ஐ.தே.க: அடுத்தது என்ன? | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.க: அடுத்தது என்ன?

இலங்கை அரசியலில் 70 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நின்ற ஐக்கிய தேசிய கட்சி, அண்மைக்காலமாக மக்கள் மத்தியிலிருந்து பின்தள்ளப்படக்கூடிய அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பலம் வாய்ந்த கட்சியாகக் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்து கட்சி பல கூறுகளாக துண்டாடப்படக்கூடிய அச்சுறுத்தலை காணக்கூடியதாக உள்ளது.  

கட்சிக்குள் பேசப்பட வேண்டிய சமாச்சாரங்கள் நடுவீதிக்கு வந்து சந்திக்குச் சந்தி விமர்சிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டது. கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை பொதுவேட்பாளராக ஏற்றுக் கொள்ள முற்பட்டமை கட்சியின் கீழ் மட்டங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.  

அதன் பிரதிபலனாக அன்று கட்சியின் செயலாளராக பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்க தனது பதவியை இராஜினாமாச் செய்து வெளியேறி அன்றைய ஆளும்தரப்பில் இணைந்து கொண்டார். அதுமட்டுமன்றி கட்சிக்குள் பலர் தலைமைத்துவத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்கத் தொடங்கினர். இதன் காரணமாக கட்சி ரணில் அணி, சஜித் அணி என இரண்டாகப் பிளவுப்பட்டு பலவீனமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பல கட்டங்களில் சமரச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எட்டாக்கனியாகவே ஏமாற்ற மடைந்தன.   

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன, அகிலவிராஜ் காரியவசம், ஆசுமாரசிங்க, நவீன் திசாநாயக்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, பாலித்தரங்கே பண்டார, காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட மூத்தவர் அணி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதிலேயே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.  

அதே சமயம் அஜித் பி. பெரேரா, ஹரீன் பெர்னாண்டோ, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார, சந்திராணி பண்டார, மலிக் சமர விக்கிரம ஆகியோருடன் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரோசி சேனாநாயக்க, சரத் பென்சேகா, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பலபங்காளிக் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்வின் கட்சித் தலைமைத்துவத்திலிருந்து விலகி சஜித்பிரேமதாஸவுக்கு வழிவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.  

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் கூட்டப்படாமல் பிற்போடப்பட்டு வந்த கட்சியின் செயற்குழுவை கடந்த வியாழக்கிழமை கூட்டிய ரணில் விக்கிரமசிங்க சஜித் அணியை சேர்ந்த 33 உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் சில தீர்மானங்களை எடுத்தது. அதில் தலைமைத்துவம் தொடர்ந்தும் ரணில் வசமே இருக்குமெனவும் பிரதித்தலைவர் பதவியுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமை, பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பதவி என்பவை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.  

சஜித் அணியின் தலைமைத்துவ எதிர்பார்ப்பு அங்கும் புஸ்வாணமாகிவிட்ட நிலையில், செயற்குழுவின் முடிவை ஏற்றாக வேண்டிய நிலைக்கு சஜித் அணி தள்ளப்பட்டுள்ளது. சஜித் தரப்பைச் சேர்ந்த கடும்போக்குடைய சிலர் தமது நிலைப்பாட்டை தளர்த்தவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர். இதற்குப் பிரதான காரணம் செயற்குழுக் கூட்டத்துக்கு முந்தைய நாள், புதன்கிழமை ரணில் விக்கிரம சிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது ஏற்பட்ட இணக்கப்பாடேயாகும். சபாநாயகர் கருஜயசூரியவின் ஆலோசனைக்கமையவே ரணில் – சஜித் சந்திப்பு இடம்பெற்றது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறாமல் நடந்து கொள்ளுமாறு சஜித் அறிவுறுத்தப்பட்ட நிலையிலேயே சஜித் இணங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கட்சி யாப்புக்கு முரணாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதெனவும் ரணில் விக்கிரமசிங்க சுயவிருப்பப்படி தலைமைத்துவத்திலிருந்து விலகினாலன்றி 2024 வரை அவரை அப்பதவியிலிருந்து நீக்க முடியாது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் மத்திய செயற்குழு கூடி தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆராய்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றும் பட்சத்தில் விஷேட மாநாட்டை கூட்டியே புதிய தலைவரொருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இதேவேளை சஜித் தரப்பு அணியினர் கட்சியின் யாப்பு சர்வாதிகாரப்போக்குடையதாகக் காணப்படுவதாக கடுமையாக சாடியுள்ளதோடு யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

அஜித்.பி பெரேரா, ரோசி சேனாநாயக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோரை தலைமைத்துவம் தன்னிச்சையாக செயற்குழுவிலிருந்து நீக்கியமை சர்வாதிகாரத்தன்மை கொண்டது எனவும் சஜித் அணி சுட்டிக்காட்டியுள்ளது.  

ஐ.தே.கவின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட இன்று ரணிலிடமிருந்து ஒதுங்கி சஜித்துடன் கைகோர்த்துச் செயற்பட முன்வந்துள்ளனர். ஆனாலும் சிலர் இந்த விடயத்தில் அவசரம் காட்டாமல் பொறுத்திருந்து செயற்படுவது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் பிடிவாதப் போக்கை பங்காளிக்கட்சிகள் விரும்பவில்லை. இதனை அவர்கள் ரணிலிடம் நேரிடையாகவும் பலதடவைகள் கூறியுள்ளார்.  

ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க தலைவராக இருக்கும் வரை அக்கட்சியால் வெற்றியீட்ட முடியாது என்ற மனப்போக்கு இன்று பரவலாக பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில்தான் சஜித் பிரேமதாஸவிடம் தேர்தலுக்கான முழுப்பொறுப்பும் கையளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை ரணில் விக்கிரமசிங்க ஒதுங்கி இருப்பதற்கும் தீர்மானித்துள்ளார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய தலைமைத்துவத்திடம் கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியலிலிருந்து ஒதுங்கும் முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

ஆனால், கட்சித்தலைமைத்துவத்தை சஜித்திடம் ஒப்படைப்பதை ரணில் தரப்பு விரும்பவில்லை. காரணம் அதற்குரிய ஆளுமை சஜித்திடம் காணப்படவில்லை என்பதை ரணில் தரப்பு விளக்கிக் கூறியுள்ளது.  

சிலவேளை தலைமைப்பொறுப்பை குறுகிய காலத்துக்கு சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஒப்படைத்து நிலைமை சீரானதன் பின்னர் இளம் தலைமைத்துவமொன்றிடம் கட்சியை ஒப்படைக்கும் ஒரு உள்மன எண்ணம் ரணிலிடம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்த இளம் தலைமை நவீன் திசாநாயக்கவாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.  

இவற்றை வைத்துப்பார்க்கின்றபோது ஐ.தே.கவுக்குள் காணப்படும் பூசல் எதிர்காலத்தில் பூதாகரமான வெடிக்கும் நிலையே காணப்படுகின்றது. பொதுத் தேர்தலில் சஜித் அணி வெற்றிபெறத் தவறினால் தற்போதைய நிலைமை வேறுவிதமாக மாற்றம் காணலாம். இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாகலாம். பலம் வாய்ந்த, சக்தி மிக்க கட்சி பலமிழந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கரைந்து போகும் நிலை கூட ஏற்படலாம் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.    

எம்.ஏ.எம். நிலாம்

Comments