட்டார் பெரியவர். ஆயிரம் தான் இருந்தாலும் பெற்ற பாசம் விடுமா. சோமுவின் மரணச் செய்தி தோட்டம் முழுதும் பரவிவிட்டது. பாதிப்பேர் பரிதாபப்பட்டனர். பலர் ‘அவன்மாதிரி ஆளெல்லாம், செத்திடணும்டா. இருந்தால் என்னதான் பிரயோசனம்’ என்று பேசிக்கொண்டனர்.  

அண்ணன், ராமு அழுதான், ஆத்திரப்பட்டான். வேறு என்ன செய்ய? டீமேக்கர் ஐயாவும், கைகொடுத்தார். ராமுவும் புத்திசாலித் தனமாக வங்கியில் சேர்த்து வைத்திருந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து தம்பி சோமுவின் மரணச் சடங்கை மறுநாள் தோட்ட சம்பிரதாய முறைப்படி எல்லாம் செய்து பொதுமக்கள் ஆதரவுடன் அடக்கம் செய்தான் ராமு.  

சோமுவின் அடக்கம் முடிந்து குளித்துவிட்டு ராமுவின் வீட்டுக்குள், சாங்கியப்படி, வாசலில் குறுக்கே போட்டியிருந்த உலக்கையை தாண்டியபடி நுழைந்த முத்து பெரியவர், விக்கி, விக்கி, துண்டால்வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.  

அந்தக் காட்சியைப் பார்த்துகொண்டிருந்தவர்களும் கண்கலங்கினர். தன் தம்பி சோமுவின் வீட்டைப் பூட்டி எடுத்து வந்து சாவியைத் தன் மனைவியிடம் கொடுத்தான்; ராமு. இரவானபோது முத்து பெரியவரின் சில உறவுக்காரர்கள் ‘துக்கச்சோறு’ சமைத்து வந்து முத்து பெரியவரின் குடும்பத்தார் எல்லோரையும் இலைபோட்டு அமரச்செய்து பரிமாறினார்கள். ராமுவின் பிள்ளைகள் இருவரும் முத்து பெரியவரின் மடியில் மெல்ல, மெல்ல அமர்ந்து விளையாடத் தொடங்கினார்கள். சோமுவின் குழந்தையை அவன், மனைவியின் குடும்பத்தார், கூட்டி வரவில்லை. அதை நினைத்துப் பெரியவர் ஏதேதோ முணுமுணுத்தார். நான் அதை உற்றுக்கவனித்தேன். ஆனால், எதுவும் என் காதுகளில் விழவில்லை.    

இரத்தினபுரி அமலதாஸ்

Comments